Wednesday, October 12, 2016

ஏழாவது சொர்க்கம் - 4

விமானம் தரையிறங்குவதாக அறிவிப்பு செய்தவுடன் அதற்கான முஸ்தீபுகள் ஆரம்பமாகின. பல நாட்களாக வீசிய ஓயாத புயலுக்குப்பின் தரையைக் கண்ட மாலுமியின் மனநிறைவு ஏற்பட்டது. இது அவனது கடைசி நடவடிக்கைக்கான நேரம். பெரியமாமன் சொல்லியிருந்தான். டிரான்ஸ்சிட்டிலிருந்து விமானம் பறக்கத் தொடங்கிய ஆறுமணித்தியாலங்களின் பின்னர்இ லாண்டட் பேப்பரைத் தவிர எல்லாவற்றையும் கிழித்தெறிந்துவிடு என்று. இப்போது விமானம் பறக்கத்தொடங்கி எட்டுமணித்தியாலமாகி விட்டது. எல்லாம் ஞாபகத்தில் இருந்தும் விதம்விதமான பியர் பிரண்டி வகைகள் சற்று மனதை மயக்கி விட்டன. பேப்பரை ஒழித்து வைக்கவேண்டிய டிரவுசர் பாண்ட் இடுப்புப்பக்கத்தை பிளேடினால் ஏற்கனவே கிழித்துத் தந்திருந்தான் பெரியமாமன். லாண்டட் பேப்பரை மடித்து டிரவுசர் பாண்டிற்குள் செருகி பெல்ட்டை இறுக்கிக் கொண்டு பாஸ்போர்ட் அடையாளஅட்டைகள் கிரடிற்காட்டுகள் எல்லாவற்றையும் கிழித்து பாத்ரூமுக்குள் இருந்த குப்பைத்தொட்டிக்குள் போட்டுவிட்டு வெளியே வந்து சீட்டில் இருந்தான். சீட்பெல்ட்டைப் பூட்டச் சொல்லி லைற் எரிந்தது. பயணிகள் ஒவ்வொருவரையும் கவனித்துச் சென்றார்கள் பணிப்பெண்கள். விமானம் உயரத்தைக் குறைத்தது. வயிற்றுக்குள்ளிருந்து நெஞ்சுக்கு மேலெழும்பியது இனம்புரியாத உணர்வு.

ஏழாவது சொர்க்கத்தை அடைந்து கொண்டிருக்கிறான் ராஜா. சொர்க்கம் எப்படி இருக்கும் என்று மூன்றுமாதமாக மெட்ராசில் பெரியமாமனுடன் ஆட்டோவில் திரியும் போது சொர்க்கபுரியில் தனது செளகரிய வாழ்வைச் சொல்லிச் சொல்லியே கனவுகளைக் கட்டி எழுப்பி விட்டான் பெரியமாமன். செங்கம்பளம் விரித்து இருபத்தியொரு மரியாதை வெடிபோட்டுஇ ஏழாவது சொ¡க்கத்தின் வாசல் திறக்க இன்னும் பதினைந்து நிமிடம் இருக்கின்றபோதும் ஆவலைக் கட்டுப் படுத்த முடியாமல் விமான ஐன்னலால் எட்டிப் பார்த்தான். பரந்த வெள்ளை நிலத்தில்இ இலைகளற்று விரல்விரித்த மரங்களடர்ந்தஇ வனாந்தரப் பகுதிக்குள் விமானம் தலைசாய்த்து இறங்கிக் கொண்டிருந்தது. சடுதியாக மனத்தில்இ தான் பாஸ்போட்டைக் கிழித்தது தப்பாகிவிட்டதோ என்ற பயம் வந்துவிட்டது. சீட்டில் நிலை கொள்ளாது மனம் தவித்தது. பம்பாயிலிருந்து கிளம்பிய நேரத்திலிருந்து தற்சமயம் வரை கணக்குப் போட்டுப் பார்த்தான். பெரியமாமன் குறிப்பிட்ட காலஅளவு மிகச் சரியாக பொருந்தி வருகிறது. அப்போ இழவு விழுந்த பிளேன் எங்கே இறங்குகிறது?

அவனது தயக்கத்தை எல்லாம் அள்ளிக்கூட்டிக் கொண்டு, விமானம் மொன்றியல் மிராபெல் நிலையத்தில் இறங்கியது. மீண்டுமொரு முறை சொல்லவேண்டிய பொய்யை எல்லாம் மீளப் பார்த்துக் கொண்டுஇ இமிக்கிரேசன் வரிசையில் நின்றான். அவன் நின்ற வரிசை வேகமாகக் குறுகுவதை தெரிந்து அடுத்து நீளமாக நின்ற வரிசையில் மாறி நின்றபோது, வெள்ளைச்சேட் அணிந்துஇ கப்பல் கப்டன் மாதிரி தொப்பி போட்ட அதிகாரி அருகே வந்தான். அதிகாரி அவனை நெருங்கவும், "ஜயாம் றெபூஐ¢" என்று,  பெரியமாமன் சொல்லித் தந்ததை கிளிப்பிள்ளை மாதிரி ஒப்புவித்தான். அதன்பின் காரியங்கள் ஒழுங்காக நடந்தன. அவனை ஒரு அறைக்குள் கூட்டி வந்து இருக்கவிட்டனர். அங்கு ஏற்கனவே இரண்டு வெள்ளைத்தோல் ஆண்களும், வங்காளி இளைஞர் மூவரும், கூடவே ஒரு வங்காளிப் பெண்ணும் இருந்தனர். எல்லோருடைய முகங்களிலும் அச்சமும்,  வெறுமையும் பூசியிருந்தது. இவனுக்கு இன்னும் போதை இறங்கவில்லை. கதிரையில் சாய்ந்து இருந்தபடி உறங்கிவிட்டான். ஏறத்தாழ மூன்று மணித்தியாலங்களின் பின்னர்தான்,  கைரேகைப் பதிவுகள், கைதிமாதிரி தேதி விபரப்பலகையை நெஞ்சுக்கு நேரே பிடித்தபடிக்கு எடுத்த போட்டோக்கள்இ விசாரணைகள்,  என்று எல்லாம் முடிந்து வெளியே வந்தான். விமானநிலையத்தின் வாசல் கடக்கவும் எங்கோ மறைவாக நின்றுவிட்டு அவனை நோக்கி வந்தான் சின்னமாமன்.

சின்னமாமன் கைகுலுக்கிக் கட்டித் தழுவினான். மாமனது பெரிய உடம்புக்குள் ஒரு கோழிக்குஞ்சைப் போல நெருங்கும் போது அன்பின் வாஞ்சை கண்ணீராக விழுந்தது.

"எங்களுக்கு நீ வந்து சேருவாய் எண்டு தெரியும். சின்னமாமி நீ வருவாய் எண்ட நம்பிக்கையில வடிவாச் சமைச்சு வேற வச்சிருக்கிறா"

கார் பாக்கிங்கு ஒவ்வொரு தளமாக லிப்டில் இறங்கி வரும்போது, பட்டிக்குள் அடைத்த செம்மறி ஆடுகள் படுத்திருப்பது போல, பல வடிவங்களில் ஒய்யாரமாக நின்ற கார்களைப் பார்க்க, ஏழாவது சொர்க்கத்தின் பிரமிப்பு இன்னும் கூடியது.

"நாளைக்கே உனக்கு கட்டில் வேண்டித் தாறன்." என்று தங்குமிடம் பற்றி அன்பாக சின்னமாமன் கூறியதைக் கேட்டு,  அவன் சந்தோசம் அடைந்தான். தமிழ்நாட்டில் எத்தனை நாள் பரதேசியாக அலைந்திருக்கிறான். நேற்று இருந்த வாழ்வை நினைக்க,   மிகவிரைவில் சினோவுக்குள்ள நின்று ஒரு போட்டோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்ப வேண்டுமென்ற ஆசை வந்துவிட்டது.

நிலம், வீடு மரம் எங்கும் படிந்திருந்த வெண்பனியைப் பார்த்தவாறு காரில் செல்லும்போது அவன் ஏழாவது சொர்க்கத்தின் கதவுகளைத் திறந்து விட்ட பெரியமாமனை நன்றியுடன் நினைத்துப் பார்த்தான். மாமனை நினைத்தபோதுதான் அவர் திரும்பத்திரும்ப சொல்லிவிட்டது ஞாபகத்தில் வந்தது. "போய்ச் சேர்ந்ததும் ராக்‘¢ பிடித்து நேரே வீட்டுக்குப் போ.! அங்கயிருந்து உன்ரை ரெலிபோன் வரும்வரைக்கும் எனக்கு நிம்மதி இருக்காது. மறக்காம உடன ரெலிபோன் பண்ணு. அடுத்தகிழமையே நான் வந்திடுவன். வந்து எல்லா இமிக்கிரேசன் வேலையையும் பாப்பன். சின்னமாமாவோடை திரிஞ்சு காரியத்தைக் கெடுத்துப் போடாதை. கேஸ் சரியாக் குடுக்காட்டா  திருப்பி அனுப்பிப் போடுவாங்கள்."

அவனது நிலை தர்மசங்கடமாகிவிட்டது. நேரே பெரியமாமியின் வீட்டுக்குப் போவதுதான் நியாயம். டிரான்சிஸ்டில் இருந்து சின்னமாமனுக்கு ரெலிபோன் பண்ணி எயாப்போட்டுக்கு வரச்சொல்லி அலைக்கழித்து விட்டு அவனது சொல்லையும் கேக்காமல் இருக்கமுடியாது.

"அதுசரி எவ்வளவு முடிஞ்சுது? நான்தான் முதல்லை உன்னைக் கூப்பிட வேணுமெண்டு வெளிக்கிட்டனான். உன்ரை மாமிக்கு இடையில சுவமில்லாமப் போச்சு. அண்ணர் கூப்பிட வந்த ஆள் ஏதோ காசுப்பிரச்சனையில சறுக்கிப் போச்சு. அதான் உன்னை அதிலை இழுத்திட்டார். இப்ப என்ன ஒருவரியத்திலை நீ உழைச்சுக் காசைக் குடுத்திட்டா கதை முடிஞ்சுது. உடன ஒரு வேலையில உன்னைக் கொண்டே கொழுவிப் போடவேணும்."

நு¡றுகிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓடிக்கொண்டு இன்னும் நிறையச் சொல்லிக் கொண்டே வந்தான் சின்னமாமன். கிட்டத்தட்ட ஜம்பது தடவை இந்தியாவிலிருந்து சின்னமாமனுக்கு அவன் ரெலிபோன் எடுத்திருப்பான். கலைக்கோல் எடுத்தால் அக்சப்ற் பண்ணுகிறான் இல்லையென்று நண்பர்களிடம் காசு தண்டிஇ மூன்று நிமிசத்திற்கு புக் பண்ணி பலதடவை எடுத்திருக்கிறான். அப்போதெல்லாம் சின்னமாமா நித்திரையில் இருப்பான். அல்லது வேலைக்குப் போயிருப்பான். வெறுமே மாமியிடம் சுகம் விசாரித்து விட்டு வைக்க வேண்டியிருக்கும். இப்போது அவனைக் கூப்பிட இந்தியா வெளிக்கிட்டதாகச் சொல்கிறான். இனிமேல் எதையும் பேசிப் பிரயோசனம் இல்லை.

"மாமா.. நீங்க ரண்டுபேரும் பக்கத்தில பக்கத்திலதானே இருக்கிறியள்..?"

"ஆரு. உன்ரை பெரியமாமியோடயோ..? அந்தக்கம்பிளிவயிரவரோட ஒரு மனிசன் இருக்கலாமே. போகப்போக உனக்குத் தெரியும்."

"இல்ல... பெரியமாமா தன்ரை வீட்ட போகச் சொன்னவர். முதல்ல அங்க போய்ச் சொல்லீட்டு,  பிறகு உங்கட வீட்டுக்குப் போவம்."

"உனக்கென்ன விசரே.. அதெல்லாம் அண்ணர் வந்தோண்ண போகலாம். உன்னைப் பாக்கோணுமெண்டு சின்னமாமி அங்க காவல் இருக்குது."

இதற்குப் பிறகும் பிடிவாதம் பிடிப்பது சரியல்ல என்பதால் வேறு விசயத்திற்கு கதையை மாற்றினான்.

"வரியம் முழுக்க இந்தச் சினோ இப்பிடிக் கிடந்தா புல்லுப் பூண்டே முளைக்காது. பிறகு வெள்ளாமை எப்பிடிச் செய்யிறது?"

காலநிலை பற்றிய மாற்றங்களுக்கும் சின்னமாமனுக்கும் பாதிப்பு இல்லைப் போல இருக்கிறது. நெத்திச்சுழி நாம்பனை மேச்சலுக்கு சின்னமாமன் இழுத்துக்கொண்டு போக, அவனுக்குப் பின்னால கழிசானை வரிஞ்சு கட்டிக் கொண்டு ஓடிய ஞாபகங்களை புரட்டிக் கொண்டிருக்க, பனையடிவளவில் பிறந்தவன் என்ற நினைவே அற்றவனாக சின்னமாமன் மறுமொழி சொன்னான்.

"நாங்கள் இஞ்ச மூண்டு விசயத்தை நம்பிறேல்லை. வெதர் வேலை பெம்பிளையள். நீ இதுக்கேத்தமாதிரி வாழப் பழகோணும்."

சின்னமாமன் வாழப்பழகிக் கொண்டானா? அல்லது இங்கேயே பிறந்தானோ என்ற ஜமிச்சம் அவனுக்கு வந்துவிட்டது. சின்னமாமன் காரை பார்க் பண்ணும் யத்தனத்தில் இருந்தான். வெண்பனி குவிந்திருந்த வீதிக்கரையில்இ கார் மாமனது சொல்லுக்கு கீழ்படியாமல் வழுக்கிக் கொண்டிருந்தது.

சின்னமாமாவின் வீட்டிலிருந்து பெரியமாமிக்கு ரெலிபோன் எடுத்தபோது மாமியின் சுருக்கமான பதில்கள் வழவழா விசாரிப்புகளிலிருந்தே தன் தப்பான தரையிறக்கத்தைப் புரிந்து கொண்டான். இந்தியாவிலிருந்து எடுத்த கலைக்கோல்களுக்கு சம்மதம் தெரிவிக்காத சின்னமாமன் தாராள மனதுடன் இங்கிருந்து இந்தியாவுக்கு ரெலிபோன் எடுத்து வந்த சேர்ந்த விபரம் சொல்ல ரெலிபோனைப் பாவிக்கவிட்டான். ஏக தடல்புடலான வரவேற்பு சின்னமாமியிடமிருந்து கிடைத்தது. இன்னும் கொஞ்சம் நெருங்க விட்டால் கதிரையில் ஏறிநின்றாவது கட்டிப்பிடித்து நெற்றியில் முத்தம் கொஞ்சி விடுவாளோ என்ற மாதிரிக்கு அன்பு சொரிந்தாள்.

அவனது முதல் பார்வைக்கே பிரமிப்பு ஊட்டியது வரவேற்பறையில் இருந்த ரேப்செற். இதைவிட உருவம் சிறுத்த பொக்சுகளும் அம்பிளிபயரும் வைத்துத்தான்  ஸ்பீக்கர் ஆனந்தன் கல்யாணவீடுஇ கோவில்களுக்குப் பாட்டுப் போட்டு பெரிய கல்வீடு கட்டினான். ஆயுபோவன் ரூபவாகினி ஒன்றுகூட இல்லாத கிராமத்தின் கொட்டில் வீட்டுக்குள் வளர்ந்த சின்னமாமனிடம் ஜம்பத்தியிரண்டு சனல்கள் பார்க்கக்கூடிய கலர்ரெலிவிசன் இருந்தது. சுவரை மறைத்து நிப்பாட்டியிருந்த பிரமாண்டமான அலமாரிக்குள் வெள்ளித்தட்டு, வெள்ளிடம்ளர்கள்இ குத்துவிளக்கு,  சின்ன நிறைகுடம்இ கலைவேலைப்பாடு செய்த கண்ணாடிக் கிளாஸ்கள் என இன்னும் பல சாமான்கள் நிறைந்திருந்தன.

சமையலறையிலிருந்து ஒவ்வொரு முறையும் ஹோலுக்கு வந்து,  அலமாரிக்குள் சாப்பாட்டுத் தட்டங்கள் எடுக்க வேண்டியிருப்பதால் போலும் சின்னமாமி,  அலங்காரம் செய்த நிலையிலேயே வீட்டிலும் நின்றார். சந்தோசக்குடி ஒன்றுக்கு மாமன் ஆலாபனை எடுத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. தன் நண்பர்களுக்கு ரெலிபோன் பண்ணி,  மருமகன் வந்த வி‘யம் தெரிவித்து வீட்டுக்கு அழைத்துக் கொண்டிருந்தான். "நிக்கிறாரோ..! இறங்கிட்டாரோ..!!" என்ற சொற்பிரயோகம் தமிழாக இருந்தாலும் உண்மையில் அவனுக்கு விளங்கவில்லை. எங்கேயிருந்து எல்லோரும் இறங்கி வருகிறார்கள் என்று அறிந்து கொள்ள அவனுக்கு இரண்டு நாட்களாகின.

மாமனது நண்பர்களின் குடிமுறையில் ஒரு நாசூக்கும்,  நளினமும் இருந்தது. செம்மஞ்சள் தண்ணியை எந்தவித முகச்சேட்டையும் இல்லாமல் உள்ளே வார்த்தார்கள். மிக்சரைக்கூட கரண்டியால் எடுத்து கையில் கொட்டி பின்னர்தான் வாயில் எறிந்தார்கள். இந்தியாவில் வெறும் பச்சைத்தண்ணிபோல இருக்கும் பட்டைச்சாராயத்தைக் குடிக்க எவ்வளவு உபகரணங்கள் தேவை. ஊறுகாய் மிக்சர் ஆம்லெட் என்று பகுதிக்கருவிகள் இல்லாமல் அதை உள்ளே அனுப்புவது பிரம்மயத்தனம்.

நடைமுறை உலகின் கிளித்தட்டு வாழ்க்கையில் தாம் சேகரித்து வைத்திருந்த அனுபவ ஞானங்களை மாமனது நண்பர்கள் ராஜாவுக்கு அள்ளித் தெளித்தார்கள்.

பின்னர் எதிரிப்டைகளை வென்று வந்து பாசறையில் அலுப்புத்தீர மதுவருந்திவிட்டு தாங்கள் விழுத்திய தலைகளும் நடத்திய யுக்திகளும் பற்றி கதைபேசும் போர்வீரர்களைப்போல மாமனது நண்பர்கள் இத்தாலி பிரான்ஸ், ஜேர்மனி என்று தாம் வென்று வந்த நாடுகளில் நடத்திய வீரப்பிரதாபங்களை சொல்லத் தொடங்க அவனுக்கு நேரமாற்றம் காரணமாக நித்திரை து¡க்கி அடித்தது.

சின்னமாமி மாபெரும் தியாகமொன்று செய்தாள். அவனை அவர்களது படுக்கையில் படுக்கச் சொல்லி கட்டாயப்படுத்தி படுக்கவிட்டாள். அது ராஐகட்டில்! படுத்ததும் உடம்பை அணைத்துக்கொள்ளும் அருமையான கட்டில். முதலில் வேற்றுக்கட்டிலில் படுத்த கூச்சம் இருந்தாலும், அலுப்பும்,  நித்திரையும் எல்லாவற்றையும் துரத்தி அடித்துவிட்டன.

அடுத்த கிழமையே பெரிய மாமன் வந்து சேர்ந்தது சற்று நிம்மதியாக இருந்தது. இமிக்கிரேசன் அலுவல்கள் எல்லாவற்றையும் அவனே முன்னின்று செய்தான். கேஸ் எழுதும் இராமதாஸ் இழுத்த இழுப்புக்கும் அடித்த பெருமைக்கும் சிறிதும் குறையாமல் பெரியமாமனும் வளைந்து கொடுத்து காரியம் ஆக்கினான். வெல்·பெயர் பதிவதற்கு மட்டும் சில சிக்கல்கள் வந்தன. பெரியமாமன் குடும்பமாக வெல்·பெயர் எடுப்பதால்இ அவனது முகவரியை மாமனுடன் பதியமுடியவில்லை. அவர்களுடன் சேர்த்துப் பதிந்தால் பெரியமாமனது வெல்·பெயர் பணத்தில் நு¡று டொலர் வெட்டி விடுவார்கள். சின்னமாமனுக்கும் இதே நிலைமைதான் என்றாலும் அவன் தன்னுடன் பதிய மனமுவந்து சம்மதித்தான்.

பெரியமாமி தன் தம்பியாரை தன்னுடன் வைத்திருப்பதால் தங்குமிடமும் சின்னமாமனுடன் என்றாகிவிட்டது. ஹோலில் விரித்திருந்த வண்ணக்கார்ப்பெட்டின் மீது ஒரு பெட்சீட்டை விரித்து முடங்கிக் கொண்டாலும் அவன் மனச் சாந்தியடைந்தான். கனவுகளை அறுத்துக் கொண்டு காலைகள் வந்தன.

அலுக்காமல் சலிக்காமல் ஒருவாரமாக ஊர்க்காரர், உறவுகாரர் தங்கள் வீடுகளுக்குக் கூப்பிட்டு, சாப்பாடு தந்தனர். சிலபேர் காரில் வந்து ஏற்றிக்கொண்டு போய் சாப்பாடு தந்துஇ காரிலேயே கொண்டுவந்து விட்டிட்டும் போனார்கள். என்ன, தமது கார் மற்றவனது காரைவிட இன்னின்ன வி‘யங்களில் உசத்தி. இவ்வளவு டொலர்ஸ் கொடுத்து இறக்கியிருக்கிறேன். அவன்ரை நுஓஇ இது டுஓ என்பன போன்ற சம்பா‘ணைகளைத் தாங்கவேண்டியிருக்கும். இதைவிட ஓரடி மேலே போய் சிலபேர்இ சம்பா‘ணைக்குள் வலிந்து இழுத்து நுழைத்துக்கொண்ட,  ஆங்கில, பிரெஞ்சு வார்த்தைகளைப் பாவித்துக் கொண்டார்கள். பாங்கில் காசு அடித்தார்கள். வீட்டில் பீசாவுக்கு அடித்தார்கள். சினோவில் சறுக்கி விழுந்துவிட்டு சவா என்றார்கள். நாலுபக்கமும் கண்ணாடி பூட்டிய காருக்குள் இருந்து கொண்டு, முன்னுக்குப் போகும் கார்க்காரனை ஆங்கில து¡சணத்தால் பேசிக்கொண்டு, தங்கள் நடுவிரலை உயர்த்தி வானத்தை ஓட்டையாக்கினார்கள்.

இப்படி மற்றவர்களின் கலாச்சார உயர்வைப் பார்க்கையில்இ சின்னமாமன் தலைகீழான மாற்றத்தில் இருந்தான். காலைக்கும் மதியத்தும் இடையாக, பத்து பதினொருமணிக்கு, படுக்கையை விட்டு எழும்பினான் என்றால், குளிப்பு முடித்து அவனது பெரிய வயிற்றில் துவாயைச் சுற்றிக் கொண்டு, சின்னராக்கையைத் திறந்து, வரிசையில் வைத்திருக்கும் சர்வமத சாமிப் படங்களுக்கும் சாம்பிராணி கொழுத்தி வீடு முழுக்க சாம்பிராணிப்புகையின் சுகந்தத்தைப் பரவவிட்டு சாமி கும்பிட்டு, சாரம் மாத்திஇ அவன் செற்றியில் வந்து இருக்க, கையில் பால்தேத்தண்ணியுடன் சின்னமாமி வருவாள். அப்போது பகல் பன்னிரண்டு மணியாகி இருக்கும்.

அதன்பின், அடுத்தடுத்துக் குடிக்கும் சிகரெட்டின் மணம், சாம்பிராணியின் சுகந்தத்தை து¡க்கி வீசிவிடும். ரெலிபோனை எடுத்து ஒவ்வொரு நண்பர்களையும் பள்ளியெழுப்பிப் பேசத்தொடங்குவான். பேச்சு பெரும்பாலும் இப்படி இருக்கும்:-

"ஒராள் அஞ்சு கேட்டது நாலாவது குடுத்தால் பறவாயில்லை. ச்சீச்சீ... காசுக்கு நான் பொறுப்பு."

"ஓம்..ஓம்.. ரூட்டெல்லாம் இப்ப கிளியர். முதல் கொஞ்சக்காசு குடுக்கோணும். அதுக்குப் பயப்பிடாதை. அவன் தங்கமான பெடியன். ஏன்.. லோகன்ரை பெஞ்சாதியையும் அவன்தானே கொண்டந்தவன்."

"கறுப்போ..! அது இப்ப ஒருத்தரும் கேக்கிறேல்லை. பேப்பரும் புத்தமும் எண்டா நல்லாப் போகுது. தாவன் பாப்பம். ஆரும் கேட்டா குடுத்துத்தாறன். அதுசரி நான் கேட்ட வி‘யம் என்னமாதிரி..? ஒரு நாலாவது குடப்பா. மூண்டு மாசத்தில பிரட்டிக்கிரட்டி திருப்பித்தாறன். ஊருக்கு அவசரமா அனுப்போணும். மருமோள் ஒருத்திக்கு கலியாணம் சரிவந்திட்டுது. அதுக்குத்தான்"

ஊரில் இருந்து எந்தவிதமான கடிதத் தொடர்போ, ரெலிபோன் தொடர்போ, சின்னமாமன் வைத்திருப்பதாகத் தெரியவில்லை. இருந்தும் உறவுகளைச் சாட்டிஇ காசு பிரட்டினான். வட்டிக்குக் கொடுத்தான். மிகமுக்கியமாகஇ நாள்பூராக வேலைக்குப் போகும் சுவடே அற்றுஇ செற்றியில் கல்லுப்பிள்ளையார் மாதிரி வீற்றிருந்த மாமனைத் தேடிவந்த ரெலிபோனுக்குஇ மாமி வடிகட்டிப் பார்த்து பதிலளித்தாள். கடன்காரன் அல்லது தவிர்க்கவேண்டியவன் ரெலிபோனில் கூப்பிட்டால், மாமன் ரொரண்டோ போயிருப்பான். ஒட்டாவா போயிருப்பான். இப்பத்தான் இறங்கியிருப்பான். காசு கொடுக்கவேண்டிய ஆட்கள் ரெலிபோனில் கூப்பிட்டால், மாமியே சுகம் விசாரித்து விட்டுத்தான் மாமனுக்கு ரெலிபோனை மாற்றுவாள். பேச்சின் ஊடேஇ கண்கள்இ கைச்சைகைகள் மூலம் எதிராளி யாரென்ற விபரம் பரிமாறப்படும். விரலால் ரீல் சுற்றுவதுபோலக் காட்டினாள் என்றால், அது புளுகுமூட்டை பென்ஸ் ராஐனாக இருக்கும். பிள்ளைத்தாச்சி மாதிரி வண்டியைத் தடவினால், வட்டிக்கார அந்தோனிதாசன். தலையைத் தடவிக்காட்டினால், ஏஜென்சிக்கார கணேசலிங்கம். இப்படியாக, ஒரு அற்புதவாழ்வில் நாளை ஓட்டினான் சின்னமாமன்.

பெரியமாமனது வாழ்க்கையோ, வெள்ளைவேட்டி கட்டிய கண்ணியத் திருட்டு வாழ்க்கை. பெரியமாமன் வட்டிக்கெல்லாம் கொடுத்து, முப்பது முப்பதாக சேர்த்து, பெட்டியை நிறைப்பவன் அல்ல. மாறாக, விழுந்து விழுந்து பரோபகாரம் செய்வான். அவன் யாராவது ஒருவனுக்கு பத்தாயிரம் கடன் கொடுக்கிறான் என்றால், எண்ணி மூன்றுமாதங்களுக்குள் மேற்படிநபர் இருபதினாயிரம் டொலர்ஸ் மாமனிடம் இழந்துவிடுவார். ஆனால் அப்படி ஏமாற்றப்பட்டவன்கூட மாமனைக் குறை சொல்லமாட்டான். "அது என்ர தலைவிதி. இல்லாட்டா பாவம் அந்த மனுசன் தன்ரை கைக்காசையும் இழந்துபோகுமே..!." என்று அறிந்தவர் தெரிந்தவர்களிடம் நொம்பலம் சொல்லும்போதே, அவனையறியாமல் மாமனது புகழ் பாடி முடிப்பான்.

ராஐ¡வுக்கு வீட்டிலிருந்து அலுத்துப்போயிற்று. மேற்படி நாடகத்தின் ஒவ்வொரு காட்சியும் திடீர்திடீரென மாறும்போது, வெளியே இறங்கி சிகரெட் குடித்து ஆசவாசமடைந்த ஒரு வாரத்திற்குள்ளும், கைக்காசு செலவழிந்து சிகரெட்டிற்கும் வழியில்லாமல் போய்விட்டது. நடைத்து¡ரத்தில் குடியிருந்த, ஒன்றிரண்டு நண்பர்களும் வேலை வேலை என்று ஓடித்திரிந்தார்கள். அவர்களுக்கும் வட்டி, சீட்டு என்ற தொந்தரவுகள் இருந்தன. பேசுவதற்கு ஒதுக்கும் நேரத்தை வேலையில் செலவழித்தால் இன்னொரு சீட்டுப் போடலாம் என்ற பொருளியல் வெறி பிடித்தாட்டியது.

கனடாவில் தரையிறங்கிய இருபத்தியொரு நாட்களில் மாதம் முடிந்தது. முதலாம்திகதி காலை எட்டுமணி போல பெரியமாமன் ரெலிபோன் பண்ணி வீட்டுக்கு வரச் சொன்னான். அவனும் ஏதோ கேஸ் விசயமாக இருக்கும் என, பைலைத் து¡க்கிக் கொண்டு விழுந்தடித்து ஓடிப்போக, பெரியமாமன் அவனைக் காரில் ஏற்றிக்கொண்டு ஜென்தலோன் மார்க்கெட்டுக்குப் போனான். செயிண்ட் லோரண்ட் இறைச்சிக்கடையில் அரைவாசி ஆடு வேண்ட, காசு குறைந்ததில் மிகவும் கவலைப்பட்டு விட்டு, இருந்த காசுக்கு அளவாக இறச்சி வேண்டிக்கொண்டு வீடு திரும்பும்போது, காருக்கு பெற்றோல் குறைந்து போவதைக் காட்டும் லைட் எரிந்ததை சுட்டிக்காட்டி, இவனுக்கு விளங்கப்படுத்தினான். அவனுக்கு பெரியமாமனின் நிலையை நினைக்கப் பாவமாக இருந்தது. மத்தியானம் சாப்பிடும்போது, வாடகைக்கு செக் கொடுக்க வேண்டு மென்பதை மாமனுக்கு ஞாபகப்படுத்தினாள் பெரியமாமி. அன்று பெரியமாமன் செற்றியில்கூட சரியாமல் தபால்காரனைப் பார்த்தபடி இருந்தான். நீலஉடுப்புக்காரர் அந்த வீதியைக் கடந்து போகவும், அவனும் மாமனுமாக, சின்னமாமனின் வீட்டுக்கு வந்தார்கள். பெரியமாமன் கீழ்வாசலில் நிற்க, அவன் மேலேபோய் சின்னமாமியிடம் தனது வெல்·பெயர் செக்கை வேண்டி வந்து, கையெழுத்துப் போட்டு மாமனிடம் கொடுத்தான். அன்றுபூராவும் சின்னமாமியின் முகம் கறுத்துக் கனத்துப் போய்க் கிடந்தது. அவன் வழமைபோல சிகரெட்டுக்காக நண்பர்களைத் தேடத்தொடங்கினான்.

- ஜெயரூபன் (மைக்கேல்)

- (தொடர்ச்சி)

Quelle - பதிவுகள் - செப்டெம்பர் 2001,  இதழ் 21

No comments: