Wednesday, October 12, 2016

ஏழாவது சொர்க்கம் - 1



சிறுநகரத்திலிருந்து விலகி மேற்காக இருபதுகிலோமீட்டர்கள் ஆளரவமற்ற சோளவயல்களைக் கடந்து முன்னேற பூமியைப் புடைத்துக் கிளம்பிய வெண்வண்ணக் கொப்புளம் போல விஸ்தீரணம் பரப்பித் தெரிகிறது ஜோயஸ்வில் சிறைச்சாலை.

அரை நிலவின் ஒளி வெண்பனியில் மோதித் தெறித்து வெளுத்துக் கிடக்கிறது இரவு.

சிறைச்சாலைக்கு வெளியே -

கட்டடத்தைச் சுற்றி எழுப்பிய உயரமான கம்பிவேலி. அதன் நான்கு மூலைகளிலிலும் காவற்கோபுரங்கள். இடைக்கிடை காவற்கோபுரத்திலிருந்து உயிர்த்து பனிக்கால இரவை ஊடறுக்கிறது கண்காணிப்பு ஒளிவீச்சு.

சிறைச்சாலைக்கு உள்ளே -

விடுதலைக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் எண்ணு¡று கைதிகள். கடமையில் இருக்கும் அவர்களது மேய்ப்பர்கள். கைதிகளை இயக்கும் சூத்திரக்கயிறாக சில சட்டங்கள்.

அந்தச்சிறை அறையொன்றின் ஐன்னலுக்கு எதிரே விரித்திருந்த படுக்கையில்நாடிதாங்கியபடி குந்தி இருக்கும் ராஜாவின் மூளை கொதித்துத் தளம்பிக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு இரவும் மெல்ல மெல்ல அறை குறுகி நாளாவட்டத்தில் பக்கச்சுவர்கள் தன்னை நெருக்கிக் கொன்றுவிடும் என்ற அச்சம் நீர்வளையங்களைப்போல பிரிந்து மறைந்து  மீண்டும் தோன்றிக் கொண்டிருக்கிறது அவனது மனத்தில்.

து¡க்கத்தின் இழுப்புக்கு இசைந்து சற்றுக் கண்ணை மூடவும் இருளின் சாதகமான சூழலை வைத்து கிரீச்சிட்டு முன்னேறுகிறது சுவர்.

எதிரிகளின் சதிக்கு உடன்பட்டு அவனைக் கொன்றுவிடத் துடிக்கிறது சுவர்.

புலன்களைக் கூர்மையாக்கி சுவர்களின் திருட்டு நகர்வைக் கவனித்துக் கொண்டிருந்தான். வராந்தா ஊடாக மாரிக்கால தவளையின் தாளலயங்களைப்போல குறட்டையொலிகள் மிதந்து வந்தன.

கொதித்துத் தளம்பிக்கொண்டிருக்கும் அவனது மூளையில் ஒரு எண்ணம் வலுத்தது. எதிரிகள் தன்னைக் கொல்வதற்கு முன்னர்தான் முன்னேறித் தாக்கி எதிரிகளைக் கொன்றுவிடவேண்டும். ஒவ்வொரு எதிரியாக விழுத்தவேண்டும். ஆயுதத்தேர்வு பற்றிய சிக்கல் இல்லை. துவக்குத்தான் அவன் பயிற்சி பெற்ற ஆயுதம். மேலும் துவக்கின் அனுகூலமான எதிரிக்கும் அவனுக்குமான இடைவெளிஇ கொலையின் கோரத்தை மனதில் மட்டுப் படுத்தும். கூடவே கடைசி நேரப் பிராயச்சித்தங்களுக்கும் மன்னிப்புக்கும் துவக்கு தலைவணங்காது. வெடி விழுந்த மறுகணம் கடதாசி மடங்கி விழுவது போல நிலத்தில் விழும் மனிதஉடல் துடித்தடங்குவதைப் பார்க்கத்தேவையில்லை. ஆக எதிரியை ஒழித்துக்கட்ட துவக்குப் போன்ற சிறந்த ஆயுதம் வேறொன்று உலகிலில்லை.

நேரத்தைப் பார்த்தான் இரவு இரண்டுமணி. படுக்கையிலிருந்து எழும்பி சுவரில் ஒரு வட்டம் கீற முயன்றான். வெள்ளைநிற ஒயில் பெயிண்ட் அடித்திருந்த சுவரில் நகத்தால் அழுத்திக் கீற பெருவிரல்நகம் வளைந்தது. நகம் மடங்க அவனுக்கு கோபம் வந்தது. கோபம் கூடக்கூட சுவரில் நிகத்தின் அழுத்தம் கூடியது. சில நெளிவுகள் நடுக்கங்களுடன் அவன் நினைத்த உருவம் வராவிட்டாலும் நீள் வட்டமாக அது பூர்த்தியாயிற்று.

நீள்வட்டமாகி விட்டாலும் பரவாயில்லை. தோராயமாக மனிசக் கண்களும் ஒரு நீள்வட்ட வடிவம்தானே. ஆனால் பெரிய மாமனுக்கு கோழிமுட்டை பருமன் கண்கள். மாமன் போட்டிருக்கும் மொத்தக் கண்ணாடி அவனது கண்களை இன்னும் பெரிதாக்கி திருட்டுமுளியாக்கி காட்டும். மாமன் யாருடைய கண்களையும் பார்த்துக் கதைக்க மாட்டான். எதிரே இருப்பவன் மிக இலகுவாக மாமனது திருட்டுப் பார்வை எங்கெல்லாம் ஓடித்திரிகிறது என்று பார்த்து விடலாம். பெண்களது இருதயம் அடிப்பது அவனுக்கு தெரிகிற மாதிரி அவர்களது நெஞ்சைப் பார்த்துக் கொண்டுதான் கதைப்பான். இதோ அந்தத் திருட்டு முளியை தோட்டா பாய்ந்து சிதறடிக்கப் போகிறது.

சுவரிலிருந்து எட்டுத்தரம் காலடிகள் வைத்தளந்து து¡ரம் கணித்து நிமிர்ந்து நிலையெடுத்து நின்றான். வட்டத்தை நோக்கி வலக்கையை நிமித்தினான். ஆட்காட்டிவிரல்தான் துப்பாக்கிக் குழாய். கூரைச் சுவரை நோக்கி நின்ற பெருவிரலுக்கும் வட்டத்தை குறிவைத்திருந்த ஆட்காட்டி விரலுக்கும் வட்டத்துக்குமான பார்வைக்கோணத்தை நேர்கோட்டில் இணைத்து கவனத்தைக் குவிக்க கொலை செய்ய வேண்டிய முகங்கள் நினைவில் வரிசை கட்டி வந்தன. வரிசையின் மத்தியில் சின்னமாமனின் உயர்ந்த உருவம் தெரிந்தது.

நடுவிலிருந்து சின்னமாமனைத் து¡க்கி வரிசையின் முன்னுக்கு நகர்த்தி வைத்து மாமனது இடக் கண்ணில் துவக்கைக் குறி வைத்தான். பாவம் பயத்தினால் மிரண்டு போன கண்கள் அவனைக் கெஞ்சின. கெஞ்சும் விழிகள் அருவருப்பானவை. அவனால் அந்தக் கோழைத்தன விழிகளைப் பார்க்க முடியாது. தனது கண்களை மாமனின் முகத்திலிருந்து நெஞ்சுக்கு இறக்கினான். தேக்குமரம் போன்ற அகன்ற மார்பு. குறி வைக்கவே தேவையில்லை. துவக்கு வெடிக்கும் போது ஏற்படும் உதைப்புக்கூட இலக்கை தவறவிடாது இதயத்தைத் துளைத்துச் செல்லும். சின்ன மாமனுக்கு இதயம் இருக்கிறதா..? இருந்தால் என்னை ஏமாற்றுவானா..?

நெஞ்சின் இருதயப் பரப்பையும் விட்டு குழாயைக் கீழே இறக்கினான். பானைவயிறு தெரிந்தது. சேட் பட்டன்கள் தெறித்து விடுமாப்போல வீங்கிய வயிறு. முப்பத்தையாயிரம் டொலர்களை விழுங்கிய வயிறு. ஆறு தோட்டாக்களையும் ஒருசேர வயிற்றில் செலுத்தினாலும் வெப்பிசாரம் தணியாது.

நித்தியபாவி..!

வேண்டாம் இவனைக் கொல்லக்கூடாது. முழங்கால்ச்சில்லை வெடிவைத்து சிதைத்து நொண்டியாக்கி விடவேண்டும். இவன் நொண்டித் திரியும்போது நான் பார்த்துப்பாத்து சிரிக்க வேண்டும். இவன் போடும் டெனிம்ஐ£ன்ஸ் முழங்காலுக்குக் கீழே காலில்லாமல் காற்றில் ஆடவேண்டும். வன்மத்துடன் துவக்குக்கையை முழங்காலுக்கு இறக்கி குறிவைத்தான்.

அதோ.. சின்னமாமனின் மகள்மார் யசோதராவும் பிரியங்காவும் தம் தகப்பனின் காலைக் கட்டிக்கொண்டு அவனைக் கெஞ்சல்ப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தனர். அடச்...சீ.! அதுகளின் கண்களிலிருந்து கண்ணீர் வேறு பொலபொல வென்று விழுந்து கொண்டிருக்கிறது. அவனையறியாமல் அவனது துவக்கு கீழே இறங்கி விட்டது. வலக்கையை முஷ்டிமடக்கிக் கொண்டு ஓடிப்போய் சுவரிலிருந்த வட்டத்திற்கு ஓங்கிக் குத்தினான். "அம்மா" என்ற குரல் வாயிலிருந்து வந்தது. வேதனையில் கையை உதறிவிட்டுக் கொண்டான். கை விறுவிறுத்து வலித்தது. ஆக்ரோசத்துடன் சுவரில் விழுந்த குத்து அவனது மொளிகளை நெரித்து விட்டது. சுவர் உரஞ்சியதால் தோல் வளண்டு இரத்தம் வந்தது. வேதனையில் அழுகை வந்து விட்டது. சுவரில் சாய்ந்து இருந்து கொண்டு முதுகு குலுங்க அழுதான். கடைவாயிலிருந்து வீணீர் வழிந்து ஒழுகியது. "முப்பத்தையாயிரம் டொலர்ஸ் முப்பத்தையாயிரம் டொலர்ஸ்" என்று அவனது வாய் மந்திரமாக உச்சரித்தது.

இல்லை இவனைச் சுட்டுத் துலைக்க வேண்டும் என கறுவிக்கொண்டு திரும்பவும் எழும்பினான். அப்போதுதான் அவனது காரை சின்னமாமன் வைத்திருப்பது ஞாபகத்திற்கு வந்தது. இவனைக் கொன்றால் காரை தன்னுடைய பெயருக்கு மாற்ற முடியாது. அது அவனது பிரியமான கார். சொன்ன சொல் கேட்கும் கறுத்த நாய்க்குட்டி போன்ற §ளைளய¦ - 300ணுஓ. அது எவ்வளவு நாள் அவனைக் காப்பாற்றி இருக்கிறது. பொலிஸ் கலைத்தாலும், வியாபாரப் போட்டி காரணமாக உருவான எதிரிகள் கலைத்தாலும் இவனைப் பத்திரமாக வீடு சேர்த்து விடும். இவனது ஒவ்வொரு எதிரிகளையும் அதற்கு தெரியும். ஆனாலும் ஏனோ ஐஸிலின் நடிப்பை அதனால் புரிந்து கொள்ள முடியவில்லை. சிலவேளை அவனை மறந்து விட்டு ஜிஸிலுடனேயே அது பலநாட்கள் ஒட்டாவா கியூபெக் சிற்றி என்று சுற்றி வந்திருக்கிறது.

கொல்ல வேண்டிய எதிரிகளின் வரிசையில் ஏன் ஜிஸிலின் முகம் வரவில்லை. அவளைக் கொல்ல வேண்டாமா..? என்னுடைய கட்டிலில் எனக்குப் பிடித்த எனக்கே எனக்கான ரோஸ்கலர் பெட்சீட்டைப் போர்த்துக் கொண்டு அந்த பிரெஞ்சுக்காரன் படுத்திருந்தானே. நான் அவளைக் கொல்லத்தானே வேணும் ஏன் அவள் வரிசையில் வரவில்லை. என்றாலும் நான் அப்படி உதைந்திருக்கக்கூடாது. குதிக்கால் இன்னமும் நொந்து கொண்டிருக்கிறது. நடக்கும்போது குதிக்காலை நிலத்தில் பாவமுடியவில்லை. நாளை டொக்டரைப் பார்க்கும்போது கையுக்கும் காலுக்கும் மருந்து போடவேண்டும்.

முந்நு¡று கிலோமீட்டர் கடந்து மொன்றியலிலிருந்து என்னைப் பார்க்க வந்திருந்தாள். என்மீது அவளுக்கு அன்பிருந்து ஓடிவர வைத்திருக்குது என்றுதான், கண்ணாடிச் சுவருக்கு வெளியே அவளது முகம் தெரிந்தபோது மனம் குளிர்ந்தது. அவளைக் கட்டி அணைத்து பொன்நிறத் தலைமயிரை கோதிவிடவேண்டும் என்று கை துருதுருத்தது. அவளது மடியில் தலைவைத்துப் படுத்து "என்னை இழந்து விட்டதாக கவலைப்பட்டாயா ஐஸில்..!" என்று கேட்க வேண்டுமென நாக்கு துடித்தது. அவள் சற்றுத் தேறி இருந்தாள். போதையில் ஓயாது து¡ங்கிவிழும் கண்கள்கூட வெளிச்சம் விழுந்த பூவைப்போல மினுமினுப்புக் கூடியிருந்தது. இரப்பையில் நிலைத்திருந்த கருமைகூட மறைந்துவிட்டது. து¡ள் அடிப்பதை விட்டுவிட்டாள் போலிருக்கிறது. நான் இங்கிருக்கும்போது அவளுக்கு து¡ள் யார் கொடுப்பார்கள்..?

பாவம். ஜிஸில்..!

அன்பே...! து¡ள் குடிப்பதை நானும் விட்டுவிட்டேன். வெளியே வந்ததும் இருவரும் ஒன்றாக வாழ்வோம். நான் வேலைக்குப் போகிறேன். எனக்குச் சொந்தமென்று இனிமேல் யாருமில்லை. பெரியமாமன் திருடன். சின்னமாமன் ஏமாற்றுக்காரன். நீதான் எனக்கு சொந்தம் நட்பு சுற்றம் எல்லாம்.

அவன் அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான். அவனைக் கூட்டி வந்த சிறைக்காவலாளி அறையைப் பூட்டிக் கொண்டு சென்று விட்டான். இப்போது இருவர் மட்டுமே தனிமையாக. இருவருக்குமிடையே கண்ணாடிச்சட்டம் பெரிய சுவராக பிரித்திருந்தது. மிகவும் நாசூக்கான கண்காணியாக இரண்டு கமெராக்கள் அமைதியாக பார்த்தவாறிருந்தன. ஐஸில்தான் முதலில் சிரித்தாள்.

"எப்படி இருக்கிறாய் நண்பனே" என்ற அவளது குரல் பல பாலைவனங்களைத் தாண்டி வருவதுபோல கண்ணாடிச்சுவரின் சின்ன ஓட்டைக்குள்ளால் அவனை அடைந்தது. பதில் சொல்லாமல் மெளனமாக அவளைப் பார்த்தவாறிருந்தான். போதம் மிகுந்த அவனது பார்வையை கண்ணாடிச்சுவர் வேண்டி அவளிடம் கொடுத்தது.

"ஆந்திரேயும் உன்னுடன் வந்தானா?" என்றான். அவனது கேள்வியில் இருந்த வன்மத்தைப் புரிந்து கொண்டாள் ஜிஸில். நல்லவேளை ஆந்திரே காருக்குள் படுத்திருக்கிறான்.

"நான் அந்தப் பன்றியைப் பார்க்கவே இல்லை. தனியாக வந்தேன். உன்னுடைய மாமாவிடம்தான் விலாசம் வேண்டினேன்."

காதல் தேடவைத்திருக்கிறது. என்னைப் பற்றிய நினைவுகள் அரித்தெடுத்த அவதியில் சின்னமாமனிடம் விசாரித்திருக்கிறாள். ஆனால் இவளுக்கு சின்னமாமனைப் பற்றிச் சொல்லி வைக்கவேண்டும். அவன் சரியான பொம்பிளைக் கள்ளன். ஏமாற்றுப் பேர்வழி. என்னைப்போல இவளையும் ஏமாற்றி விடுவான்.

"ராஜா.. என்னிடம் உனது அப்பாற்மென்ட் திறப்பு இருக்கிறதல்லவா"

"பரவாயில்லை. நான் அந்த அப்பாற்மென்ட்டுக்கு ஒரு வருட வாடகையும் கொடுத்துவிட்டேன். நீ படுத்து உறங்கு."

"நான் ஏற்கனவே அங்குதான் தங்கியிருக்கிறேன். அதல்ல விசயம்..." என்று சொல்லியவாறு அவள் மிச்சத்தைச் சொல்லாமல் தயங்கினாள். சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தவாறிருந்தாள். ஏதோ சொல்ல விரும்புகிறாள் என்று அவனுக்குப் புரிந்தது. இந்தப் பெண்களே இப்பிடித்தான் காரணமில்லாமல் தயங்குவதும் யோசிக்காமல் அன்பு வைப்பதும் திடீரென்று கோபிப்பதும், விசித்திர ஜீவன்கள். பெரிய மாமியும் இப்பிடித்தான். நு¡றுகிராம்  து¡ள்விற்று வந்த இலாபத்தில் ஜந்து பவுண் சங்கிலி வேண்டிக் கொடுத்தபோது மருமகனென்றுகூட யோசிக்காமல் நாணிச்சிவந்தாள். அன்று வெள்ளிக்கிழமை என்று தெரிந்தும் இறச்சி பொரித்து சோறு போட்டவள் அடுத்த கிழமையே "வெளியால போடா நாயே" என்று விட்டாள்.

அன்று கஞ்சா அடித்தபிறகு குடித்த விஸ்கி வயிற்றில் இசைகேடாக முறுகி விட்டதால் பெரிய மாமியின் பாத்ரூமுக்குள் சத்தி எடுத்து விட்டான். ஒழுங்காக பாத்ரூமுக்குள் சத்தி எடுத்தது எப்படி நாய்த்தனமாகி விட்டது என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. பெரியமாமன் ஒவ்வொரு சனிக்கிழமையும் அரைப்போத்தல் §ஐ அண்ட் பி விஸ்கியை விழுங்கிவிட்டு சாரம் விலகினது தெரியாமல் செற்றியில் விழுகிறான். சினிமாப்பாட்டுக் கொப்பியை திரும்பித் திரும்பிப் போட்டுப் பார்த்து என்னத்தையோ உருவேற்றிக் கொள்கிறான். ஏழுவயது வளர்ந்த மகள் வைத்திருப்பவன் சிலுக்குஸ்மிதாவின் அழகை நினைவில் ஏற்றி மாமியை முயங்குவது சாவான பாவமல்லவா..!

எது சரி எது தப்பு ஒன்றுமே புரிந்து கொள்ள முடியவில்லையே. இவள் ஐஸில் என்னதான் சொல்ல வருகிறாள்.

"ராஜா¡..! போன கிழமை அப்பாற்மென்ட் துப்பரவு செய்யும்போது நீ மறைத்து வைத்திருந்த தராசு கண்ணில்பட்டது."

"அதைக் குப்பையில் எறிந்துவிடு! அது அங்கு இருப்பது உனக்கு தொந்தரவைக் கொண்டு வந்துவிடும்."

"அதை உன்னுடைய நண்பன் குமாரிடம் கொண்டுபோய்க் குடுத்துவிட்டேன்" என்றாள் ஜிஸில்.

"அவனுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாதே.. தன்னுடைய வியாபாரத்துக்கு உன்னையும் பாவித்துவிட்டு சக்கையாய் குப்பையில் போட்டுவிடுவான்"

"குமார் எனக்குச் சொன்னான். நீ அந்த அப்பாற்மென்டில் இருநாறு கிராம் து¡ள் ஒழித்து வைத்திருக்கிறாயாம். அதை எடுத்து தனக்குத் தந்தால் தான் காசு தருவதாக."

"கேள் ஜிஸில்..! அது பச்சைப்பொய். என்னிடம் கைவசம் எதுவுமில்லை. நான் இப்போது புதிய மனிதன்."

"ராஜா¡..! அதை என்னிடம் சொல்லு. நான் இப்போது மிகவும் கஸ்ரப்படுகிறேன். அதை எடுத்து குமாரிடம் கொடுத்து காசு வேண்டி விடுகிறேன். பிளீஸ் சொல்லு..! நீதான் இனிமேல் வெளியால் வரவே முடியாதே உனக்கெதற்கு அது..?"

"என்னடி சொன்னாய்.. என்ன சொன்னாய்.. நான் வெளியே வரமாட்டேனா.. கள்ள வே..."

காலால் எட்டி உதைந்தான். கண்ணாடிச்சுவர் அதிர்ந்து மெளனித்தது. எங்கிருந்தோ இரண்டு காவலாளிகள் ஓடிவந்து அவனைப் பிடித்துக் கூட்டி வந்துவிட்டார்கள். அவர்களது பிடியிலிருந்து திமிறித் திமிறி விடுபட முயன்று தோற்றுப் போனான்.

சுவரில் சாய்ந்திருந்தபடி அண்ணாந்து கூரையைப் பார்த்தான். மூன்று பக்க சுவர்களையும் பார்வை அளந்து வந்தது. அவன் வெளியே வர முடியாது என்று ஐஸில் சொன்ன வார்த்தைகள் அந்தச் சிறைச்சுவரெங்கும் பரந்திருப்பது போல பிரமை தட்டியது. அந்த நீள்சதுர அறையின் ஒரேயொரு ஐன்னலும் கைக்கெட்டாத து¡ரத்தில் இருந்தது. என்னதான் நடக்கிறது வெளி உலகத்தில். அவனுக்கு இப்போது வெளியே பார்க்க வேண்டுமென்ற வெறி வந்துவிட்டது. எட்டிப் பார்த்தான் ஐன்னலின் விளிம்பைக்கூட அவனது கைகள் எட்டவில்லை. தாவிக்குதித்து ஐன்னல் சட்டத்தைத் தொடமுயன்றான். இப்போதே வெளியே பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல் கூடக்கூட தாவிக் குதித்தலின் லயம் கூடிக் கொண்டுபோனது. தரையில் சப்பாத்து அதிர்ந்த சத்தம் இரவின் நிசப்தத்தைக் கிழித்தது.

சத்தத்தின் திசை நோக்கி வந்த இரவுக்காவலாளி கூடைபந்தாட்டத்தைப் பார்க்கும் சுவாரசியத்துடன் அவனது குதிப்பை குறுஞ்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்து விட்டு அதட்டினான்.

"ஏ.. மனிதா..! அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய். நித்திரைக்குப் போ..!!"

அவன் தன்னுடைய சொல்லுக்கு கீழ்ப்படிகிறானா இல்லையா என்று பார்ப்பதற்கு அங்கேயே நின்றான் காவலாள். ஒழுங்கு முக்கியம். இரவுக்கென விதித்திருக்கும் அமைதிக்குள் இடையூறான அவனது தேடல் பற்றிய முனைப்பை அனுமதிக்கத் தயாராக இருக்கவில்லை சிறைக் காவலாளி.

கண்காணிப்பின் வீச்சு உறுத்தி படுக்கையில் சாய்ந்தான் ராஜா. அவனது மூளைக்கு உறக்கம் தேவையற்றுவிட்டது. மாத்திரையின் உதவியினால் கிடைத்து வந்த ஓய்வுகூடஇ மாத்திரை உடலில் வீரியமிளந்து வருவதால் பலனற்றுப் போய்விட்டது.

அவனது உடம்பு படுக்கையில் வெறுமனே படுத்திருக்க மனசு நழுவிப் பறந்து ஐன்னல் சட்டத்தில் தொங்கியபடி வெளியே பார்த்துக் கொண்டிருந்தது ஒரு வெளவால் போல.

- ஜெயரூபன் (மைக்கேல்)

- (தொடர்ச்சி)

Quelle - பதிவுகள் ஆகஸ்ட் 2001,   இதழ்-20

No comments: