Tuesday, March 27, 2007

மீட்டாத வீணை - 8

8
பக்கம் 72

அவன் கண்களால் சாடை காட்டினான். அவள் அருகில் சென்றாள். அவன் அவள் கரங்களைப் பற்றினான். "உன்னை நான் காதலிக்கிறேன்" என்றான் அவன்.

செல்லம் விரலைக் கடித்துக் கொண்டாள். அவள் மருண்ட விழிகள் அங்குமிங்கும் பயத்துடன் பார்த்தன. புத்தகம் மார்பில் சாய்ந்தது. "சே புத்தகம் வாசிக்கும் போதும் இவ்வளவு பயமா? என்றது உள்ளம். இந்தக் கதையிலே வருகிற மாதிரித்தான் வாழ்க்கையிலும் நடக்குமா? அவன் வருவானா? அப்படிச் சொல்வானா? ´அது அப்படிச் சொல்லாது. வெக்கமில்லையே அப்பிடிச் சொல்ல! அதுக்கும் என்னிலை விருப்பமே? ஏன் பின்னே அப்படிப் பார்த்ததாம்? அன்றைக்குப் பயமில்லாமல் என்னோட கதைச்சுப் போட்டிது. அது என்னைக் காதலிக்க இல்லையென்றால் என்ன செய்யிறது?´ செல்லம் ஏக்கத்தோடு கன்னத்தில் கையை வைத்தாள்.

""இன்னும் கொஞ்சம் கறி போடட்டே?"
உள்ளே மீனாட்சி மகாதேவனைக் கேட்டாள்.

"இவன் இளங்கோக்கு இறைச்சி அனுப்ப இல்லையே?" மகாதேவன் கேட்டான்.

´அண்ணனுக்கு அதிலே நல்ல பிடிப்பு´ அவள் நினைத்தாள்.

"அதுகளோட சும்மா, சும்மா கொண்டாட்டம் வேண்டாம். உன்ரை மாமாவை பகைக்க ஏலுமே?"


பக்கம் 73

தாய் கேட்டாள். செல்லத்துக்கு துக்கமாக இருந்தது. "நல்ல மாமாமார். பாவம் அவன்ரை வேலையையும் கெடுத்து, உங்கடையாக்கள் எல்லாரும் இப்பிடித்தான். ஏனிந்த எரிச்சல்? தாங்கள் வாழ்ந்தால் போதுமே? மற்றவை மனுசரில்லையே?" மகாதேவன் கேட்டான்.

"இப்ப நீ சாப்பிட வந்தனீயோ? உந்த பேய்க்கதைகள் கதைக்க வந்தனீயோ?" மீனாட்சி சிறிது கோபமாகக் கேட்டாள்.

"இப்ப என்ன சொல்லிப் போட்டன்? சோறு போடக்க என்றாலும் சந்தோஷமாகப் போட மாட்டியள். மனுசன் மாடாக உழைக்கிறதுதான் மிச்சம்" மகாதேவன் பதிலுக்குச் சத்தம் போட்டான். செல்லம் எழுந்து அடுக்களைக்குள் போனாள்.

"நீ போ அம்மா. நான் சாப்பாடு போடுறன். என்ன அண்ணே வேணும்? கொஞ்சம் இறைச்சி போடட்டே?" அவள் கேட்டாள்:

"நீயும் கொண்ணனும் பட்டபாடு. நாங்கள் ஏதாவது சொன்னால் அவருக்குப் பெரிய கோவம். நான் எங்கேயாவது போரன்" தாய் சேலையைச் செருகிக் கொண்டு தன் ஒப்பாரியை வைக்க தேவி வீட்டை நோக்கிப் போனாள். போகு முன்னர் செல்லத்தின் காதில் ஏதோ முணுமுணுத்து விட்டுப் போனாள்.

"என்னடி சொன்னவ?" மகாதேவன் கேட்டான்.

"நீ கோபத்திலே சரியாகச் சாப்பிட மாட்டியாம். வடிவாகச் சாப்பாட்டைப் போட்டுக் குடுக்கட்டாம். செல்லம் சொன்னாள். மகாதேவன் சிரித்துக் கொண்டான்.

"அம்மாக்கு விசரடி. வேலுப்பிள்ளை மாமா செய்தது சரியே...? இஞ்சர்... செல்லம்... கொஞ்சம்


பக்கம் 74

இறைச்சிக்கறி கொண்டு போய் தங்கம் மாமியிட்ட குடுத்து விடு. மனுசி நான் போற நேரமெல்லாம் கருப்பணிக் கஞ்சியும் அதும், இதுவும் தரும்.

"நீ சாப்பிடு. நான் குடுக்கிறன்" அவள் சோற்றைப் போட்டாள்.

"போதும், போதும். நீ போடுறதைப் பார்த்தால் அம்மா பிழையில்லைப் போல இருக்கு.

மகாதேவன் ஒருவாறு சாப்பிட்டு எழுந்தான். செல்லம் ஒரு கோப்பையில் கறியும் கொண்டு, வேலியை நோக்கி நடந்தாள்.

"தங்கம் மாமி... தங்கம் மாமி"

"ஆர்... பிள்ளை? செல்லமே... என்ன மோனை, இந்த வெயிலுக்க?" தங்கம் கேட்டாள்.

"இறைச்சி காய்ச்சினனாங்கள், இந்தாங்கோ"

தங்கம் வேலியை நெருங்கினாள். "உங்களுக்குப் பிள்ளை வேற வேலையில்லை. ஏன் உதெல்லாம்?"

"மாமி, எங்கே உங்கடை மோனைக் காண இல்லை?"

"அதை ஏன் பிள்ளை கேட்கிறாய்? அவனில்லே மேசன் வேலைக்குப் போட்டான்"

"ஓ... அண்ணன் சொன்னவர். பாவம்... படிச்சுப் போட்டு உந்த வெய்யிலுக்குள்ள என்ன செய்யப் போகுது!"

"உன்னாணை மேனை மெய், நானும் சொல்லிச் சொல்லிப் பார்த்தன். அவன் கேட்டால்தானே. எல்லாம் மேனை என்ரை பாவத்துக்குத்தான்"

"மத்தியானம் சாப்பிட வருமே"

"இல்லை பிள்ளை. கொண்டு போய் குடுக்க வேணும். பிள்ளை, ஒரு வாழையிலை வெட்டித் தாவன்"


பக்கம் 75

"இந்தாங்கோ, கறியைப் பிடியுங்கோ. கத்தியைக் கொண்டு வாங்கோ, வெட்டித் தாரன்" "நேரஞ் சென்று போச்சு, நானும்..." தங்கம் கறியை வைத்து விட்டுக் கத்தியைக் கொண்டு வந்தாள். செல்லம் வாழை இலையை வெட்டிக் கொடுத்தாள்.

"நீயே பிள்ளை இறைச்சி காய்ச்சினனீ?"

"ஓம்... அம்மா உதுகள் தொடமாட்டா இல்லே"

"ஓம்... ஓம்..."

"நேரமில்லே சென்று போச்சு. அது வேலை செய்து களைச்சுப் போயிருக்கும்"

"ஓம் பிள்ளை, நான் பிறகு வந்து கதைக்கிறன்"

தான் சமைத்ததை அவன் உண்ணப் போகிறான் என்பதில் செல்லத்துக்கு ஒரு மகிழ்ச்சி.

"என்ன அங்கே வேலிக்க செய்யிறாய்? வயசு வந்த பெட்டையளுக்கு என்னடி அடுத்த வீட்டிலே வேலை? செல்லம் கரடுமுரடான அக் குருல் வந்த திக்கை நோக்கினாள். சாம்பல் நிறத் தலைமயிர், ஹிட்லர் மீசை, கரிய மேனியில் தொங்கும் வெண்ணிறச் சால்வை... வேலுப்பிள்ளையர் நின்றார். தன்னைச் சுதாரித்துக் கொண்டு செல்லம வரவேற்றாள்:

"வாங்கோ மாமா. அம்மா அடுத்த வீட்டுக்குப் போயிருக்கிறா. வந்து இருங்கோவன்" மகாதேவன் அப்பொழுது வெளியே வந்தான். அவர் முகத்தைப் பார்க்க அவனால் முடியவில்லை. தலை குனிந்திருந்தான்.

"என்னடா மருமகனே, சண்டைக்கு வந்திடாதே. நான் அதுக்கு வர இல்லை. கொம்மாவைக் கூப்பிடன். பிள்ளை தம்பியவை, உங்களுக்கு உலகம் தெரியேல்லை. சொந்த மாமன் தேவையில்லை. மச்சான் தேவையில்லை. யாருக்குப்


பக்கம் 76

பிறந்தது என்று தெரியாததுகளோட கொண்டாட்டம். "மாமா, ஏன் பழைய குப்பைகளைக் கிளறுகிறீங்கள்? இதாலே இப்ப என்ன நன்மை வரப் போகுது? மாமி சுகமாக இருக்கிறாவே?"

"அவளுக்கு என்ன குறை? அந்தப் பக்கம் வந்து பார்த்தாலென்ன?"

"தோட்டமும், வேலையும்.... நேரமென்றால்..."

"அண்ணே, எப்ப வந்தனீ? எடி செல்லம், மாமாக்கு தேத்தண்ணி குடுத்தனீயே?" மீனாட்சி வேகமாக வந்த படியே பேசினாள். வேலுப்பிள்ளையர் கதிரையில் இருந்தார். மகாதேவன் கப்போடு சாய்ந்தவாறு நின்றான். மீனாட்சி தரையில் உட்கார்ந்தாள்.

"சாப்பிட்டியோ? சோறு கிடக்கு. இன்றைக்கு இறைச்சியும் காய்ச்சினனாங்கள்..." மீனாட்சி இழுத்தாள்.

"நான் சாப்பிட்டுத்தான் வந்தனான். மணியனுக்கு வேலை ஒன்று கிடைச்சிட்டுது.

"எங்கடை மணியனுக்கோ? அவன் பிள்ளை இராசா மாதிரி. எங்கேயண்ணை வேலை?"

மகாதேவனின் கண்களில் ஆவல் தெரிந்தது.

"சும்மாவே, கவன்மேந்து வேலையில்லே. கிராமசமையிலே கிளார்க் வேலை."

"பிள்ளையாரே, பிறகென்ன? அவன் கெட்டிக்காரன். என்ரை மோனும் இருக்கிறான். காற்சட்டை போடுவம், நாலு இங்கிலீசு பேசுவம், அதுகள் கிடையாது. தோட்டம் செய்யத்தான் தெரியும்.

"அம்மா மற்றவன் வாழ்கையிலே முன்னேறுகிறான் என்றால் அதற்கு சந்தோசப் படு. ஏலாது என்றால் பேசாமல் இரு. ஏன் உன்ரை மோனை ஒப்பிட்டுப் பார்ர்த்து உன் மனசைக் கஷ்டப் படுத்துகிறாய்?" மகாதேவன் கேட்டான்.


பக்கம் 77

"எது அண்ணே முன்னேற்றம்? காற்சட்டை போட்டால் முன்னேற்றமே? அப்பிடியென்றால் எங்கடை நாடு எப்பவோ முன்னேறியிருக்குமே! உந்தக் காற்சட்டை போட்டதுகளுக்கும் சேர்த்துத்தானே உன்னைப் போல உள்ளவை உழைக்க வேண்டியிருக்கு"

செல்லம் இப்படிப் பேசுவது வெகு குறைவு. ஆனாலும் தாயின் வார்த்தைகளால் அண்ணன் மனம் நோகக் கூடாதே என்ற எண்ணத்தோடு, வேலுப்பிள்ளையர் மீது அவளுக்கு இயற்கையாக உள்ள வெறுப்பையும் அவள் அப்படிக் கொட்டினாள்.

"போடி உள்ளே, அவவின்ரை வாயைப் பார். வர வர உங்களுக்கு வாய் பெருக்கிது. மாமாக்கு முன்னாலே பேசுகிற பேச்சே இது?" மீனாட்சி சீறினாள்.

"அவள் சின்னப் பெட்டை. அவளை ஏன் திட்டிறாய்? செல்லம், நீ போய் தேத்தண்ணியைப் போடு பிள்ளை. மீனாட்சி, உன்னோட கொஞ்ச விசயம் கதைக்க இருக்கு" வேலுப்பிள்ளையர் அங்குமிங்கும் பார்த்தார். மீனாட்சி புரிந்து கொண்டாள்.

"மகாதேவா, வெற்றிலை முடிஞ்சுது, வாங்கிக் கொண்டு வாறியே?" எப்பிடி அங்கிருந்து போவதென தடுமாறிக் கொண்டிருந்த மகாதேவன் மெல்ல வெளியேறினான். செல்லம் அந்தப்புரத்துக்குப் போனாள். அதாவது அடுக்களைக்கு. வேலுப்பிள்ளையரும், மீனாட்சியும் குசுகுசுவெனக் கதைத்தார்கள். மிகவும் முக்கியமான விசயத்தை அவர்கள் கலந்தாலோசிக்கிறார்கள் என்பது முகபாவனையில் தெரிந்தத: செல்லத்தின் மனதில் இனந் தெரியாத ஓரு சஞ்சலம் ஏற்பட்டது.

"ஏன் இந்த மனுசன் இப்ப இஞ்ச வந்தது?" மகாதேவன் மனதிலும் பெரிய கேள்விதான். கடைசியாக மலர்ந்த முகத்துடன் வேலுப்பிள்ளையர் எழுந்தார்.


பக்கம் 78

அப்ப மீனாட்சி, உன்ரை கையிலைதான் விசயமிருக்கு. நாங்கள் ஒன்றுக்க ஒன்று. ஏதோ ஒன்றாக இருக்க வேணும் என்றுதான் என் ஆசை"

"நீயேன் கவலைப் படுகிறாய்? அப்பு, அம்மாவே இருந்தால் இப்ப எவ்வளவு சந்தோசப் படுவினம், அண்ணே" எல்லாம் நல்லா நடக்கும். நான் நாளைக்கு வீட்டுப் பக்கம் வாரன்" மீனாட்சி சொன்னாள்.

"இஞ்ச பார் என்ரை மறதியை... "செல்லம்... செல்லம்..." மாமா கூப்பிட்டார்.

"என்ன மாமா?" செல்லம் வந்தாள்.

"மாமி உனக்குக் குடுக்கச் சொன்னவள்" ஒரு பார்சலை அவர் நீட்டினார்.

"அட சீலையே...! அம்மா இஞச பாரன். மாமி சீலை அனுப்பியிருக்கிறா. நானின்னும் போடக் கூடத் தொடங்கவில்லை"

"நீ இன்னும் சின்னப் பிள்ளையே? அது அது அந்தந்த வயசிலே நடக்கும். மாமி உன்னிலே எவ்வளவு அன்பு, பார்த்தியே?" தாய் கேட்டாள்.

"அப்ப நான் வரட்டே" வேலுப்பிள்ளையர் கேட்டார்.

"செல்லம், அந்த மாம்பழம் கொஞ்சம் இருக்குது இல்லே?" மீனாட்சி வினவினாள்.

"கொஞ்சம் நில்லுங்கோ, மாமா. கொண்டு வாரன்" செல்லம் உள்ளே ஓடினாள்.

"கொத்தானுக்கும் சேர்த்து நல்ல பழமாக எடு பிள்ளை" மீனாட்சி சொன்னாள். செல்லத்தின் மனதில் மீண்டும் அந்தப் பயம் எழுந்தது. "யாருக்கோ நல்ல பழத்தைத் தெரிந்து எடுக்கச் சொல்லுறியே அம்மா, எனக்குத் தேவையானதை நான் எடுக்கு விடுவாயா?" அவளிதயம் கேட்டது. வேலுப்பிள்ளையர் மனநிறைவுடன் விடைபெற்றுக் கொண்டார்.


பக்கம் 79

"செல்லம்" தாய் இவ்வளவு அன்பாக அவளை என்றுமே அழைத்ததில்லை.

"என்னம்மா?"

"வா உனக்குத் தலை இழுத்து விடுகிறன்" அன்பான அந்த அழைப்பு செல்லத்துக்கு அதிசயமானதுதான். செல்லம் சீப்பும் கையுமாகத் தாயின் அருகில் போய் அமர்ந்தாள். தாய் தலையை வார ஆரம்பித்தாள்.

“செல்லம், தோட்டத்தைப் பார்த்தியே, மிளகாய் எல்லாம் பழுத்திட்டுது“

"ஓமம்மா, இனி எல்லாம் பிடுங்கிக் காய வைச்சு, விற்க வேண்டியதுதான்."

"பார்த்தியே அம்மா, ஆட்டுக்குட்டி துள்ளுகிற துள்ளலைப் பார்."

"துள்ளுகிற வயசிலை துள்ளுது. இன்னும் கொஞ்ச நாளிலே யார் கையுக்குப் போகுதோ?"

"எதுதானம்மா நிலையானது? மாலையிலே வாடி விடும் என்று காலையிலே பூத்த மலரைப் பார்த்து கவலைப் படலாமா? பூத்திருக்கிற நேரம் அழகாக இருந்தால் அதைப் பார்த்து பூரிக்கிறது தானம்மா இன்பம். நாளை என்ன நடக்குமென்று இன்றைய அமைதியை ஏனம்மா கெடுக்க வேணும்?"

"வாழ்க்கை நீண்ட கால, நீண்ட தூரப் பயணமடி. அதின்ரை ஒவ்வொரு பகுதியையும், திட்டம் போட்டு, எதிர்பார்த்து நடக்க இல்லையென்றால் ஏமாற்றம்தானடி கிடைக்கும்"


பக்கம் 80

"அம்மா, காலம் மாறுது. என்னத்தை நாங்கள் திட்டமிட்டாலும் இடையிலே ஏற்படுகிற மாற்றங்கள் எங்கள் மனக்கோட்டைகளை எல்லாம் தரைமட்டம் ஆக்கிடுதே. எதிர்பாராதவை எத்தனையோ நடக்குது. எங்கள் வாழ்க்கை கனவு காண்கிறதிலேயே கழிந்திடுது.நாங்கள் வாழவேயில்லையே என்று கடைசி நேரம் மட்டும் கவலைப் படுகிறம்."

"பிள்ளைகளைப் பெத்தவைக்கு என்ன செல்லம் கவலை? தன்ரை பிள்ளை நல்ல, பாதுகாப்பான இடத்திலே சந்தோஷமாக வாழவேணுமே என்றுதானே நினைக்கிறம்."

"அன்பு, பாசம் வாழ்க்கையிலே அத்தியாவசியமானவை. அவைகளை அடையாதவன், அடைய முடியாதவன் மனிதனாக வாழவே முடிகிறதில்லை. ஆனால் அன்பும், பாசமும் மட்டும் இருந்தால் போதாதம்மா. ஓரளவுக்கு அறிவும் வேணும். கணமூடித்தனமான அன்பும், பாசமும் அதற்குப் பாத்திரமானவனின் வாழ்க்கையையே பலி கொண்டு விடும். அதுக்குப் பிறகு எங்கேயும் கண்ணீர் தானம்மா மிச்சம்."

"அறிவு, அநுபவத்திலே தானடி கிடைக்குது. வயசு போனால் அது தானாக வருகுது."

"அப்பிடியென்றால் வயசு போன ஆட்களெல்லாமே அறிவாளிகளே? இளவயசினர் எல்லாம் முட்டாள்களோ?"

"செல்லம், இதையெல்லாம் எங்கே படிச்சனீ? எங்கடை காலத்திலே தாயைப் பார்த்து இப்பிடிக் கேட்பமே?"

"அம்மா, காலம் மாறுது. அதோட நாங்களும் மாற இல்லையென்றால் வாழ்க்கை வேம்பாகத்தான் இருக்கும். உங்கடை காலத்திலே அறிவுச் சுதந்திரமே இருந்ததில்லை. அதுவும் பெண்களுக்குச் சுதந்திரமேயில்லை."

"நான் உடுக்கிறது, உண்ணுறது எது என்றதையே அப்புதான் தீர்மானிப்பார். அவர் சொன்னதுதான் சட்டம். அவர் தீர்மானிச்சதுதான் எங்கள் வாழ்க்கை. ஆனால் அதை விரும்பி நாங்களும் ஏற்றுக் கொண்டோம்."


பக்கம் 81

"ஆனால் பயந்து, பயந்து வாழ்ந்தியள். உங்கடை உணர்ச்சிகளை கட்டுப் படுத்தினியள். ஆசைகளை அடக்கினியள். மரியாதை என்ற பெயரில் உங்கள் வாய்களுக்குப் பூட்டுக்கள் போடப் பட்டன."

"அது என்னமோ உண்மைதானடி. ஆசையிருந்தால் அதை வெளியிட அச்சம் இருந்தது"

"இன்னொரு பிறவி உனக்கு கிடைச்சால் நீ அப்பிடித்தான் வாழ ஆசைப் படுவியா?"

"இதென்னடி கதை? இதையெல்லாம் பெண்டுகள் கதைக்கிறதே. நாலு இளம் பெட்டையளைப் பற்றிக் கதைக்க வேண்டும். சீலை, சட்டையைப் பற்றிக் கதைக்க வேண்டும். இல்லையென்றால் ஊர்வம்மை, அரிசி, மீன் விலையைக் கதைக்க வேணும். நீ ஏதோ பெரிய ஆக்கள் மாதிரிக் கதைக்கிறாய்"

"அம்மா, பொன்னான நேரம் எங்களுக்கும் கிடைச்ச மாதிரி ஆண்களுக்கு கிடைக்கிறதில்லை. அதை எங்கள் நன்மைக்கு நாங்கள் பாவிக்கிறதில்லை. நேற்று நீ சின்னவளாக இருந்து போது ஊர்ப் பேச்சைக் கேட்டு நீயே மனம் நொந்திருப்பாய். ஆனால் இன்றைக்கு நீயே இளம் பெண்களைப் பற்றி எத்தனை வம்பு பேசுகிறாய்? என்னைப் பற்றி நாலுபேர் பேசினால் உனக்கு எப்படியிருக்கும்?"

"காலாகாலத்திலே நடக்க வேண்டியது நடந்தால் பேச இடமில்லையே"

"என் வாழ்க்கை என் கையிலே இல்லையே. நீ தேடி வைச்ச சொத்து, அண்ணன் தேடுகிற சீதனம் இதுகளை நம்பித்தானே ஒருவன் எனக்கு மாலை போடுவான். இது எல்லோருக்கும் இருக்குதே? பொருள் இல்லாதவர்களுக்கு காலாகாலத்திலே என்னதான் நடக்குது? உங்களுக்கு நேரமிருக்கு, உங்கள் கற்பனைக்கு வேலையிருக்கு. நாலு பெண்கள் சேர்ந்தால் நாற்பது பெண்களின் வாழ்க்கையைக் கெடுத்திடுவியள். அம்மா, இது ஞாயமே?"


பக்கம் 82


"உதெல்லாம் தேவி சொல்லித் தந்தவளே?"

"வெதும்பிப் போன இதயங்கள், வேதனையில் வெந்து போன பேதைகள் வாய் திறந்து சொல்லாததை நான் சொல்லுறன்"

"உன்னைப் பற்றி நினையன். உனக்கு ஏன் உந்த வம்பு?"

"இது வம்பு இல்லையம்மா. இளம் பெண்களுக்கு இழைக்கப் படுகிற அநீதி. நாளை எனக்கும் நடக்கலாம்."

"அந்தக் கவலை உனக்கு வேண்டாம். மாமா ஏன் வந்தவரென்று தெரியுமே?"

"மகளுக்கு எவ்வளவு நகை போடுவாய்? காசாக எவ்வளவு வைச்சிருக்கிறாய்? வீடு, காணியெல்லாம் எழுதித் தருவியே? என்று கேட்கத்தான் வந்திருப்பார்."

"என்ரை பழக்கம் உன்னை விட்டுப் போகாது. ஒட்டிக் கேட்டனீயே?"

"கேட்க என்னம்மா இருக்கு? இதை விட்டால் வேற என்னத்தை மாமா கேட்பார்?"

"மணியன் நல்ல பெடியன்"

"வேலை கிடைக்க முன்னம், பச்சைக் குடிகாரனெண்டு நீதானே பேசுறனீ?"

"குடிகாரனெல்hலம் கூடாதவனே?"

"கூடாதவன் குடிகாரனாகவும் இருந்திட்டால் அது கூடாதுதானே"

"குடும்பப் பெண் நினைச்சால் குடிகாரனையும் திருத்த முடியுமடி"

"அவரைத் திருத்த நான் அவருக்கு மாலை போட வேணுமே? நீ அவருக்கு சீதனம் குடுக்க வேணுமே?"


பக்கம் 83

"எடியே, பேய்க்கதை கதைக்காதே. என்ரை அண்ணன் மகன்"

"அவன் உன்ரை அண்ணன் மகன்தான். நான் உன்ரை மகளம்மா."

"அதுதானடி உன்ரை வாய் இவ்வளவு நீளம்"

மீனாட்சி தலை இழுத்து முடிந்ததால் எழுந்தாள்.

"உன்னோடை என்னடி கதை? கொண்ணனுக்கும் விருப்பமென்றால் சரிதான்"

"அண்ணனுக்கும், மணியனுக்குமே கலியாணம்?"

"பல்லுக் கொட்டிப் போடுவன். கதையாதே"

செல்லத்தின் தலையிலொரு குட்டு விழுந்தது.

"என்ரை விருப்பமில்லாமல் உது நடக்காது" செல்லம் பிடிவாதமாகச் சொன்னாள். கோபமும், வேதனையும் அவள் கண்களில் நீரை வரவழைத்தன.

"நானென்ன ஆட்டுக்குட்டியே, வாரவனுக்கு வித்துப் போட? அவனை எனக்குப் பிடிக்கவில்லை. அவன் எனக்குத் தேவையில்லை."

"நீ தோளுக்கு மேலே வளர்ந்திட்டாய். எடியே வாயைப் பொத்தடி. உனக்கென்ன நாங்கள் நஞ்சே தரப் போறம்?"

"அதையாவது தாங்கோவன், ஒருத்தருக்கும் கரைச்சலில்லை."

"நான் அண்ணனுக்கு ஓமென்று சொல்லிப் போட்டேன்."

"என்னைக் கேட்காமல் ஏன் சொல்ல வேணும்?"


பக்கம் 84

"ஓ... நீ பெரிய ஆளில்லே, உன்னைக் கேட்கிறதுக்கு. எனக்கு ஏறிச்சிது என்றால்..." தான் பின்னிவிட்டட செல்லத்தின் பின்னலைப் பிடித்து இழுத்தாள்.

"அம்மா, நீ பின்னி விட்டதை நீயே குலைக்காதே" செல்லம் சொன்னாள்.

"அது என்ரை விருப்பமடி"

"பின்னினது நீதான், தலை என்ரைதானே?"

"பெத்ததை மறந்து போனீயே. உரிமை எனக்குத்தானடீ"

"நானென்ன காணியோ, பூமியோ, உறுதி காட்டி உரிமை பாராட்ட?"

"அப்ப உனக்கு நான் தேவையில்லை"

"மற்றவர்களை நாங்கள் நம்பி வாழவேண்டி இருக்கிற படியால்தானே எங்கள் வாழ்க்கையை இப்படிப் பாழாக்கிறியள்."

"ஏனடி, அப்பிடிச் சொல்லுகிறாய்? நீ நல்லாயிருக்கிறதற்குத்தானே எல்லாம் செய்யிறன். அவன் கவன்மேந்து வேலை. வடிவான பொடியன்.
சொந்த மச்சான். கரும்பு தின்ன என்னடி கூலியே வேணும்?"

"கரும்போ, வேம்போ என்று உனக்குத் தெரியுமே?" அவர்களது பாதி உரையாடலின் போதே வந்த மகாதேவன் இப்பொழுது உள்ளே வந்தான்.

"அம்மா, அவன் கரும்பு இல்லை. கருந்தேள். கூலியும் குடுத்து, எங்கடை கரும்பையும் நாங்கள் குடுக்கப் போறம், அவன் குதப்பி எறிய. ஏனம்மா உனக்கு இந்த எண்ணம்?"

"பார்த்தியே அண்ணே, எனக்குக் கலியாணம் வேண்டாம். அம்மாவைப் பேசாமல் இருக்கச் சொல்லு."


பக்கம் 85

"இரண்டு பேரும் ஒரு கட்சியே! டேய், இவள் பொம்பிளையின்ரை பேச்சைக் கேட்டு நீ..."

"நீ என்ன ஆம்பிளையே?" செல்லம் கேட்டாள்.

"பார் பார், அவளின்ரை வாயைப் பார். நெருப்புக் கொள்ளி வைக்கோணும். எல்லாம் நீ குடுக்கிற இடமடா. என்ரை ஒரு சொல்லுக்கு மதிப்பில்லை. தாய் பொழிந்து கொண்டு இருந்தாள். செல்லம் வீட்டு வேலைகளைக் கவனிக்கச் சென்று விட்டாள். மகாதேவன் கிணற்றடியை நோக்கி நடந்தான். அவன் ஒரு வாளி நீரை அள்ளித் திரும்பிய பொழுது தேவி அவன் முன்னே நின்றாள். அவன் முறுவலித்தான். அவளும் பதிலுக்கு நகைத்தாள். அவன் அவள் வாளியில் தண்ணீரை அள்ளி ஊற்றினான்.

"டீச்சர் சோதனைக்கு அப்பிளை பண்ணினனான். உன்ரை காசு இரண்டு மாசத்திலே தந்து போடுவன்."

"அதைப் பற்றிக் கவலைப்படாதே. முதலில் வேலை கிடைக்க வேணுமே!"

"தேவா, கேட்கிறனென்று கோவிக்காதே. எதை எதிர்பார்த்து எனக்கு நீ உதவி செய்கிறாய்?" தேவன் அவளை வெறித்துப் பார்த்தான். எதுவும் பேசாமல் அவன் நடந்தான்.

"தேவா..." அவன் நின்றான்.

"என்ன?" அவன் குரல் கடுமையாக இருந்தது.

"நீ கோவிச்சிட்டாயே?" அவள் குரல் பரிதாபமாக இருந்தது.

"நீ அப்பிடிக் கேட்டிருக்கக் கூடாது."

"இன்னும் கனபேர் இப்ப எனக்கு உதவி செய்ய வருகினம்."


பக்கம் 86

"அப்ப என்ரை உதவி தேவைப்படாது."

"அவை எதையோ எதிர் பார்க்கினம்."

"அதுதானோ அப்பிடிக் கேட்டனீ?"

"இன்னும் கோவமே?"

"தேவி, நீ எனக்கு அ, ஆ... சொல்லித் தந்தனீ. என் தலையிலே குட்டி கணக்குச் சொல்லித் தந்திருக்கிறாய். நான் அம்மா, அம்மா என்று கத்தக் கத்த முகமெல்லாம் சவுக்காரம் போட்டுக் குளிப்பாட்டியிருக்கிறாய். அப்ப எல்லாம் என்னத்தை எதிர் பார்த்தாய்?"

"தேவா" அவள் குரல் கம்மியிருந்தது.

"கள்ளங்கபடம் இல்லாத அந்த வயசிலே எவ்வளவைக் கொடுத்தாய். எவ்வளவை எடுத்தாய் என்று இலாப நட்டக் கணக்குப் பார்க்கத் தெரியாதடா. இந்த வயசு இலாபம் பார்க்கிற வயசு. கொடுக்கிற கை கூட எடுக்கிறதைக் கணக்குப் பார்த்துத்தானடா கொடுக்குது."

"தேவி, உந்தக் கணக்கை நீ எனக்குச் சொல்லித் தர இல்லையே"

"தேவா, என்னுடைய இதயமோ, அன்பு, பாசம், இரக்கம் இதையெல்லாம் இழந்து கொண்டிருக்கிறது. அவை உள்ள இதயங்கள் உலகில் இல்லையென்ற முடிவுக்கு வந்து எவ்வளவோ நாளாச்சு. என் கணக்கே நாறிப் போச்சு."

"தேவி, உன் வாழ்க்கை ஒரு நாள் மலரத்தான் போகுது. நீயும் கலகலப்பாக எல்லாரையும் போலச் சிரிக்கத்தான் போறாய். மனதைத் தளர விடாதே."

"தேவா, ´உனக்கு இனி என்னடி வாழ்க்கை´ என்ற கேள்வியைத்தான் எல்லாரும் என்னைக் கேட்கிறவை. உன்னைப் போல நல்ல வார்த்தை நாலைச் சொல்லியிருந்தாலே நான் இவ்வளவு கண்ணீர் வடிச்சிருக்கவே மாட்டேன்." அவள் பேசி முடிக்கவில்லை. அவள் கண்ணீருக்கு வேலை மீண்டும் வந்தது.


பக்கம் 87

"நானும் நெடுக, நெடுக பார்க்கிறன். இப்பவும் அங்கே இருந்து பார்த்துக் கொண்டுதான் நின்றனான். எவ்வளவு நேரமாக கிணற்றடியிலே உங்களுக்குக் கதை. தேவி, உனக்கு வெட்கம், ரோசம் கிடையாதே? அவன் இளம் பெடியன். இன்னும் கொஞ்ச நாளையிலே எங்கடை வயசை நீ எட்டிப் பிடிச்சிடுவாய். அவனோட உனக்கு என்னடி கதை? உனக்கு இனி என்னடி வாழ்க்கை? சின்னஞ் சிறுசுகளையாவது வாழவிடன்." மீனாட்சி வார்த்தைகளால் மலரை நெருப்பினால் பொசுக்கினாள். தேவி வேதனை தாங்காது ஓடினாள். ஆனால் வேதனையும் அவளோடுதான் ஓடியது. அவள் கையிலிருந்த வாளிநீர் சேலையை நனைத்தது. அவள் கன்னங்கள் எப்படி நனைகின்றன?

மீட்டாத வீணை - 9

9

பக்கம் 88


வானம் ஏனோ அழுதது. சில நாட்களில், சில நேரங்களில் அது அழும். சிலர் கண்களுக்கு என்றுமே மாரிகாலம்தானோ? தேவி வாசற்படியில் இருந்து விம்மி, விம்மி அழுதாள். வானம் அவளோடு போட்டியிட முடியாது நின்று விட்டது.

"தேவி, தேவி, ஏன் மேனை அழுகிறாய்?"

"தேவியின் வயது சென்ற பாட்டி கனிவோடு கேட்டாள். தேவியோ எதுவும் பேசாது அழுதாள். கிழவி தனது பொல்லை ஊன்றியவாறு தேவியின் அருகில் தள்ளாடித் தள்ளாடி வந்தாள். அவள் கைகள் தேவியின் தலையை வருடின.

"மோனை, விளக்கும் வைக்காமல் ஏன் மேனை அழுகிறாய்? காசு இல்லையே?"

"அம்மம்மா" தேவி கிழவியைத் தன்னோடு அணைத்த படி அழுதாள்.

"அழாதே மோனை. காசில்லா விட்டால் அழுகிறதே? நான் எவ்வளவு கஸ்டப்பட்டு உங்களை வளர்த்தனான். ஒரு நாளாவது அழுதனானே? சீ... சீ... கெட்ட பழக்கம். எழும்பு பிள்ளை. போய் விளக்கை வை."

"அம்மம்மா... எங்களை ஏனம்மா வளர்த்தனீ?" கிழவி, அழும் தேவியின் கண்ணீரைத் துடைத்தாள்.


பக்கம் 89

"எனக்கில்லே கண் சீராகத் தெரியாதாம். இல்லையென்றால் நானே விளக்கு கொழுத்திப் போடுவன். மோனை, மண்ணெண்ணெய் வாங்கக் காசில்லையே? இஞ்சை பாரன் மோனை, என்ரை தோடு இரண்டு கிடக்குது இல்லே..."

" அம்மம்மா" தேவி தன் தலையைக் கிழவியின் மடியில் வைத்துக் குழந்தையைப் போல் அழுதாள்.

"மீனாட்சியக்கையவை வேலியை அடைச்சுப் போட்டீனம். அங்க தண்ணியள்ள வரக் கூடாதாம்."

"என்னடி கதையிது? உவள் மீனாட்சி எப்ப வந்தவள் வேலியடைக்க? எடியே மீனாட்சி, மீனாட்சி? கிழவியின் குரலில் எங்கிருந்து அவ்வளவு சக்தி வந்ததோ தெரியவில்லை.

"வேண்டாம் அம்மம்மா"

"எடி, என்னை விடடி." கிழவி தேவியை உதறி விட்டு வேலியை நோக்கி நடந்தாள்.

"எடியே மீனாட்சி" கிழவி கத்தினாள்.

"யாரங்க சத்தம்?" மீனாட்சி வெளியில் வந்து பதிலுக்குச் சத்தமிட்டாள். கிழவிக்குக் கண்ணும் நன்றாகத் தெரியாது. இருட்டு வேறு. அவள் வேலியைப் பிடித்துக் கொண்டு கத்தினாள்.

"ஆரைக் கேட்டடி வேலி அடைச்சனி? மரியாதையாக எங்கடை பாதையை விட்டிடு. இல்லை...?"

"என்ன கிழவி, பயப் படுத்திறாய். என்ரை வேலியை அடைக்க உன்னைக் கேட்க வேணுமோ?" மீனாட்சி கேட்டாள்.

"எடியே, உந்தக் கிணறு என்ரை அவரும், உன்ரை கொப்பனும் சேர்ந்து வெட்டினதடி. நீ யாரடி எங்களைத தடுக்க?"


பக்கம் 90

"தண்ணி எடுக்க வாரீpங்களோ? இல்லை இஞ்சை மாப்பிள்ளை தேடுறியளோ? உன்ரை பேத்தியைக் கொஞ்சம் அடக்கி வை."

"அடியே, என்ரை பேத்தியையும் தெரியும். உன்ரை ஆட்டமும் தெரியும். சொன்னால் உன்ரை பெடியள் கிணத்துக்க விழுந்திடுங்கள்." மாறி மாறி இருவரும் வசைமாரி பொழிந்தனர். சில நிமிடங்களின் பின் கிழவி தன் கைப்பொல்லால் வேலியை அடிக்க ஆரம்பித்தாள். மட்டைகள் கீழே விழுந்தன. வேலி வழிவிட ஆரம்பித்தது. கிழவியின் கையிலிருந்த பொல்லுக்கும், அதை விட வலிமையான அவளது நாவுக்கும் பயந்து மீனாட்சி தூரவே நின்று சத்தமிட்டாள். கிழவியைத் தடுக்க வழியின்றித் தேவி நின்றாள். செல்லமோ ´அம்மாக்கு உதுவும் வேணும், இன்னும் வேணும்´ என்று எண்ணியவாறு அடுக்களையில் வேலையாக இருந்தாள். வேலியைப் பிரித்த கிழவி சும்மா இருக்கவில்லை.

"எடியே, உந்தக் கிணற்றிலே நானும் தண்ணியள்ளுகிறதுதான். ஏலுமென்றால் நிற்பாட்டிப் பார் பார்ப்பம்." கிழவி கைத்தடியை அங்குமிங்கும் சுழற்றியவாறு நடக்க ஆரம்பித்தாள். கிழவியைத் தடுக்கத் தேவி வேலியைத் தாண்டி வரவேண்டியிருந்தது.

"விடு மேனை என்னை" என்று சொல்லியபடி கிழவி நடக்க ஆரம்பித்தாள். மீனாட்சிக்கோ ஆத்திரம் தாங்க முடியவில்லை.

"குறுக்கால போக. நீங்கள் நாசமாகப் போக" என்று மண்ணை வாரி தேவி மீது அவள் வீசினாள். தேவியின் உடலெங்கும் மண். அவள் கண்களைத் திறக்க முடியாது தவித்தாள். கிழவியோ கண்டவாறு பேசிய படி கிணற்றடியை நெருங்கி விட்டாள்.

"மீனாட்சியக்கை சும்மாயிருங்கோ. அம்மம்மா இல்லே கிணற்றடிக்குப் போகிறா." தேவி கண்களைத் துடைத்தவாறு தவித்தாள். மீனாட்சிக்கு அவள் தவிப்பு மேலும் உற்சாகத்தை அளித்தது.


பக்கம் 91

"நாய்கள், நாய்கள், பொறுக்கி நாய்கள் தொலைஞ்சு போங்கோ." அவள் கற்களாலும் வீச ஆரம்பித்தாள். அடுக்களையிலிருந்த செல்லம் விசயம் விபரீதமாவதை உணர்ந்து தாயைத் தடுக்க ஓடி வந்தாள். இதற்குள் கிழவியோ துலாக்கயிற்றை ஒருவாறு தேடிப் பிடித்தாள்.

"வரச் சொல்லடி பார்ப்பம். அவளை. வந்து தடுக்கச் சொல்லடி. இது நெல்லுக் குத்தின கையடி. என்ன நினைச்சாள் உவள்" கிழவியின் குரலும் வாளியின் ஓசையும் தேவியின் காதுகளில் விழுந்தன.

"அம்மம்மா, நீங்கள் அள்ளாதேங்கோ. நான் வாரன்." தேவி கத்தியவாறு கிணற்றடியை நோக்கி ஓடினாள். அதற்குள் கிழவி துலாவைத் தாழ்த்தினாள். வாளி ஆழமான கிணற்று நீரில் முட்டி மோதியது. அந்த ஓசை கிழவியின் போராட்டத்தின் வெற்றியை அவளுக்கு அறிவுறுத்தின. அவள் வளைந்த முதுகை நிமிர்த்தினாள். வெற்றிக் களிப்பு அவள் கண்களில் விளையாடியது.

"எடியே பிள்ளை, வாளியைக் கொண்டு வா தண்ணி வார்க்க" அவள் தேவியை அழைத்தாள்.

"நீர் நிரம்பிய வாளி கிணற்றின் விளிம்பை அடைந்தது. கிழவி குனிந்து வாளியைத் தூக்க முயன்றாள். முடியவில்லை. அது விளிம்போடு மோதியபடி நின்றது. கிழவிக்கோ தோல்வியை ஒத்துக் கொள்ள முடியவில்லை. நன்றாகக் குனிந்தாள். வாளியை இழுத்தாள். வாளி வேகமாக வெளியே வந்தது. துலா ´படாரென´ மரத்தோடு மோதியது. கிழவி தடுமாறினாள். கிணற்றின் விளிம்பை நோக்கி அவள் கால்கள் வழுவிச் சென்றன. மறுகணம் அவள் ஆழமான அக்கிணற்றின் அடித்தளத்தில் கிடந்தாள். தேவி ´வீலென´ அலறினாள். அவளைத் தொடர்ந்து செல்லம் "ஐயோ" எனக் கத்தினாள். ஓரு கணம் சிலையாக நின்ற மீனாட்சியும் "கடவுளே" எனக் கூக்குரலிட்டாள்.

பக்கம் 92


"என்ன, என்ன நடந்தது?" பதறியபடி நொண்டி, நொண்டி அப்பொழுதுதான் வந்த கோபால் அங்கு வேகமாக வந்தான். கிணற்றைச் சுற்றி நின்ற மூன்று பெண்களும் கத்தினார்கள்.

"அம்மம்மா கிணத்துக்கையடா..." தேவி அலறினாள். கோபாலின் உடல் துடித்தது. கிணற்றின் விளிம்புவரை அவன் சென்றான். அவனுடல் நடுங்கியது. "அம்மம்மா அம்மம்மா" ´ஐயையே, என்னாலே இறங்கவும் ஏலாதே´ அவன் பதறினான். இயற்கையின் கொடுமை அன்றுதான் அவனிதயத்தை ஆழமாகக் கூறு போட்டது.

"டேய், சும்மா நிற்காதேடா. யாரையாவது கூப்பிடடா." தேவி அழுதழுது வேண்டினாள்.

"ஐயோ அண்ணனும் எங்கேயோ போட்டுதே" செல்லம் பதை பதைத்தாள்.

கோபால் கண்களில் கண்ணீர் பெருக வலது காலை இழுத்து, இழுத்து வெளியே ஓடினான். தூரத்தில் இளங்கோ வந்து கொண்டிருந்தான். கோபாலின் கண்களில் ஒரு நம்பிக்கை ஒளி தெரிந்தது.

"இளங்கோ, இளங்கோ..."

நடந்து வந்த இளங்கோ கோபாலின் குரல் கேட்டு ஒரு கணம் நின்றான். அவனால் நடக்க முடியவில்லை. அவன் கண்களில் வெறுப்பும், அருவருப்பும் வியர்த்திருந்த முகத்தை இன்னும் கோரமாக்கின. ´இந்த நன்றி கெட்டவனோட எனக்கென்ன கதை. கதைச்சாலும் கை வைக்க வேண்டித்தான் வரும். பேசாமல் எங்கேயாவது போயிட்டு பிறகு வருவம்.´ இளங்கோ இந்த முடிவோடு திரும்பி நடந்தான். கோபால் திகைத்தான்.

"இளங்கோ, இளங்கோ நில்லடா. டேய், டேய் இஞ்ச வாடா" இளங்கோ வேகமாக நடந்தான். கோபால் கால்களை இழுத்தபடி பின்னால் ஓடினான்.

பக்கம் 93

"டேய், டேய் அம்மம்மா கிணத்துக்க விழுந்திட்டாடா. வாடா" கோபால் கத்தினான். தெருவில் ஓடிய ´டிராக்டர்´ சத்தத்தில் அவன் குரல் அமிழ்ந்தது. அதற்குள் இளங்கோ அடுத்த தெருவில் திரும்பிப் போய் விட்டான். கோபால் ஒழுங்கை மணலில் விழுந்து, விழுந்து அழுதான். என்றுமே சிரித்துக் கொண்டிருக்கும் கோபால் அன்று அழுதான்.

இளங்கோ கோயிற் கிணற்றில் நன்கு குளித்தான். நாளெல்லாம் உழைத்த களைப்பு உடலை விட்டு மறைந்து விட்டது. ஆனால் உள்ளத்தில் ஒரு சோர்வு. அவன் மனதில் மகிழ்ச்சியில்லை. ´இளங்கோ, இளங்கோ´ கோபாலின் கீச்சுக் குரல் . அதுவும் அவலமான ஒரு குரலாக அவன் காதில் ரீங்காரமிட்டது. ஏன் அப்பிடி அவன் கூப்பிட்டவன்? மனதை ஏதோ அரித்தது. அவன் வீட்டை நோக்கி நடந்தான். தூரத்தே ´பெற்றேமாக்ஸ்´ விளக்கோடு சைக்கிளில் யாரோ வந்தார்கள்.

"டேய் இளங்கோ, எங்கேயடா போனனீ? ஒரு கையில் விளக்கோடு, மறுகையால் பிரேக்கை அழுத்தினான் மகாதேவன்.

"என்ன மச்சான் விளக்கோட?" இளங்கோ கேட்டான்.

"உனக்கு விசயம் தெரியாதே? கோபாலின்ரை அம்மம்மா இல்லே கிணத்துக்க விழுந்து போச்சு"

"என்னடா!" இளங்கோவின் காதில் கோபாலின் குரல் மீண்டும் ஒலித்தது. அவன் இதயத்தை யாரோ இரு கைகளால் பிசைவது போல் இருந்தது.

"ஏறி விளக்கைப் பிடியனடா" மகாதேவன் அவசரப் படுத்தினான். இளங்கோ சைக்கிள் பாரில் ஏறியமர்ந்தான். வழியில் மகாதேவன் தனக்குத் தெரிந்ததை விளக்கினான்.


பக்கம் 94

"நானும் வீட்டை நிற்க இல்லை மச்சான். நல்ல காலத்துக்கு, பெண்டுகளின்ரை சத்தங் கேட்டு அயலுக்க இருந்து நாலைஞ்சு பேர் வந்தவையாம். அதுகளில்லையென்றால் அந்தப் பெண்கள் என்ன செய்யும்? பாவம், கோபால் காலும் ஏலாது கிழவியிலே சரியான பாசமடா. மனுசிதானே வளர்த்து ஆளாக்கினது. கதறிக் கொண்டிருக்கிறான். பார்க்க ஏலாமலிருக்கடா"

அழுகுரல் இப்பொழுது நன்கு கேட்டது. பெண்களின் அழுகுரலையும் மீறிக் கொண்டு அந்த ஆண் குரல் நெஞ்சைப் பிளந்தது.

"அம்மம்மா... என்ரை அம்மம்மா... என்னைத் தூக்கி வளர்த்தியே, உன்னைத் தூக்கக் கூட ஏலாமல் நின்றேனே. என்ரை அம்மம்மா... என்னை விட்டுப் போனீயே..."

விளையாட்டு, வேடிக்கையென்று நாளெல்லாம், பொழுதெல்லாம் ஊரெல்லாம் சிரிக்க வைக்கும் கோபால் அப்படிக் கதறுகிறான். கூவும் குயிலோசை நமக்கு இனிதே. அது சோகக் கீதமா, இல்லை இன்பச் சங்கீதமா என்பது குயிலுக்குத்தானே தெரியும். பெண்கள் பலர் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்தவாறு ஒப்பாரி வைத்தனர். தங்கமும் அங்கிருந்தாள். ஏன்? மீனாட்சி கூட சேர்ந்தழுதாள். செல்லமும் கண்ணீர் வடித்தாள். ஆனால் தேவி அழவில்லை. அவள் கண்கள் அந்த மனிதர்களையே பார்த்தன. ஏன அவர்கள் அழுகிறார்கள்?

கிழவியின் மறைவு அவ்விதயங்களை நெகிழ வைத்ததா? கன்னி இவள், இனித் தனிய என்ன செய்வாளென எண்ணி மனம் நொந்தார்களா? உயிரோடு இருக்கையில் வாழ்க்கையிலெ உதவாத இம்மனிதர்கள் உணர்ச்சியற்ற உடலைப் பார்த்து ஏன் அழுகிறார்கள். அவள துயரத்தில் என்றுமே பங்கு கொள்ளாத இவர்கள் இன்று மட்டும் ஏன் ஓடி வந்தார்கள்? உதடுகளில் ஒப்பாரி, உள்ளங்களோ உறியில் வைத்த கறியில், பெட்டகத்தில் பூட்டி வைத்த பணத்தில், மற்றவர்


பக்கம் 95

வாழ்வை நினைத்துப் பொறாமைத் தீயில்! சாவீடு கல்யாணம் பேசும் சந்தையாகும். நரம்பில்லா நாக்குகள் அங்கு பல கூடும். கன்னியர் வாழ்வைக் கெடுக்க பல கதைகள் தேடும்! சுடுகாட்டில் கிழவியின் உடல் எரியும்! சாவீட்டில் உயிரோடு உள்ளவர்களின் வாழ்வு.

இதற்குத்தான் இங்கு கூடுகிறார்களா? நாளை தங்கள் வீட்டுக்கு நாலு மனிதர்கள் வரவேண்டும் என்று கூறுகிறார்கள்: அவர்கள் கண்ணீரெல்லாம் பொய்யா? கடந்து போன தங்கள் வாழ்வில், கவலை நிறைந்த காலங்களை நினைத்தும் கண்ணீர் வடிக்கிறார்கள். ´ஐயோ நாளை நானும் இறந்து விடுவேனே´ என்று பயந்து கண்ணீர் வடிக்கிறார்கள். தேவி - அவளுக்காக இங்கு எத்தனை பேர் அழுகிறார்கள்?

அவர்கள் அழுகிறார்கள். ஏன் அவள் அழவில்லை? ஏன் அவள் அழ வேண்டும்? கிழவிதான் செத்த வீட்டுச் செலவுக்குத் தன் தோட்டை விட்டுப் போனாளே.

-------------------------------------------------------

எட்டு வீடும் முடிந்து விட்டது. இனி எட்டிக் கூட அங்கு பார்க்க யாரும் இல்லை. தேர்தல் முடிந்த பின் வாக்காளருக்கு ஏற்படும் நிலைதான். அவள் வீட்டிற்கு இருந்த ஒரே சட்டையும் கிழிந்து விட்டது. தேவி சேலையைப் போர்த்திக் கொண்டு தன் கிழிந்த சட்டையைத் தைத்துக் கொண்டிருந்தாள். அவள் தையல் மெசின் ஓசையைத் தவிர வேறு ஓசை அங்கில்லை. குனிந்த தலை நிமிராது அவள் தைத்துக் கொண்டிருந்தாள். அவள் சட்டையில்லா மேனியழகை இரு விழிகள் பருகுவதை அவள் காணவில்லை. அவள் தலையை நிமிர்த்திய போதுதான், அவரும் தொண்டையைச் செருமினார். துள்ளி எழுந்த தேவி கதவுக்குள் ஒளிந்தளர்.

"ஏன் தேவி பயப்படுகிறாய்? நல்ல காரியமாகத்தான் வந்தனான்."


பக்கம் 96

தேவி அவசர, அவசரமாகச் சட்டையை மாட்டிக் கொண்டாள். அவள் வெளியில் வராமலே பதிலைச் சொன்னாள்.

"தம்பி தியேட்டருக்குப் போயிட்டான்"

"ஓ தெரியும். அம்மம்மா செத்தது உனக்குப் பெரிய கவலைதான். நடக்கிறது நடந்துதானே தீரும். அவள் தன் கழுத்தைத் தடவிக் கொண்டாள். ´நடக்க வேண்டியவை நடப்பதில்லையே´ என்றது மனம்.

"நான் வருவேனென்று நீ நினைச்சிருக்க மாட்டாய். என்னமோ மனம் கேட்கவில்லை. பாவம் நீயும் ஒரு பெண் பேதை. என்ன செய்வாய்?"

மற்றவர்களின் அனுதாபம் சில சமயங்களில்தான் உள்ளங்களுக்கு ஆறுதலைத் தருகின்றன. தேவிக்கு ஏனோ அந்தச் சமயத்தில் அது எரிச்சலைத்தான் தந்தது. ´இந்த மனிதருக்கு ஏன் இந்தக் கவலையெல்லாம்´ அவள் நினைத்தாள். அவரோ கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்தார்.

தேவி, உன்னை நான் தேர்த்திருவிழா அன்று பார்த்தனான். வேலுப்பிள்ளையர்தான் உன்னைப் பற்றிச் சொன்னார். எனக்கென்னமோ உன்னிலை ஒரு பரிவு வந்திட்டுது. அதுதான் உன்ரை தம்பிக்கும் என்ரை தியேட்டரிலே வேலை கொடுத்தனான்." கணபதிப்பிள்ளையர் கனிவோடு சொன்னார்.

"இப்ப ஒருத்தரும் வீட்டிலே இல்லை. நீங்கள் தம்பி இருக்கைக்க வாங்கோவன்" தேவி சொல்லி விட்டு நாக்கைக் கடித்தாள்.

"இல்லை உன்னோட தனியாகப் பேசத்தானே வந்தனான். இது விசயமாகத் தங்கத்தை உன்னட்டை அனுப்பி வைக்கப் பார்த்தனான். அவளின்ரை பெடியனைப் பற்றி

பக்கம் 97

ஊரிலே நல்ல கதையில்லை. பிறகு அது எனக்கும் கூடாதென்றுதான் அவனுக்கு வேலையும் கொடுக்கவில்லை." அவரது சுற்றி வளைத்த பேச்சு அவளுக்குப் புரியவில்லை.

"தேவி, உனக்கும் ஆரும் இல்லை. எனக்கும் ஒரு துணையில்லை."

"தயவு செய்து நீங்கள் போறீங்களே?" அவள் கேட்டாள்.

"நான் சொன்னது விளங்கிச்சே?"

"இதுக்கு மிஞ்சி விளக்கம் வேண்டாம்." அவள் கதவுக்கு வெளியே வந்தாள். "எரியிற வீட்டிலே பிடுங்கிறது லாபமென்று பார்க்கிறியள்." அவரோ நிதானம் தவறவில்லை. மெல்லச் சிரித்தார்.

"தேவி, வலிய வார சீதேவி - எனக்கொன்றும் அவ்வளவு வயசாக இல்லை. நிரந்தரமாக ஒரு துணையைத் தேடி கனகாலமாக நானும் திரியிறன். உனக்கோ இனி என்ன வாழ்க்கை?" தேவிக்கு தலையில் சம்மட்டியால் அடிப்பது போலிருந்தது.

"என்னைப் போல ஆராவது கிடைச்சால் சரி. இல்லையென்றால் குளமோ... குட்டையோ..." அவர் தொடர்ந்தார்.

"நிற்பாட்டுங்கோ. ஆறுதல் சொல்ல வந்தனீங்களோ? ஆசையைத் தீர்க்க வந்தனீங்களோ? இப்ப வாங்க வந்தது நீங்கள். விற்க நான் தயாரில்லை. அந்த விலை உங்களால் தர முடியாது."

"தேவி கார், பங்களா, காசு, பணம் எனக்கு இருக்கிற மாதிரி இந்த ஊரிலே ஆருக்கும் இல்லை."

பக்கம் 98

"இதயம், பாசம், பண்பு இது இருக்கிறவன் ஏழையில்லை. எண்பது வயதைத் தாண்டினாலும் எனக்குத் துணையாக இருக்கலாம். ஆனால் நீங்கள்... சீ... போங்கோ." கணபதிப்பிள்ளையர் புன்னகையோடு எழுந்தார்.

"இலாபமும், நட்டமும் வாழ்க்கையிலே இயற்கை. இப்ப எனக்கு மாத்திரம் நட்டமில்லை. உனக்கும்தான். மனம் மாறினால் சொல்லி அனுப்பு. காரை அனுப்புறன். இல்லை ஒரு முழக்கயிறுதான் வேணுமென்றால்... அது உன்ரை தலைவிதி." அவர் எழுந்து நடந்தார். அவர் படலையருகில் சென்றதுதான் தாமதம், தேவி சத்தமிட்டாள்.

"நில்லுங்கோ"

"தேவி" ஆசையோடு அவர் திரும்பினார். அதே சமயம் மீனாட்சியின் கண்கள் வேலியினூடே அக்காட்சியை இரசித்தன. ஆனால் அதற்குள் மகாதேவன் வந்தான். படத்தின் ´கிளைமாக்ஸ்´ காட்சியில் ரீல்ஸ் அறுந்த கதை போலாயிற்று மீனாட்சிக்கு. படக்கதை புரியாவிட்டாலும் ஒரு புதுக்கதையை மீனாட்சியால் உருவாக்க முடியாதா? அவன் மனமின்றி வேலியைப் பிரிந்து சென்றாள். இந்த வேலிகள்தான் எங்கள் பெண்களின் பொழுது போக்குச் சாதனம்.

"இந்தக் காசை ஏன் வைச்சிட்டுப் போறியள்?" தேவி தையல் மெசின் மேசையிலிருந்த பணத்தைக் காட்டினாள்.

"ஓ... அது உனக்குத்தான்."

வியாபாரமே நடக்க இல்லையே. அட்வான்ஸ் எதுக்கு. ?" அவள் கேட்டாள்.

அது அந்த வியாபாரத்துக்கு இல்லை. எனக்கு நீ காட்சியளித்ததற்கு, கதைத்ததற்கு."


பக்கம் 99

"ஓ, அப்படியென்றால் உங்கடை தியேட்டரிலே கடனுக்கு படம் காட்டிரியளோ?" அவருக்குப் புரியவில்லை. அவர் விழிகளை உருட்டினார். மடித்த நூறுரூபாய் நோட்டு அவர் முகத்தில் வந்து விழுந்தது.

"உங்கடை மகள், என்ரை தம்பிக்கு அடிக்கடி காட்சி தாராளாம். அவன் ஏழை. வீணாக நட்டப் படாதேங்கோ."

கணபதிப்பிள்ளையரின் கண்கள் கோபத்தால் சிவந்தன. அவர் ஓங்கி, படலையைச் சாத்தி விட்டு நடந்தார். அடுத்தடுத்து வீட்டு வாசல்களில் பல உருவங்கள் அவரை வியப்போடு நோக்கின.

மீட்டாத வீணை - 10

10
பக்கம் 100

இருள் சூழும் நேரம். அமைதி, பயங்கரமான அமைதி. கிழவியின் இருமல் ஒலியோ, முனகல் ஒலியோ, முணுமுணுப்போ இப்பொழுது இல்லையே. இனந்தெரியாத பயம் தேவியின் இதயத்தில் பரவுகிறது. தனிமை, மிக மிகப் பயங்கரமானது. பள்ளிக்கூட விடுமுறை. பிள்ளைகள் கூட படிக்க வருவதில்லை. செல்லம், தேவியோடு பேசுவதும் தடை செய்யப் பட்டது. ஊரெல்லாம் அவளைப் பார்க்கும் பார்வை, பார்த்த பின் தமக்குள் அவர்கள் பேசும் பேச்சு - செய்யாத தவறுக்கு அவள் தண்டனை அனுபவித்தாள். வீட்டுக்குள் அவளால் இருக்க முடியவில்லை. கோபால், இரண்டு நாட்களாக வீட்டுக்கு வரவேயில்லை. படலையருகில் அவள் நின்றாள். வேலை முடிந்து, கோயிற் கிணற்றில் குளித்து விட்டு இளங்கோ ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டு வந்தான்.

"தம்பி, இளங்கோ இஞ்ச ஒரு விசயம், வந்திட்டுப் போறியே!" தேவி அவனை அழைத்தாள்.

"தம்பி, இவன் கோபால் தியேட்டருக்குப் போனவன். இரண்டு நாளாக வரவில்லை."

அவள் குரலில் பயம் தொனித்தது. இளங்கோவின் முகம் மாறியது.

"அவனோட நான் கதைக்கிற இல்லை."

"எனக்குத் தெரியும் தம்பி. எனக்காக, அவனை ஒருக்காப் போய் பார்க்க மாட்டியே?"



பக்கம் 101

அவள் ஏக்கத்தோட கேட்டாள். அவன் பேசவில்லை. அவள் கண்களில் கண்ணீர் நிரம்பியது. வேறு யாரோ தெருவோரம் போனார்கள். அவள் கூப்பிட்டாள்.

"கந்தசாமி அண்ணையே, இஞ்ச ஒருக்கால் வந்திட்டுப் போங்கோ"

"என்ன பிள்ளை?" அவர் கேட்டார்.

"அண்ணே எங்கடை கோபாலைக் கண்டனீங்களே?"

"இல்லை பிள்ளை" அவர் வேகமாக நடந்தார். அவளோடு பேசவே ஆண்கள் பயந்தார்கள். காரணம் பெண்கள்தான். இளங்கோ இன்னும் நின்றான்.

"தம்பி, தனிய இரவிலே எப்பிடி... அவன்... அவன் கொஞ்சம் கூட யோசனையில்லை."

அவள் விசித்து, விசித்து அழுதவாறே உள்ளே போனாள். இளங்கோவின் மனதை ஏதோ அரித்தது. கோபாலைத் தேடி அவன் போவதா? அதுவும் கணபதிப்பிள்ளையர் வீட்டிற்கா? அவன் தன்மானம் மனிதத் தன்மையை மறைத்தது.

கப்போடு சாய்ந்தவாறே அவள் நிலத்திலிருந்தாள். கன்னத்தில் அவள் கைகளிரண்டும் பதிந்திருந்தன. விரல்களினிடையே அவள் விழி, நீர் ஓடியோடி இப்பொழுது காய்ந்து விட்டது. எரியாத அடுப்பொன்று அருகே. எரிகின்ற உள்ளமோ அவளிடத்தே இருட்டு. இதுதான் அவளுக்குப் பழக்கமானது. கண்களை மூடினாள். அப்பொழுதும் இருட்டுத்தான். மூடிய கண்கள் மூடியே இருந்து விட்டால்...?

குளமோ, குட்டையோ ஒரு முழக் கயிறோ...? சே... அவளுக்கென்று யாரும் வேண்டாம். அவளுக்காக பேசக் கூட ஒருவரும் இல்லையா?பனையோலைகள் பயங்கரமாக ஓர் ஓசையை ஏற்படுத்தின. காற்றினால் புழுதி அவள்




பக்கம் 102


உடலெங்கும் வாரி இறைக்கப் பட்டது. அவள் அந்த அரசடியைப் பொறுத்த வரையில் புழுதியில் விழுந்த பூமாலைதானே.

சே... என்ன வாழ்க்கை? என்ன மனிதர்கள்? என்ன செய்ய முடியும்? விரக்தியும், வெறுப்பும் சேரும் போது ஒருவித வெறி ஏற்படுகிறது. ஏன் நான் அழ வேணும்? என்னைப் பற்றி இல்லாத பொல்லாததைக் கதைக்கிற இந்த மனிதர்களை பழி வாங்க வேணும். அழ வைக்க வேணும். அவள் போராடினாள். ´சொந்தத் தம்பியே வர இல்லையே! இனி எனக்கு ஆர்? என்ரை வாழ்க்கை என்ன மாதிரி இருக்கப் போகுது?´ அவள் முன்னால் இருட்டுத்தான் இருந்தது.

"தேவி, தேவி" மெல்லிய அந்தக் குரல் மெதுவாக அவளை அழைத்தது. தேவியின் உள்ளத்தில் ஒரு புத்துணர்ச்சி. உடலிலே ஒரு படபடப்பு. அவள் எழுந்தாள்.

"விளக்கைக் கொளுத்த நெருப்புப் பெட்டியும் இல்லை" அவள் சொன்னாள்.

"விளக்கு வேண்டாம்"

"தேவா"

"தேவி, அம்மாக்குத் தெரியாமல் வந்தனான். பலத்துக் கதைக்காதே." அவன் அவளுக்கு மிக அருகில் நின்றான்.

"தேவா, ஏன் அப்பிடி வந்தனீ?"

"தேவி, இன்று முழுக்க நீ தண்ணி அள்ள இல்லை. அடுப்படியாலே புகையே வர இல்லை. விளக்கு எரிய இல்லை. நீ இருக்கிறீயோ இல்லை செத்துப் போனீயோ என்று பார்க்க வந்தனான்." அவன் குரல் தழுதழுத்தது.

"தேவா, நீ ஒருத்தனாவது என் நினைவோடை இருக்கிறியே" அவள் அழுதாள்.


பக்கம் 103


"சும்மா அழாதே தேவி. எவ்வளவு நாளைக்கு இப்பிடி அழுகுறது? அடுப்படிக்க போ சொல்லுறன்."

இருவரும் அடுக்களைக்குள் நுழைந்தார்கள்.

"தேவி, உனக்கு இடியப்பம் கொண்டு வந்தனான். சாப்பிடு." தேவியின் உடல் சிலிர்த்தது. அவளுக்கா அன்பு காட்ட யாருமில்லை? உலகத்திலுள்ள உள்ளங்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்தால் கூட அவனுடைய அன்பைச் செலுத்த முடியாதே. ஆயிரம் உறவுகள் இருந்தென்ன! உண்மை அன்பிலே உருவாகும் ஒர் உறவுக்கு அவை ஈடாகுமா?

"தேவா, தேவா" நன்றிப் பெருக்காலும் கண்ணீர் பெருகலாம். அவன் அவள் கண்ணீரைத் துடைத்தான். அவள் தடுக்கவில்லை. அது அவளுக்குத் தேவைப் பட்டது. கண்ணீரைத் துடைக்க கரமிருந்தால் அது பெருகினாலும் இன்பமே.

"சாப்பிடு தேவி" அவன் உரிமையோடு சொன்னான். இருட்டில், அவள் இடியப்பத்தையும் கறியையும் கலந்தாள். ஒன்றோடு ஒன்று இணையும் போது சுவைதான்.

"நீயும் சாப்பிடு"

அவன் மறுக்கவில்லை. அவள் குழைத்துக் கொடுத்தாள். இருவரும் சுவைத்து உண்டனர்.

"தேவி, இன்றைக்கு உன் கண்ணீரை நான் துடைக்கிறேன். எப்பவுமே கண்ணீர் வராமல் பார்க்க..."

"எனக்கு ஆர் இருக்கினம்" தேவா, இது கிடைச்சதே நான் செய்த புண்ணியம்"

"தேவி, ஊரெல்லாம் உன்னைப் பற்றி ஏனிப்பிடிக் கதைக்கிறது?"

"அதைத் தட்டிக் கேட்க யாராவது தாலி கட்டியிருக்க வேணுமே!"


பக்கம் 104

"தேவி, கோபால் எங்கே?"

“எனக்குத்தான் நிம்மதியில்லை. என்னாலே அவன் ஏன் கஷ்டப் பட வேண்டும்?”

"தேவி, அப்பிடிச் சொல்லாதே. உன்னோடு பேசுற ஒவ்வொரு நேரமும் எனக்கு இன்பமாக இருக்கு. இந்த இன்பம் நிலைக்காதா என்று ஏக்கமாகவும் இருக்கு."

"தேவா"

"தேவி, எங்களிருவருக்கம் இடையிலே ஒரு அன்புப் பாலத்தை நாங்கள் எப்பவோ அமைச்சிட்டம். அது நிரந்தரமானது. தேவி, என்னை மன்னிச்சிடு. களங்கம் இல்லாமல் ஆரம்பிச்ச இந்த அன்பு இப்ப..."

அவன் அவள் கரங்களைப் பற்றினான். அவனையறியாது கரங்கள் நகர்ந்தன. அவள் தோள்களைப் பற்றி மார்போடு அணைத்துக் கொண்டன. அவள் நடுங்கினாள். வார்த்தைகள் வரவில்லை. நாக்கு அசைய மறுத்தது. உதடுகளோ துடித்தன. அவன் அவள் காதோடு சொன்னான். இல்லை நெஞ்சோடு பேசினான்.

"தேவி, நானுன்னைக் காதலிக்கிறேன். அப்படித்தான் சொல்ல வேணும்." அவளுடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது. இதமான அவன் அணைப்பை இழக்க அவளால் முடியவில்லை. ஆனால் இதயமோ ´தவறு தவறு´ என்று அவைளக் குத்தியது.

"தேவா, தேவா... நான்... நான...ன் ..." அவள் நடுங்கினாள். அவன் மேலும் அணைத்துக் கொண்டான்.

"தேவி, நீ சொல்லத் துடிக்கிறது எனக்குத் தெரியும். என்னை விட வயசில் கூடின உன்னை நான் எப்படி மனைவியாக்க முடியும், என்று நீ ஏங்குகிறாய். தேவி, உன்னை விட இளையவனை உன்னாலே ஏற்றுக் கொள்ள முடியுமென்றால்...


பக்கம் 105

"முடியாது தேவா முடியாது"

அவள் தன்னை விலக்கிக் கொண்டாள்.

"தேவா, குழந்தையாக நீ இருக்கைக்க கன்னமெல்லாம் கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுத்திருக்கிறனடா. உன்னைக் கணவனாக நான் கனவு கூடக் கண்டதில்லையே. டேய், நீ குழந்தையடா, இன்னும் என் குழந்தையடா."

"தேவி... தேவி..." அவன் அழுதான்.

"டேய், என்னிடம் பாசமுள்ளவங்கள் இல்லையடா. இருக்கிற நீயும், பாசம் வைச்ச ஒரே காரணத்தாலே வாழ்நாள் முழுக்க என்னோடு கஷ்டப் பட வேணுமே?"

"தேவி, என்னோடு வாழுறது கஷ்டமென்று நினைக்கிறியா?"

"டேய் தேவா, என்னை விட இளமையான எத்தனையே அழகான பெண்கள் உனக்காகக் காத்திருக்குதுகள்."

"நீ யாருக்காகக் காத்திருக்கிறாய்?"

"காலனுக்காகத் தேவா. அன்புக்காக நான் ஏங்கினனான். அதை உன் ஒவ்வொரு சொல்லிலேயும், செயலிலேயும் அள்ளி அள்ளித் தந்திட்டாய். அது போதுமடா. அதை விட அதிகமாக எதிர்பார்த்தால் நான் அன்பில்லாதவள் ஆயிடுவேன்."

"தேவி, நான் உனக்குத் தகுதியில்லையா?"

"வயசிலே, வசதியிலே நான்தான் உனக்குத் தகுதியில்லை."

"நானே விரும்பேக்க...?"

"குழந்தை விரும்புறதெல்லாம் கொடுத்தால்...?"

"நான் இன்னும் குழந்தையே...?"


பக்கம் 106

"எனக்கு எப்பவுமே நீ குழந்தைதானடா"

"உன்ரை மனசை மாத்த மாட்டியே"

"என்ர வயசு மாற வேணுமே"

"தேவி, நான் ஏமாந்திட்டன்."

"இல்லை. என்னை ஏமாத்திடாதே. இது ஒரு சபலமடா. தேவா, உன் மேலே எனக்கு இருக்கிற அன்போ, மதிப்போ அணுவளவு கூடக் குறையவில்லை."

"தேவி, எனக்கோ அது ஆயிரம் மடங்கு கூடியிருக்கு. நான் தவறாகக் கேட்டிருந்தால் என்னை மன்னிச்சிடு."

"அப்பிடிச் சொல்லாதே."
அவள் அவன் தோளில் தட்டினாள். அவன் தலையைக் கோதி விட்டாள்.

"தேவி, ஆனால் என்ன உருவத்திலே உனக்கு வேணுமோ, அந்த உருவிலேயே உன் பின்னாலே வர நான் எப்பவும் தயாராக இருக்கிறேன்."

"தேவா" என்றுமில்லாத ஓர் ஆறுதல் அந்த வினாடி அவளிதயத்திற்கு ஏற்பட்டது.

ஆறுதல், அமைதி இவையெல்லாம் அவள் வாழ்வில் மின்னலெனத் தோன்றி மறைவன. வறுமையும், வற்றாத கண்ணீரும்தான் அவள் வாழ்வில் நிலையானவை. பிரகாசமான ´டார்ச்சின் ஒளி´ அவர்கள் மீது விழுந்த போது அவள் நிலைகுலைந்தாள். தேவன் தலை குனிந்தான். அவர்கள் இருவரையும் விட இதயம் ஒடிந்தவள் கையில் ´டார்ச்சுடன்´ நின்ற மீனாட்சிதான். இவ்வளவு தூரம் இரவு நேரத்தில் இருவரும் தனித்து நிற்கும் அளவிற்கு போய் விட்டதே! வழக்கமாக அவள் வாயாடிதான். ஆனால் அன்றோ வார்த்தைகள் வர மறுத்தன.



பக்கம் 107

"டேய்.... ...டேய்... பெடியன் நீயும்... கடவுளே..." தான் கட்டிய கோட்டைகள் தரைமட்டமாகும் போது ஒரு தாய் மனம் தவிக்குந்தானே!

"அடப்பாவி, இன்னும் நிற்கிறியோடா, போடா வீட்டே." அவள் கத்தினாள்.

மகாதேவன் நடந்தான். கண்களைக் கூசவைக்கும் ஒளியை அவள் முகத்தில் பாய்ச்சியவாறே மீனாட்சி தேவியை நெருங்கினாள். கண்களைக் கூசச் செய்தது, டார்ச்சின் ஒளி மட்டுமல்ல. கோபக்கனல் வீசும் மீனாட்சியின் கண்களும்தான். பற்களைக் கடித்தவாறே பயங்கரமான பெண் வேங்கையென அவள் தேவி மீது பாய்ந்தாள். ஒரு கரம் அவள் கூந்தலைப் பற்றியிழுத்தது.

"நாயே, பேயே" என பல்லோடு பல்லைக் கடித்தவாறே மீனாட்சியின் வாயிலிருந்து வந்த நெருப்புத் துண்டுகள் மறக்க முடியாதவை. திருப்பிச் சொல்ல முடியாதவை. தன் மகன் சம்பந்தப் பட்டட விடயமாதலால் அவள் பலத்த சத்தமிடவில்லை. ஆனால் அவை தேவியின் நெஞ்சைப் பலம் கொண்ட மட்டும் தாக்கத் தவறவில்லை. ´டார்ச்´விளக்கு தேவியின் முகத்தோடு ஒரு முறை மோதியது. அடுத்து கீழே விழுந்ததும் பளார், பளாரென கன்னமிரண்டிலும் இரக்கமின்றி மீனாட்சி அடித்தாள். தேவியின் கண்கள் இருண்டன. அவளைப் பிடித்துத் தள்ளி விட்டாள் மீனாட்சி. அடுக்களையின் ஒரு மூலையில் போய் அவள் விழுந்தாள். அணைக்கத் தெரியாத கரங்களுக்கு அவளை அடிக்க உரிமை இருந்தன. மீனாட்சி போய் விட்டாள். ஆனால் தேவியின் உயிர் போகவில்லையே. அவள் இன்னும் அந்த மூலையில்தான் கிடந்தாள். இன்னும் இருளில்தான் இருந்தாள். இரவும், பகலும் மாறி மாறித்தான் வரும். அவள் வாழ்வில் பகல் வரவில்லையே!


பக்கம் 108

பாவம் தேவியக்கா. மற்றவன் எப்படி நடந்தாலென்ன, நான் மனிசத் தன்மையோட நடக்க வேணும். இளங்கோ மகாலட்சுமி தியேட்டர் வாசலில் எண்ணமிட்டவாறு நின்றான். படம் ஓடிக் கொண்டிருந்தது. அவன் கண்கள் கோபாலைத் தேடிக் கொண்டிருந்தன. கோபால் வெளியே வந்தான். இளங்கோவைப் பார்த்தான். அங்குமிங்கும் பார்த்தான். ஒரு ஒதுக்குப் புறத்தை நோக்கி நடந்தான். அங்கிருந்து இளங்கோவை வருமாறு சைகை செய்தான். இளங்கோவுக்கு எரிச்சலாக இருந்தது. ஒருவனோட கதைக்கக் கூடப் பயமா? ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு கோபாலை நோக்கி நடந்தான்.

"இளங்கோ, ஆராவது வர மாட்டினமே என்று ஏங்கிக் கொண்டிருந்தனான். அக்கா எப்பிடி இருக்கிறாள்?" கோபால் முற்றாக மாறி விட்டான். சிரிப்பு, வேடிக்கை எதுவுமே இல்லை. கவலை அவன் கண்களில் குடிகொண்டிருந்தது.

"அந்த நினைவு உனக்கு இருக்குதே?" இளங்கோ கேட்டான்.

"இளங்கோ... என்னிலே உனக்கு சரியான கோவம்" இளங்கோ முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

"உன்னோடு உறவு கொண்டாட வரயில்லை. கொக்கா அங்க அழுது கொண்டிருக்கிறாள்."

கோபால் இளங்கோவின் தோள்களைப் பிடித்தான். அவன் கண்கள் கலங்கின.

"இளங்கோ, உன்னை வேண்டாமென்ற இடத்திலே நான் ஒட்டிக் கொண்டிருக்கிறேன் என்று உனக்குக் கோவம். டேய், இளங்கோ என்னைப் பாரடா" இளங்கோ பார்க்கவில்லை.

"இளங்கோ, என்னைப் பாரடா மச்சான்." கோபாலின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவன் பார்க்கவேயில்லை.




பக்கம் 109

"இளங்கோ, உனக்குத் தெரியாதடா எங்கள் நிலை"

"என்னடா தெரியாது? தொண்டை கத்திக் கத்தி உன்ரை கொக்கா படிப்பிக்கிறது தெரியாதே? தையல் மெசினைச் சுத்திச் சுத்தி அவள் சாகிறது தெரியாதே? அவள் அப்பிடிக் கஸ்டப்பட, நானும், நீயும் அந்தக் காசிலே படம் பார்த்தது தெரியாதே? டேய், உனக்கு வேலை கிடைச்சதாலே நீ என்னை மறக்கலாமடா. என்னாலேயே முடிய இல்லையேடா. கூடப் பிறந்த அவளை உன்னாலே எப்பிடி மறக்க முடிஞ்சது?"

"இவ்வளவுதானடா உனக்குத் தெரியும். இவ்வளவுதானடா எனக்குத் தெரிஞ்சிருந்தது. டேய், இது மாத்திரமில்லையடா. நானும், நீயும் தண்ணி வார்க்கிற தோட்டத்திலேயே அவள் கள்ளக் களவாகக் காய்கறி பிடுங்கிறது, உனக்குத் தெரியாதடா. அப்பிடிப் பிடுங்கப் போய் மகாதேவனிட்டை அடி வாங்கினது உனக்குத் தெரியாதடா. அவள் இரத்தஞ் சிந்தச் சிந்த நான் கண்ணீர் சிந்தினது உனக்குத் தெரியாதடா."

"கோபால்" இளங்கோ நண்பனைப் பார்த்தான்.

"டேய், அந்தக் காட்சியைப் பார்த்த பிறகுதான் உன்னை அப்பிடிப் பேசினவங்களின்ரை காலைப் பிடிச்சுக் கொண்டு வேலை செய்யிறன். டேய், அது மட்டுமில்லையடா, என் அக்கா மேலே தவறான ஆசையோட என் முதலாளி இருக்கிறான் என்று தெரிஞ்சும் கை நீட்டி நான் அவனிட்டை காசு வாங்கிறன். என்னடா பார்க்கிறாய்? ´மானம் கெட்டவனே´ என்று பேசப் போறியா? ஏழைக்கு எதுக்கடா மானம்? எழுத்திலே வைச்சுக் கொள்ளடா அதை. உடலை மறைக்கவே ஒரு துணியில்லை. மானமா? இருட்டிலே வாழ்கிற நமக்கு நேர்மையா?"

"கோபால், கவலைப் படாதேயடா. அமைதியாயிரு."

அடக்கி வைத்த துயரமெல்லாம் அணை கடந்தது. கோபால் பொருமினான்.


பக்கம் 110

"டேய், வறுமை என் அக்காவைக் கன்னியாகத்தான் காலத்தைக் கழிக்க விட்டிது. கால் வயிற்றைத்தான் நிரப்ப விட்டிது. போகட்டும்... அவளை களவெடுக்கிற அளவுக்கு விரட்டிச்சிதேடா... டேய்... டேய்... என்ன கொடுமையடா" கோபாலின் உடல் குலுங்கியது. இளங்கோ வார்த்தைகள் வராது தவித்தான்.

"டேய், உன் உடம்பிலே உரம் இருக்கடா. உன் கையிலே வலுவிருக்கடா. உனக்கு இரண்டு காலிருக்கடா. நீ உழைக்கலாம். உன் காலிலே நிற்கலாம். நான்... நான்... காலில்லாதவனடா. மற்றவன் காலைப் பிடிச்சுத்தானடா வாழவேணும்.

"கோபால், கோபால்... சிரிக்க மாந்திரந்தானாடா சிநேகிதம்? அழுகிற நேரத்தில் என்னை ஏனடா மறந்தாய்? உனக்கு வேலையும் வேண்டாம்: ஒன்றும் வேண்டாம். நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருப்பமடா. ஒன்றாகச் சாப்பிடுவமடா."

"இளங்கோ... டேய்... டேய்... அவனால் பேச முடியவில்லை. கண்களைத் துடைத்துக் கொண்டான். சில வினாடிகள் இருவரும் எதுவுமே பேசவில்லை. இளங்கோவின் கை நண்பனின் தோள் மீது இருந்தது. "வாடா வீட்டை போவம்" இளங்கோதான் கேட்டான்.

"நான் வரயில்லை. இந்தக் கிழட்டு முதலாளி என்னை என்ன கேட்டான் தெரியுமே? அக்காவைத் தனக்குக் கட்டித் தரட்டுமாம். எனக்கு ஐயாயிரம் தாரானாம். அடிச்சுக் கொன்றிருப்பேன். வீட்டுக்கு வந்த உனக்கு அன்றைக்கு என்ன சொன்னவன்? டேய், உயிர் போனாலும் இவனுக்கு ஒரு பாடம் படிப்பிக்கிறதுதான். இஞ்சதான் நான் வேலை செய்யப் போறன்." இளங்கோ எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். கோபால் வர மறுத்து விட்டான்.


பக்கம் 111

"இளங்கோ கோவிக்காதே. இந்தக் காசை அக்காட்டைக் குடு. கொம்மாவைக் கொஞ்ச நாளைக்கு அவளோட இருக்கச் சொல்லடா. என்னை இஞ்சயே இருக்கச் சொல்லி முதலாளியின்ரை ´ஓடர்´. நீ கவலைப் படாதை. இந்தப் பக்கம் வந்தால் என்னைச் சந்தியாமல் போகாதை. அக்காவைப் பார்த்துக் கொள்ளடா, பாவம் அது."

இளங்கோ விடை பெற்றான். கோபால் அவன் சென்ற பாதையையே பார்த்துக் கொண்டு நின்றான். கைகள் கண்களைத் துடைத்துக் கொண்டன.

மீட்டாத வீணை - 11

11
பக்கம் 112

"கொஞ்சம் எழும்பு பிள்ளை. மெதுவா... மெதுவா... வாயைக் கொஞ்சம் திற... ஆ... ஆ... இன்னொரு கரண்டிதானே. இதையும் குடி பிள்ளை."

ஒரு கரத்தால் தேவியை அணைத்தவாறு, மறு கரத்தால் தங்கம் மருந்தைப் பருக்கினாள். அந்த அணைப்பு, அன்பான வார்த்தைகள் அவை இருக்கும் போது தேவிக்கு ஏனந்த மருந்து?

"இப்ப என்ன செய்யிது பிள்ளை? இன்னும் கிறுதி இருக்கிறதே?"

"இப்ப எனக்கு ஒன்றும் இல்லை." தேவி சிரிக்க முயன்றாள். மயக்கம் வந்து அடுக்களையில் விழுந்ததாகத்தான் அவள் சொல்லியிருந்தாள். அவள் கன்னங்கள் வீங்கியிருந்தன. வலது கன்னம் வீங்கியதால் அவள் அகன்ற விழிகள் சிறிதாகக் காட்சியளித்தன. நெற்றியில் ஆங்காங்கே பஞ்சில் மருந்தைத் தோய்த்துத் தங்கம் ஒட்டியிருந்தாள்."

"அம்மா" இளங்கோ வந்தான். "எப்பிடி இப்ப அக்காவுக்கு?"

"காய்ச்சல் விட்டிட்டுது. இன்றைக்குச் சரக்குத் தண்ணியோட சோறு குடுப்பம்."

"இளங்கோ, உங்களுக்கு என்னாலே பெரிய கஷ்டம்." தேவி மெதுவாகப் பேசினாள்.

பக்கம் 113

"என்ன கதை இது? பிள்ளை நாங்களென்ன பிறத்தியே? நீ ஒரு சொல்லுச் சொல்லியிருந்தால் நான் வந்திருக்க மாட்டேனே...? தம்பி, வந்து சொல்லாட்டால் நீ அந்த அடுப்படிக்க தனிய கிடந்து செத்திருப்பாய்.

"இருந்தும் என்னத்துக்கு...?" தேவி முணுமுணுத்தாள்.

"அப்பிடிச் சொல்லாதை மேனை." தேவி படுத்திருந்த பாயில் அமர்ந்து தங்கம் அவள் தலையை வருடினாள். இளங்கோவிற்கே அது பொறாமையாக இருந்தது.

நான்கைந்து நாட்களாகத் தங்கம் தேவி வீட்டில்தான் இருக்கிறாள். சமையல் கூட அங்குதான். அங்கேயே அவள் படுத்துக் கொள்வாள். இளங்கோ மட்டும்தான் தங்கள் வீட்டில் படுத்தான்.

"மேனை, நான் சொன்ன சாமான் வாங்கினனீயே?"

"ஓமம்மா, இஞ்ச பையுக்க கிடக்கு. அக்காவுக்குத் தோடம்பழமும் வாங்கினனான்." அவன் சொன்னான்.

"எங்கே அது?" தாய் கேட்டாள்.

"தைக்க வேணுமில்லே"

"அவள் எழும்பித்தான் தைக்க வேணும்." தங்கம் சொன்னாள்.

"என்ன தங்கமக்கையது?" தேவி கேட்டாள். இளங்கோவின் கையில் சட்டைத் துணியிருந்தது.

"சட்டைத் துணி பிள்ளை."

"நாளைக்கு நான் தைச்சுத் தாரன்." தேவி சொன்னாள். தங்கம் சிரித்தாள்.

"உந்தத் துணியிலை சட்டை தைக்க நான் என்ன குமரியோ, இது உனக்குப் பிள்ளை."


பக்கம் 114

தேவியின் உடல் சிலிர்த்தது. மனிதர்கள் இன்னும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவள் கண்களில் நன்றி பெருகியது.

"நான் கடைக்குப் போறன். அம்மா, ஏதும் வாங்க இருக்கிறதே?" இளங்கோ கேட்டான்.

"கருவாடு வாங்கிக் கொண்டு வா." இளங்கோ வெளியே வந்தான். சிறிது தயங்கினான். தேவியின் வாயில் அவன் பெயர் அடிபட்டதே அவனைத் தயங்க வைத்தது.

"தங்கமக்கை, இளங்கோவைப் பற்றி ஒன்று கேட்கிறன் சொல்லுவீங்களோ?"

"என்ன பிள்ளை?" தங்கம் கேட்டாள்.

"தம்பி கோபாலன் அடிக்கடி சொல்லுவான், இளங்கோ மனசிலே பெரிய ஒரு கவலை இருக்கு"

"தேவி, நீ என்ன கேட்கப் போகிறாய் என்று எனக்கு விளங்குகிறது. ஆனால்..."

"ஏன் அதை மறைக்கிறியள்? தன்ரை தகப்பனைத் தெரிய இல்லையென்றால் ஒரு பிள்ளை எவ்வளவு கவலைப் படும்?"

"தேவி, அவன் எவ்வளவு வேதனைப் படுகிறான் என்று எனக்குத் தெரியும்." தங்கம் சொன்னாள்.

"தங்கமக்கை, அந்தப் பிள்ளைய இந்த ஊரெல்லாம் என்னமாய் பழிக்கிறது? ஏனிந்தக் கொடுமை? அவன் என்ன பாவஞ் செய்தான், ஆருக்கும்? நல்லதோ, கெட்டதோ அதைச் சொல்லி விடுங்கோவன்."

"தேவி, என்னிதயத்துக்குள்ளேயே அடங்கியிருக்கிற அந்த உண்மையை யாருக்குச் சொல்லி அழுவன்?"


பக்கம் 115

"ஏன் தங்கமக்கை, அவனுக்கே சொல்ல முடியாத..."

"அவனுக்குத்தான் சொல்ல முடியாது. அவன் அதை அறிஞ்சிட்டால்... தேவி... ஒரு தாய் தன் மகனிடம் என்னத்தை எதிர்பார்க்கிறாள்?"

"அவன் பெரிய மனுசனாக வேணும். நாலுபேர் அவனைப் பற்றி நல்லாச் சொல்ல வேணும். படிக்க வேணும். பட்டம் பெற வேணும். நாலு காசு சம்பாதிக்க வேணும்."

"இது எல்லாம் இருந்தும் எத்தனையோ தாய்மார்கள் கடைசி நேரத்திலே கவலைப் படுகீனம். அது ஏன்?"

தேவிக்குப் பதில் தெரியவில்லை. அவள தங்கத்தைக் கேள்விக் குறியோடு நோக்கினாள்.

"தேவி, உனக்கு இப்ப இது விளங்காது. தேவி உடலுக்கும், உள்ளத்துக்கும் நெருங்கின தொடர்பு இருக்கிறதென்று படிச்சவை சொல்லுவினம். உடலிலே சக்தி இருந்தால் மாத்திரம் மனுசன் வாழுறானே? உள்ளத்திலேயும் சக்தி வேணும். சாப்பாடு உடம்புக்குச் சக்தி கொடுக்கும். மனசுக்கு அன்புதானே சக்தியைக் கொடுக்கும்."

"உண்மைதான் தங்கமக்கை. அன்பையே அறியாத குழந்தைகள் மனக்கட்டுப்பாட்டை இழக்கின்றன. பயந்து வாழ்கின்றன. தாழ்வு மனப்பான்மையும், தன்னம்பிக்கை இல்லாத தன்மையும் வளருது."

"ஆனால்..." தேவி தங்கமக்கையைப் பேச விடவில்லை.

"அளவுக்கு மீறின அன்பும் குழந்தையைக் கெடுக்கும். தாயையே எல்லாத்துக்கும் நம்பியிருக்கிற குழந்தை தன் கால்களிலே நிற்க முடியிறதில்லை.. சில சமயங்களில் கட்டுக்கடங்காமல் போய் விடும். இதையெல்லாம் நான் தெரிஞ்சு என்ன பிரயோசனம்?"


பக்கம் 116

"அன்பு குழந்தைகளுக்கு எவ்வளவு தேவையோ அதை விட அதிகமாக ஒரு தாயும் அன்பை எதிர்பார்க்கிறாள் தேவி. ஒரு தாய் தன்ரை மகன் பெரிய வேலையில் இருந்தாலும் இல்லை இழிஞ்ச நிலையில் இருந்தாலும் எதிர்பார்க்கிறது அவனுடைய அன்பைத்தான். அன்பாக "அம்மா" என்று அவன் கூப்பிடைக்க... தேவி, அந்த சந்தோசத்தை எந்தத் தாய்தான் இழக்க விரும்புவாள்?

"தங்கமக்கை, எதையோ தொடங்கி எதையோ கதைக்கிறம்."

"இல்லை! தேவி, அதையேதான் கதைக்கிறம். இஞ்ச பார் இளங்கோ என்னோட இருக்க வேணுமென்றால், அவன் தகப்பன் யாரென்பதை எப்பவுமே அவனுக்குச் சொல்ல முடியாது. சொல்லக் கூடாது.

வெளியே நின்ற இளங்கோ ´அம்மா சொல்ல மாட்டியா?´ என்று எங்கினான்.

"அவன்ரை அன்பிலே உங்களுக்கு அவ்வளவு சந்தேகமே? ஏன் பயப்படுறியள்?" தேவி கேட்டாள்.

"அன்பு அதிகமாக, அதிகமாக அதை இழந்திடுவமோ என்ற பயமும் கூடுது. தேவி இந்த உண்மையைச் சொல்லி எங்கடை உறவை அழிக்க என்னாலே ஏலாது. நான் சரியாக பயந்தனான். இந்த உண்மையை மறைக்க என்ரை உயிரையும் நான் குடுப்பன்."

"தங்கமக்கை, எனக்காவது சொல்லக் கூடாதே. சத்தியமாகச் சொல்லுறன், நான் ஒருத்தருக்கும் சொல்ல மாட்N;டன்.

"என்னை அணுவணுவாகத் தின்று கொண்டிருக்கிற இந்த இரகசியத்தை ஆருக்காவது சொல்லத்தான் வேணும் தேவி, ஆனால் ஒன்று நான் செத்த பிறகுதான் அது அவனுக்குத் தெரிய வேணும்.

"சொல்லுங்கோ தங்கமக்கை"


பக்கம் 117

இளங்கோ தன் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டான். இதயம் வேகமாகத் துடித்தது. பரீட்சை முடிவைப் பார்க்கத் துடிக்கும் மாணவனைப் போல் அவன் நின்றான்.

"உலையை வைச்சிட்டு வந்தனான். அடுப்பிலே கொதிக்குது." தங்கமக்கை அவர்களை ´சஸ்பென்சில்´ விட்டு அடுக்களைக்குள் சென்றாள்.

"டேய் இன்னும் நீ கடைக்குப் போக இல்லையே. இஞ்ச என்னடா செய்யிறாய்?" தாயின் கேள்வி இளங்கோவை அங்கிருந்து அனுப்பியது. அவன் வேண்டா வெறுப்பாக நடந்தான். சோற்றடுப்பைப் பார்த்து விட்டு அவள் மீனைக் கழுவ ஆரம்பித்தாள். அவள் எண்ணமெல்லாம் கடந்து போன காலத்தைச் சுற்றியது.

தங்கம் சொன்ன கதை தேவியின் கண்களைக் குளமாக்கியது. "தங்கமக்கை, உங்கடை நெஞ்சு கல்லு. இல்லையென்றால் இதை எப்பவோ சொல்லியிருப்பியள்... ஒன்று சொல்லுறன். எங்களுக்காக நீங்கள் எவ்வளவோ செய்திட்டியள். என்ரை உயிர் இருக்கு மட்டும், இளங்கோக்காக நான் எதையும் செய்வன்." தேவி சொன்னாள். தங்கம் அழுதாள். அந்தக் கண்ணீரில் சோகமில்லை. ஓர் ஆறுதல் இருந்தது. அவள் இதயபாரம் குறைந்தது.

சூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூ

அரசியில் கல்லுப் பொறுக்கிக் கொண்டு இருந்தாள் மீனாட்சி. "கொம்மான் இப்ப வருவார். அவருக்கு இரண்டிலே ஒன்று சொல்ல வேணும்."

"அவனைக் கட்ட என்னாலே ஏலாது. வேற யாரையும் பார்க்கச் சொல்லு." செல்லம் புகையும் அடுப்போடு போராடிக் கொண்டிருந்தாள்.

"அடியே உனக்கு விசரே? என்னைத் தின்னுறதுக்குத்தானே எல்லாம் பிறந்திருக்கு. அவன் மீசை முளைச்சு


பக்கம் 118

கொஞ்ச நாள் ஆகவில்லை, அதுக்குள்ள குறுக்கால போறான். இவள் என்னடா என்றால் அவ நினைச்சதுதான் சட்டமாம்."

"அம்மா, எனக்கு அவனைப் பிடிக்கவில்லையென்றால் என்ன செய்யச் சொல்லுறாய்?"

"என்னடி அது பிடிக்கிறது? நாங்களெல்லாம் என்ன அவரைப் பார்த்து, இவரைப் பார்த்தே கலியாணம் கட்டினனாங்கள். அம்மா, அப்பு சொன்னால் அதுக்குப் பிறகு என்னடி பேச்சு?"

"அம்மா, அது அந்தக் காலம்."

"அப்ப நீ போய்த் தேடி ஒருத்தனை பிடிக்கப் போறியே? என்னடி நீ தேவடியாளுக்குப் பிறந்ததாக நினைப்பே? காலடிச்சு முறிச்சுப் போடுவன் கனக்கக் கதைச்சியென்றால்..."

"அடிச்சுக் கொல்லுங்கோவன், விருப்பமில்லையென்றால்..."

"சனியனே, இரண்டாங்கதை கதையாதே. உனக்கும், மணியனுக்கும் கலியாணம் நடக்கத்தான் போகுது. மூத்தவன் அங்கே ஆருக்கோ பின்னாலே திரியிறான். நான் எவ்வளவு நாளைக்கு நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்கிறது? கொம்மானுக்கு நான் ஓமென்று சொல்லப் போறன். நாளைக் குறிச்சு சட்டு, புட்டென்று விசயத்தை முடிக்க வேண்டியதுதான்.

செல்லத்தின் கண்களில் கண்ணீர் வந்தது. அடுப்பின் புகையாலா? இல்லை இதயத்தில் இட்ட நெருப்பாலா?

"ஏனிப்ப கண்ணைக் கசக்கிறாய்?"

இதுவரை வெளியே இருந்து அவர்கள் உரையாடலைக் கவனித்த மகாதேவன், உள்ளே வந்தான்.

பக்கம் 119

"ஏனம்மா அவளைச் சும்மா அழ வைக்கிறாய்? மகாதேவன் கேட்டான்.

"புத்தி கெட்டவனே. அவளுக்குப் புத்தி சொல்ல வேண்டிய நீ நடக்கிற நடையைப் பார். ரோஷமில்லையேடா உங்களுக்கு? என்ரை மோளை என்னோட விடு, நான் அவளுக்குக் கட்டி வைப்பன். நீ உன்ரை வேலையைப் பார்."

வேதனையோடு மகாதேவன் தன் தங்கையைப் பார்த்தான். தனது செயல் தவறென எண்ணும் ஒருவன் தலை நிமிர்ந்து பேசும் சக்தியை இழந்து விடுகிறான். தேவியின் தொடர்பு அவன் குடும்பத்தில் புயலை உருவாக்கி விட்டது. அவன் வார்த்தைகள் மதிப்பிழந்தன. இல்லை அவனால் பேசவே முடியவில்லை. தங்கைக்காக அவன் வருந்தினான். ஆனால் அவன் என்ன செய்ய முடியும்?

"எடியே, கொம்மான் வருகுதில்லே, கண்ணைத் துடையடி." வேலுப்பிள்ளையர் வாய் நிறையச் சிரிப்புடன் வந்தார்.

"வா அண்ணே. ஏன் நிற்கிறாய்? இரன்."

மகாதேவன் கதிரையை இழுத்துப் போட்டான்.

"மேனை, போய் ஒரு சோடா வாங்கிக் கொண்டு வாவன்." மகாதேவனைத் தாய் வெளியேற்றினாள். செல்லம் உள்ளே போய் கதவிடுக்கில் மறைந்து கொண்டாள்.

"என்ன மீனாட்சி, நான் சொன்ன விசயம்...?" வேலுப்பிள்ளையர் கேட்டார்.

"அண்ணே, உனக்குத் தெரியுந்தானே எங்கடை நிலைமை. வீடும், தோட்டமும் அவளுக்குத்தானே. இருக்கிற நகையோட இன்னும் கொஞ்சம் செய்யலாம்."

"அப்ப எல்லாம் சரியென்று சொல்லு." வேலுப்பிள்ளையர் சொன்னார்.


பக்கம் 120

"எனக்கு இவன் மூத்தவனிலேயும் நம்பிக்கை இல்லை. நீ அவனுக்கும் எங்கேயும் ஒன்றைப் பேசன்!"

"அவனுக்கே பொம்பிளையில்லை? நீ பயப்படாதே. அவனுக்கு நல்ல இடம் நான் பார்க்கிறன். இவள் செல்லத்தின்ரையை எப்ப செய்வம்?"

"வாறமாசம் ஒரு நல்ல நாளிருக்கு. தப்பினால் மூன்று மாசம் போக வேணும்."

"இந்தா அவளின்ரை குறிப்பு. அதுகளுக்கு அருமையான பொருத்தமாம். நீங்கள் சரியென்றால் வாhற மாசமே வைக்கலாம்."

"எனக்கு ஒன்றுமில்லை. இவன் மகாதேவனிட்டையும் ஒரு சொல்லு சொல்லுவம்."

கதவிடுக்கில் செல்லம் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். ´அப்ப எனக்கு மணியன்தானோ புருசன்? கடவுளே இது என்ன அநியாயம்? ஐயோ எங்கே போவன்? ஆர் எனக்கு இருக்கீனம்? அண்ணனும் பேசாமல்தானே நிற்குது. அம்மா தான் நினைச்ச மாதிரி எல்லாம் செய்து போடுவா.´ ஒன்றும் செய்ய முடியாது அவள் தவித்தாள்.
´இளங்கோ... ஏன் என்ரை மனம் எப்பவும் அதை நினைக்கிறது. எனக்கும், அதுக்கும் என்ன உறவுß அது என்னைக் கட்டுமே...? கதைக்கிறதேயில்லை. அதுக்கு என்னைப் பிடிக்க இல்லையாக்கும்.´ அவள் ஏதேதோ எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தாள். மகாதேவன் சோடாவோடு வந்தான்.

"மேனை, இவள் செல்லத்தின்ரை விசயம்... வாற மாசம் நல்ல நாளொன்று இருக்குதாம். செய்யலாமென்று நாங்கள் நினைக்கிறம்." மீனாட்சி சொன்னாள்.

"இதிலே நான் என்னத்தைச் சொல்லுறது? அவள் தங்கச்சியைக் கேட்டுப் போட்டு செய்யுங்கோவன்." மகாதேவன் சொன்னான்.

"அவனும் சரியென்றிட்டான். அப்ப, அண்ணே நீ வேண்டியதைக் கவனி."


பக்கம் 121

மகாதேவன் வெறுப்போடு அறைக்குள் சென்றான். தங்கையின் கண்ணீர் ததும்பும் முகத்தைப் பார்த்தான்.

"செல்லம், உனக்கு விருப்பமில்லையென்றால் சொல்லன். ஏன் பயப்படுகிறாய்?" மகாதேவன் கேட்டான்.

"என்னைப் பார்த்தால் தெரிய இல்லையே? அண்ணே, எனக்காக நீ சொல்லன்."

"என்ரை சொல்லுக்கு இஞ்ச மதிப்பில்லையே! தங்கைச்சி, மனமுடைஞ்சு போய் நான் நிற்கிறன். அம்மாக்கு என்னைக் கண்டாலே பிடிக்க இல்லை."

"அண்ணே, எப்பவுமே என்ரை சொல்லுக்கு இஞ்ச மதிப்பில்லைத்தானே! நான் பெட்டைதானே! எல்லாருக்கும் பேய்ச்சிதானே! என்ரை சொல்லை அம்மா கேட்பாவே?"

"செல்லம், உனக்கு வேற யாரிலேயும் விருப்பமே?" மகாதேவன் தங்கையின் முகத்தைப் பார்த்தான். அவள் கண்கள் படபடத்தன. எப்படி அவள் அதைச் சொல்வாள்? அவனுக்கு விருப்பமோ என்று அவளுக்குத் தெரியாதே? ஒருதலைக் காதலா அது? அவள் தவிததாள். ´இல்லை´ என்பது போல் தலையசைத்தாள். அதற்குள் வேலுப்பிள்ளையர் விடைபெற்றார். வீடு அமைதியில் ஆழ்ந்தது. அவள் யாரோடு வாழ வேண்டும், அந்த வாழ்க்கை என்று ஆரம்பமாக வேண்டும் என்பதெல்லாம் தீர்மானிக்கப் பட்டு விட்டன.

இரவு மணி பத்து இருக்கும். செல்லம் தூக்கம் வராது புரண்டு கொண்டிருந்தாள். தாயோ நாட்டுக்கூத்து பார்க்கம் போய் விட்டாள். மகாதேவன் வாசலில் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தான். ஆட்டுக்குட்டி கத்தியது. விடாது தொடர்ந்து கத்தியது. அவள் எழுந்து பாயில் சிறிது நேரம் அமர்ந்தாள். ஆட்டுக்குட்டியின் கத்தல் அடங்கவில்லை. அவள் எழுந்து அதைப் பார்க்கச் சென்றாள் ஆட்


பக்கம் 122


டுக்குட்டியோ தன்னைக் கட்டியிருந்த கயிற்றில் தன் கால்களை மாட்டிக் கொண்டு அசைய முடியாது தவித்தது. ´டார்ச்சை´ நிலத்தில் வைத்து அதன் சிக்கை அவிழ்க்க முயன்றாள் அவள். தாயின் வார்த்தையை மீற முடியாமல் அவள் மாட்டிக் கொண்டாள். இங்கே ஆட்டுக்குட்டி மாட்டியிருக்கிறது. அவள் அதை அணைத்தவாறு சிக்கை அவிழ்த்தாள். அதன் மெல்லிய உடலை கன்னங்களில் பதித்தவாறு எண்ணங்களை எங்கோ ஓட விட்டாள்.

"ஆ..." ஓசை வந்த ஒழுங்கையை நோக்கினாள் அவள். ஒரு கணம் அவள் உடல் சிலிர்த்தது. பால் வெள்ளம் போல் பாயும் நிலவொளியில் ஒரு காலைக் கையில் பிடித்தவாறு நின்றது இளங்கோவேதான். ஆட்டுக்குட்டி அவள் கையில் இருந்து தாவியது. அவள் உள்ளமும்தான். நிலவின் ஒளியில் வெள்ளிக் கிண்ணம் போல் மின்னும் கன்னத்தையும், சுருண்டு இரு பக்கங்களிலும் திரண்டு அவ்வழகை மறைத்துத் தன்னழகைக் காட்டு முயலும் கருங்கூந்தலையும் பார்த்தவாறு இளங்கோ நின்றான்.

"செல்லம் காலிலே ஏதோ குத்திப் போட்டுது. உந்த ´டார்ச்´ சைக் கொண்டு வாவன்." அவன் மிக மிக மெதுவாகப் பேசினான். ஒருகணம் அவள் தயங்கினாள். பின்னர் அவர்களைப் பிரிக்கும் வேலியை நோக்கி நடந்தாள். அவன் வானத்தைப் பார்த்தான். நிலவு அங்கேதானே நிற்கிறது. எப்படி அவனருகில் வந்தது? அவன் கரங்கள் வேலியில். கண்களோ அவள்; வேல் விழியில். நிலவு, நிலவில் குளிக்கிறதே. மயக்கும் அவன் பார்வையைத் தாங்காது அவள் தன் பாதத்தை நோக்கினாள்.

"செல்லம்" அமுதென இனிக்கும் அச்சொல்லை அன்பெனும் தேனில் குழைத்து அவன் அழைத்தான். மல்லிகை மலரின் மணம் அவனை மயக்கியது. தென்றலாள் அதைச் சுமந்து வந்தாள். பந்தலில் இருந்தது மல்லிகை மலர். பக்கத்தில் நிற்பது...?

பக்கம் 123

"செல்லம்" மீண்டும் குழலின் நாதமென அவள் காதில் விழுந்தது அந்தக் குரல்.

"டார்ச்" அவள் நீட்டினாள்.

"காலிலே ஒன்றும் குத்த இல்லை." இளங்கோ சொன்னான்.

"என்ரை இதயத்திலேதான்..."

´சரியான கள்ளன்.´ அவள் மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

"மாமி கூத்துக்குப் போயிட்டாவே?"

அவள் ஆமெனத் தலையசைத்தாள்.

"கொண்ணன்...?"

அவள் வீட்டைக் கையால் சுட்டிக் காட்டினாள்.

"நித்திரையே?"

அவள் அதற்கும் தலையசைத்தாள். ஒருகணம் அவன் பேசவில்லை. பின்னர் கேட்டான்.

"கிணற்றடியில் போயிருந்து கதைப்பமே?"

அவள் நெஞ்சு படபடவெனத் துடித்தது. மின்னலென மறைந்து விடுமா இந்த இன்பம்?

´அதுக்கும் என்னிலே...´ அவள் உள்ளம் துள்ளியது. ´நெஞ்சுக்குள் இருக்கிறதெல்லாம் சொல்லிப் போட வேணும்.´ அவள் அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள். ´கொஞ்சமும் பயமில்லை இதுக்கு´ அவள் மெல்லத் திரும்பி வீட்டை நோக்கி நடந்தாள். இளங்கோ ஏமாற்றத்தோடு அவள் பின்னழகில் தன்னை இழந்து நின்றான். செல்லம் வீட்டினுள் எட்டிப் பார்த்தாள். மகாதேவனின் குறட்டை ஒலி நன்றாகக் கேட்டது. அவள் திரும்பி இளங்


பக்கம் 124

கோவைப் பார்த்தாள். பின்னர் கால்கள் பின்னலிட கிணற்றடியை நோக்கி நடந்தாள். இளங்கோ இன்ப மிகுதியில் தன்னை மறந்தான். ஒரே தாவலில் வேலியைத் தாண்டி அவளைப் பின் தொடர்ந்தான். கிணற்றடியை இருவரும் அடைந்தனர். அவள் இருதயம் பலமாக அடித்தது. நிலவின் இனிமை! அவர்கள் தேடித் தவித்த தனிமை! அவன் அவளுக்கு மிக அருகில் நின்றான். இளந்தென்றலாள் அவர்களோடு விளையாடினாள். காற்றில் தவழ்ந்த அவள் கருங்கூந்தல் அவன் கன்னத்தைத் தீண்டியது. அந்த இதமான சுகத்தில் இமைக்கவும் மறந்து அவள் அழகைப் பருகினான். கரத்தை உயர்த்தி கூந்தலை அவள் ஒதுக்கினாள். பாய்ந்து கொண்டிருந்த மின்சாரமோ தடைபடவில்லை. ´கல கல´ வென்ற கண்ணாடி வளையலின் ஓசையை அவள் சிரிப்பொலியென எண்ணி அவன் ஏமாந்தான்.

"செல்லம்" அவள் கருவிழிகள் அவன் விழிகளைச் சந்தித்தன.

"செல்லம்... எனக்கு உன்னிலே... உனக்கு...?

அவள் ´கிளுக்´ கெனச் சிரித்தாள். இது சொல்லித் தெரிய வேண்டுமா? அவனுக்கும் வெட்கமாக இருந்தது. அவள் மெல்லிய கரத்தில் தன் கரத்தை வைத்தான். அவள் நடுங்கும் தன் கரத்தை இழுத்துக் கொண்டாள். இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். அதாவது வார்த்தைகள் வரவில்லையே தவிர இதயங்கள் பேசின. ´நான் அவசரப்பட்டு விட்டேனா?´ அவன் நினைத்தான்.

´கையை இழுத்துப் போட்டன். அதுக்கு கோவமோ தெரியாது, நானென்ன செய்ய, ஆசையிருந்தாலும் வெட்கம் விடுகுதே?´ அவள் நினைத்தாள்.

"செல்லம்" அவன் எச்சிலை விழுங்கினான். நெஞ்சில் நீண்ட காலமாக அரித்துக் கொண்டிருந்த கேள்வியை அவன் கேட்டான். "என்னை நீ கலியாணம் கட்டுவியே?"


பக்கம் 125

அவள் பளபளக்கும் விழிகள் மீண்டும் உயர்ந்தன. இம்முறை அதன் ஓரங்களில் பனித்துளியென இரு துளி நீர் திரண்டிருந்தது. அவனுக்கு என்னமோ செய்தது.

"நான் பிழையாக ஏதும் கேட்டுப் போட்டனே?" அவன் கேட்டான்.

"இல்லை" யென அவள் தலையசைத்தாள். இரு துளிகள் நீரும் அவன் கையில் பட்டுத் தெறித்தன.

"ஏன் செல்லம்?" அவன் மீண்டும் அவள் கரத்தைப் பற்றினான். அவள் தடுக்கவில்லை.

"பேசு செல்லம், ஏன் பயப்பிடுகிறாய்?"

அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. அவள் முதன் முதலாகப் பேசினாள்.

"எனக்கும் மணியனுக்கும் கல்யாணமாம். நீங்கள் என்னைக் கட்டாட்டால் நான் செத்துப் போவன்." சிறு குழந்தை போல் அவள் பேசினாள். அவனுடல் சிலிர்த்தது. அவனை நம்பி ஓர் உயிர். அதுவும் அவனில்லையென்றால் அவள் செத்துப் போவாளாம். அவள் இதயத்தில் அவனுக்கு ஓர் இடம். அதுவும் மிக உயர்ந்த இடம்.

"செல்லம்" அவன், அவள் கரத்தை எடுத்து ஒரு முத்தம் கொடுத்தான். "நீ இல்லையென்றால் எனக்கும் வாழ்க்கையில்லை. உன்னைத்தானே நாளெல்லாம் நினைச்சுக் கொண்டிருக்கிறன்."

"நினைச்சுக் கொண்டிருந்தால் போதுமே? கலியாணத்துக்கு நாளும் குறிச்சுப் போட்டினம்."

"நீ, விருப்பமில்லையென்று சொல்லுறதுதானே?"

"நான் சொன்னனான். அவே கேட்க மாட்டினம்."

பக்கம் 126

"உனக்குத் தெரியுந்தானே செல்லம், கொம்மா என்னைத் தன்ரை மருமகனாக ஒரு நாளும் ஏற்க மாட்டா."

"அப்ப, என்ன செய்யிறது?"

"செல்லம், இஞ்ச நாங்கள் ஒண்டாக வாழ ஏலாது"

"அப்பிடியென்றால்..."

"ஓம்... நாங்கள் எங்கேயாவது ஓடிப் போகத்தான் வேணும்."

"ஐயோ, எனக்குச் சரியான பயம்"

"என்னை நம்புறியே?"

"வேற ஆரை நான் நம்புறது?"

"நம்பிக்கை இருந்தால் என்னோட வாறதுக்கு ஏன் பயப்படுறாய்?"

அவள் அவனைப் பார்த்தாள். அவள் குரல் தழதழத்தது. "என்னைக் கைவிட மாட்டியளே?"

"செல்லம், நீ என்ரை உயிரில்லே!"

"அது ஒரு நாள் போயிடும். அப்பிடிப் போனாலும் என்னைக் கூட்டிக் கொண்டு போவியளே?"

"செல்லம்" அவன் அவளை வாரியணைத்துக் கொண்டான். "செல்லம், செல்லம்"

"விடுங்கோ" விழிகள் நான்கும் மிக மிக அருகில் நின்றன. அடக்கி வைத்த அன்பையெல்லாம் அவை பரிமாறிக் கொண்டன.

"செல்லம், உன்னை நான் எப்பவுமே விட மாட்டன்." எந்த இளம் பெண்ணும் தன் அன்புக்குரியவனிடம் இருந்து


பக்கம் 127

எதிர்பார்க்கும் அந்த வார்த்தைகள். செல்லத்தின் உடலெங்கும் ஓர் இன்பப் புயல் வீசுகிறது. அவள் அதரங்களின் துடிப்பில் என்ன வார்த்தையோ?

"ம்... நான் போக வேணும். அண்ணன் எழும்பினால்...?"

"செல்லம் வாற கிழமை சந்திப்பம். அப்ப நான் என்ரை திட்டத்தை சொல்றன். எங்கேயாவது போய் இரண்டு பேருமாக இருப்பம்."

"உங்களை நம்பி நான் எங்கேயும் வருவன். எப்பிடிச் சந்திக்கிறது?" பேசாத செல்லம் என்னவெல்லாம் பேசுகிறாள்! அவளுக்கே வெட்கமாக இருந்தது.

"வாற திங்களும் கூத்திருக்கு. கொம்மா தப்ப விட மாட்டா. நாங்களும் சந்தர்ப்பத்தை விடக் கூடாது."

"நான் போகட்டே? அண்ணன் எழும்பி வந்தாலும்..." அவள் அவன் அணைப்பை விட்டு விலகினாள்.

"செல்லம்" அவன் கண்களால் மீண்டும் அவளை அருகில் அழைத்தான். அவள் அருகில் வந்தாள். அவள் சிறு விரல்கள் அவன் கன்னத்தைத் தடவின. அவன் எங்கோ, எங்கோ பறந்தான். அவன் எதிர்பாராத போது கன்னத்தில் கிள்ளி விட்டு அவள் துள்ளி ஓடி மறைந்தாள். அவன் இதழ்களில் இன்பப் புன்னகை மலர்ந்தது. அவள் கிள்ளிய, அந்த இன்ப வேதனை அப்படியே நிலைக்காதா என அவன் ஏங்கினான். இமைகள் மூடாத ஓர் இரவு அவர்களை விட்டு மறைந்து விடலாம். ஆனால் அந்த இனிய இரவு அவர்கள் இதயங்களில் என்றுமே மறையவில்லை.

மீட்டாத வீணை - 12

பக்கம் 128

வெறுந் தரையில் படுத்திருந்தான் மகாதேவன். அவன் விழிகள் கூரையை நோக்கிக் கொண்டிருந்தன. ஆனால் கூரை அவனுக்குத் தெரியவில்லை. மனதை ஏதொ அரித்துக் கொண்டிருந்தது.

எதையோ இழந்தவன் போலல்ல, எல்லாவற்றையுமே இழந்தது போன்ற நினைப்பு - வெறுமை - எல்லாமே வெறுமையாக இருந்தது.

"அண்ணே" அவன் அசையவில்லை.

"அண்ணே" செல்லம் மீண்டும் கூப்பிட்டாள்.

"ம்..."

"என்ன அண்ணே, எழும்பி இரன். ஏனிப்பிடி இருக்கிறாய்? தேத்தண்ணியைக் குடி"

அவன் எழுந்து தேத்தண்ணியையும், ஒரு கையில் பனங்கட்டியையும் வாங்கிக் கொண்டான். செல்லம் தரையில் இருந்தாள். முழந்தாள் இரண்டையும் கைகளால் கட்டிக் கொண்டு செல்லம் அவனைப் பார்த்தாள். அவன் தன் விழிகளைத் திருப்பிக் கொண்டான்.

"உனக்குச் சுகமில்லையே?" செல்லம் கேட்டாள்.

"சும்மா கரைச்சல் தராமல் போ." அவன் எரிந்து விழுந்தான். அவள் சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை. தன் கால் விரல்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் தங்கையைப் பார்த்தான்.

"செல்லம்"


பக்கம் 129

செல்லத்தின் விழிகள் மலர்ந்தன. அண்ணன் அன்பாகத்தான் அழைக்கிறான்.

"ம்..."

"உனக்கு மணியனைப் பிடிக்க இல்லையே" அவன் கேட்டான்.

"உனக்குப் பிடிப்பே?" அவள் திருப்பிக் கேட்டாள்.

"எனக்கு விருப்பமில்லை." அவன் சொன்னான்.

"அம்மாக்குச் சொல்லன்:"

மகாதேவன் முகத்தில் இருள் பரவியது. ஏன், தாயை எதிர்த்து அவனால் பேச முடியாமலிருக்கிறது? இதுவரை காலமும் அவன் வார்த்தைக்கு அங்கு மதிப்பிருந்தது. ஆனால் இன்று...? தேவியின் தொடர்பு தவறானதா...? அவனால் அதைத் தீர்மானிக்க முடியவில்லை. தான் செய்வது சரியானது என்று அவனால் அடித்துச் சொல்ல முடியவில்லை. அது அவனது கோழைத்தனமா அல்லது தேவியின் துணிவின்மையா?

உலகம் ஆயிரம் சொன்னாலும், தான் செய்வது சரியானது என்று ஒரு தீர்க்கமான முடிவுக்கு அவன் வந்திருந்தால் அவனை அசைத்து விட முடியாது.

"என்ன பேசாமல் இருக்கிறாய்?" செல்லம் கேட்டாள்.

"செல்லம்... எனக்கொரு ஆசை... எவ்வளவோ ஆசைகள்... அதையெல்லாம் அம்மாக்காக, இந்த ஊருக்காக விட்டுக் குடுத்திருக்கிறன்... ஏன் தெரியுமோ? என்னாலே உன்ரை வாழ்க்கை பாழாகக் கூடாது. நீ நல்ல ஒருவனைக் கட்டி நல்லா இருக்க வேணும்.... கேட்டிதே?"

செல்லம் "ம்" கொட்டினாள்.


பக்கம் 130

"நான் ஒரு முடிவுக்கு வந்திட்டன். உனக்குப் பிடிச்சால் சொல்லு" அவன் அவள் முகத்தைப் பார்த்தான். அவளும் ஆவலோடு அவனைப் பார்த்தாள். அவன் குரலைச் செருமிக் கொண்டான். தேத்தண்ணியின் கடைசி மண்டியையும் எடுத்து வாயில் விட்டுக் கொண்டான்.

"உனக்கு, உவன் இளங்கோவைப் பிடிச்சிருக்கே?"

செல்லத்துக்கு எங்கோ இன்ப வானத்திலே தவழ்வது போன்ற உணர்ச்சி. கண்கள் மலர்ந்தன.

"அண்ணே" அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவன் கால்களைத் தன் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும் போலிருந்தது. தன் தங்கையின் முகத்தில் தோன்றிய வண்ணக் கோலங்களை மகாதேவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

"அவனை நான் இன்னும் கேட்க இல்லை..."

"அதுக்கும் என்னிலே விருப்பம்" செல்லம் சொல்லி விட்டு முகத்தை மூடிக் கொண்டாள்.

மகாதேவன் முகத்தில் புன்னகை பரவியது.

"அப்பிடியென்றால்...?"

அவள் முகத்தை மூடிக் கொண்டு கதவிடுக்கில் மறைந்தாள்.

"அப்ப, நான் அவனோட கதைக்கட்டே...?" மகாதேவன் கேட்டான்.

"அம்மாதான்..." செல்லம் இழுத்தாள்.

"அதைப் பற்றிப் பயப்பிடாதே. அதுகள் பழசுகள். ஒரு நாளும் மாறாது. அதுகளைப் பார்த்தால் நாங்கள் வாழ முடியாது."

"இல்லையண்ணை... அம்மா அழும்... அதுவும் எங்களுக்காக எவ்வளவு கஷ்டப் பட்டது?


பக்கம் 131

"கொஞ்ச நாளிலே எல்லாம் சரியாப் போயிடும். எங்களை விட்டால் அவவுக்கும் ஆர் இருக்கினம்? நான் இளங்கோ வீட்டை போயிட்டு வாறன்..."

"முதுகெல்லாம் புழுதி" செல்லம் சொன்னாள். அவன் முதுகைக் கையால் தட்டினான். அவள் கொடியிலிருந்த துவாயை எடுத்துத் தட்டி விட்டாள்.

மகாதேவன் இளங்கோ வீடு நோக்கி நடந்தான். அது அவனது நிமிர்ந்த நடைதான். செல்லத்தின் மனதில் ஒருவித அமைதி நிலவியது.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

மகாதேவன் இளங்கோ வீட்டிற்குப் போன போது தங்கமும் அங்கிருந்தாள்.

"வா தம்பி. வா... இப்ப எல்லாம் உங்களைக் காணக் கிடைக்குதில்லை." தங்கம் வரவேற்றாள்.

"மாமி, இளங்கோ இல்லையே?" மகாதேவன் கேட்டான்.

"வந்திட்டனடாப்பா" உள்ளே இருந்து இளங்கோ குரல் கொடுத்தவாறு வெளியே வந்தான். முன்பு போல் மகாதேவனை ஏறிட்டுப் பார்க்க அவனால் முடியவில்லை. தன் காதலை நண்பன் ஏற்றுக் கொள்வானா என்ற தயக்கம் அவனுக்கு இருந்தது. அவனைக் கலந்து கொள்ளாமலே பல விடயங்களைத் தான் தீர்மானித்ததும் ஒரு குற்றவாளியின் மனநிலையை அவனுக்குக் கொடுத்தன.

"வாறியே, இப்பிடி ஒரு நடை போயிட்டு வருவம்:" மகாதேவன் நண்பனின் தோளில் கை போட்டவாறு கேட்டான்.

"கொஞ்சம் இருங்கோவன்ரா. தேத்தண்ணி போட்டுத் தாரன்"


பக்கம் 132

"நீங்கள் போடுங்கோ மாமி. நாங்கள் வந்திட்டம்." மகாதேவனும், இளங்கோவும் ஒழுங்கையில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள். திருவிழா ஒலிபெருக்கி சினிமாப் பாடலொன்றை ஒலி பரப்பிக் கொண்டிருந்தது. நண்பர்கள் இருவரும் சிறிது நேரம் ஏதேதோ கதைக்க முயன்றார்கள். ஆனால் இருவர் மனமும் அதில் ஒன்றவில்லை. முடிவில் மகாதேவன் ஆரம்பித்தான்.

"மச்சான், ஒரு விசயம் எனக்கு நீ மறைச்சுப் போட்டாய்."

இளங்கோவின் இதயம் ´பட பட´ வென அடித்துக் கொண்டது. ´செல்லம் சொல்லிப் போட்டாளோ!´ அவன் மனம் எண்ணமிட்டது.

"என்னடாப்பா, நீ சொல்லுறாய்?"

இளங்கோவின் நா தடுமாறியது. இருவரும் தாங்கள் வழக்கமாக இருந்து கதைக்கும் புளிய மரத்தின் கீழ் அமர்ந்தனர். இளங்கோ ஒரு கிளையை ஒடித்து நிலத்தில் போட்டுக் கொண்டிருந்தான். மாலை நேரம் பறவைகள் எல்லாம் கூடுகளை நோக்கி ஓடிக் கொண்டிருந்தன. மரத்தின் மேலும் குருவிகளின் சத்தம் கேட்டது.

"அதை நானே சொல்ல வேணுமே?" மகாதேவன் கேட்டவாறு தொடர்ந்தான். "இளங்கோ, செல்லம்... எங்கடை செல்லம்.."

"மகாதேவா, கோவிக்காதே. எங்களுக்கு ஒருவரை ஒருவர் பிடிச்சிருக்கு..."

"மச்சான்... எனக்குப் பெரிய சந்தோஷமடாப்பா"

"மகாதேவா" இளங்கோவின் உடல் சில்லிட்டது. அவன் அதை எதிர்பார்க்கவில்லை. நண்பனின் எதிர்ப்பைத்தான் அவன் எதிர்பார்த்தான். இளங்கோவின் கண்களில் நன்றி பெருகியது. அவன் தன் நண்பனின் கையைப் பற்றினான்.


பக்கம் 133

"மகாதேவா உனக்கு... உனக்கு என்னை..." இளங்கோ பேச்சை முடிக்கவில்லை. அவன் கண்கள் கலங்கின. அவன் அந்திவானத்தைப் பார்த்தான்.

"இந்தத் தகப்பன் பெயர் தெரியாத தரித்திரத்தை உன்ரை தங்கைச்சிக்கு..."

மகாதேவன் அவனைப் பேச விடவில்லை.

"பேய்க்கதை கதையாதே... நாங்களென்ன நேற்று, முந்தநாள் பழக்கமே! ஒன்றாப் படிச்சு... ஒன்றாய் விளையாடி... திண்டு குடிச்சனாங்கள்... செல்லம் உனக்குத் தெரியாதவளே? இல்லை அவளுக்குத்தான் உன்னைத் தெரியாதோ? மச்சான்... எனக்கு ஒரு விசயம் விளங்குது. அன்பு, பாசம், காதல் இதெல்லாம் எங்கே, எப்பிடி உருவாகுது என்று தெரியாது. உருவாகிட்டால் அந்தச் சக்தி மகத்தான சக்திதான். அது தூய்மையாக இருந்தால் இந்த ஊரை மாத்திரமில்லை, இந்த உலகத்தையே எதிர்த்துப் போராடும்…” மகாதேவன் எதையோ நினைத்து அப்படிப் பேசினான்.

“மச்சான், நான் கவலைப் பட்டது ஊருக்காக இல்லை… நீ விரும்ப இல்லையென்றால் அது எனக்குப் பெரிய கவலையாக இருந்திருக்கும்… ஊரிலே எனக்கு இருக்கிற மானக்கேடு உனக்குத் தெரியும். அதுதான் நான் செல்லத்தையும் கூட்டிக் கொண்டு எங்கேயாவது போகலாம் என்று பார்க்கிறன். கொம்மா கடைசி மட்டும் ஒத்துக் கொள்ளா.

“ஓடிப் போகப் போறியளே?” மகாதேவன் கேட்டான். “டேய் நான் என்ன மண்ணாங்கட்டிக்கே இருக்கிறன்? மச்சான், நீ கவலைப் படாதே. வாற வெள்ளிக்கிழமை உனக்கும், அவளுக்கும் பிள்ளையார் கோவிலிலே தாலி கட்டு. தடுக்கிறவன் தடுத்துப் பார்க்கட்டும்.

“ஏன் வம்மை விலைக்கு வாங்குவான். வேலுப்பிள்ளையர், மணியன் சும்மா இருப்பீனமோ? கட்டாயம் ஏதும் கலாதி வரும். பிறகு எங்களுக்குத்தானே மரியாதை இல்லை?” இளங்கோ கேட்டான்.


பக்கம் 134

“அட, கோபால் வாறான். வா மச்சான் வா.” மகாதேவன் அழைத்தான். கோபால், முகத்தில் வடிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டான். அவனது இருள் படிந்த முகம் சிறிது மலர்ந்தது.

“என்னடாப்பா, புளியடியிலே புரட்சிச் சதியோ?” கேட்டவாறு அவர்கள் அருகில் வந்து அமர்ந்தான். மூவரும் கலந்து கதைக்க ஆரம்பித்தார்கள்.

“மச்சான், கல்யாணம் முடிஞ்சிட்டால்… இஞ்ச ஒரு தம்பியும் ஒண்டும் செய்ய ஏலாது. ஏன் நாங்கள் இஞ்ச கல்யாணத்தை வைப்பான். சந்நிதியிலே வைச்சுத் தாலியைக் கட்டிக் கூட்டிக் கொண்டு வருவம்.” கோபால் வழி சொன்னான்.

“அது நல்ல ´ஐடியா´. செல்லத்தை, கோயிலுக்கு என்று அம்மாட்ட சொல்லி நான் கூட்டிக் கொண்டு வாறன்." மகாதேவன் தன் பங்கை விளக்கினான்.

"நானும், அக்காவும் கோயிலுக்கு வாறம். இன்னும் நாலைஞ்சு பெடியளை விசயத்தைச் சொல்லாமல் கூட்டிக் கொண்டு போகலாம். ஆக்களும் வேணுமில்லே!" கோபால் பேசினான்.

"கொம்மாவைக் கேட்டனீயே?" மகாதேவன் கேட்டான்.

"இல்லையடாப்பா... அவவுக்குத் தெரிய வேண்டாம். தாலியைக் கட்டி வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போவம். எல்லாத்துக்கும் காசு வேணுமே!" இளங்கோ பதிலளித்தான்.

"அதைப் பற்றிக் கவலைப் படாதே. எங்கடை செல்லத்துக்குச் சிலவழிக்க இல்லையென்றால் ஆருக்குச் சிலவழிக்கிறது?" மகாதேவன் தன் கடமையை நினைவூட்டினான். பல மணி நேரம் நண்பர்கள் கதைத்து இறுதி முடிவோடு வீடு திரும்பினர். பெரியதொரு சாதனையை ஏற்படுத்தத் தயாராகும் வீரர்கள் போலிருந்தது அவர்கள் மனோநிலை. இந்தத் துணிவும், மனோதிடமும் ஏன் தேவியின் விடயத்தில்

பக்கம் 135

தனக்கு இல்லையென மகாதேவன் நினைக்காமல் இல்லை. நண்பர்களின் இத்தனை ஒத்துழைப்பு இருந்த போதும் தன் பிறப்பின் இரகசியம் இளங்கோவின் இதயத்தை அன்று அதிகமாக அரித்தது.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

"தேவியக்கா, தேவியக்கா" மெதுவாகச் செல்லம் வேலியருகில் நின்று அழைத்தாள். நிலவின் ஒளி வெள்ளத்திலே அவளும் ஒன்றிப் போய் நின்றாள்.
"செல்லம், கொம்மா திருவிழாவுக்குப் போயிட்டா போலை..." தேவி சிரித்துக் கொண்டே வந்தாள். இருவரும் அலம்பல் வேலி அருகே இருக்கின்றனர்.

"ஓமக்கா... எப்பிடி இப்ப உங்களுக்கு...?"

"நல்ல சுகமடி... தம்பி பிறகும் தியேட்டருக்குப் போயிட்டான். துணைக்கு தங்கமக்கை வாரனெண்டவ. இன்னும் காண இல்லை."

"தங்கம் மாமியோ...? அதுக்குச் சாப்பாடு போட்டிட்டுத்தானே வருவா"

"எதுக்கு...? ஓகோ... அவருக்குகோ?"

"சும்மா பகிடிதான். போங்கோ அக்கா"

"எடியே, உனக்கு அவன் மணியனைப் பேசியாச்சு. நீ இன்னும் இளங்கோவை நினைச்சுக் கொண்டிருக்கிறியே?"

"மணியன், அவன் பழைய காலத்து ஆள். அந்த ஆக்கள் மாதிரியேதான். அக்கா, சமுதாயத்துக்குப் புதிய பூக்கள் வேணும். பழைய குருட்டு நம்பிக்கைகளையும், கண்மூடித்தனமான கட்டுப்பாடுகளையும் தகர்த்து எறிகிற உறுதியுள்ளவை வேணும்."

"அதெல்லாம் உன்ரை இளங்கோட்டை இருக்காக்கும்."


பக்கம் 136

"ஏனக்கா, மணியனைப் போல ´அது´ சீதனங் கேட்டே வந்தது? அன்பு உள்ளம் இருந்தால் நல்ல பண்பெல்லாம் தானாக வருகுது. ´அதுக்கு´ என்னிலே விருப்பம்... எனக்கும் அதிலே..."

"கொள்ளை ஆசை" தேவி சிரித்தாள். செல்லம் கன்னஞ் சிவந்தாள்.

"செல்லம், எங்கடை ஊரிலே ஆம்பிளையளே தாங்கள் விரும்பினவளைக் கட்ட முடியாமல் போயிடுது. நீ ஒரு பொம்பிளை... அதுவும் இளங்கோ... ஊர் சும்மா இருக்காதே!"

"அதை நினைச்சால்தான் பயமாயிருக்கு. வேலுப்பிள்ளை மாமா சும்மா இருக்க மாட்டார். என்ரை நல்ல காலம். அம்மா கோவிச்சாலும் அண்ணனுக்கு விருப்பம். அண்ணன் என்னைக் கைவிடாது."

தேவியின் மனதில் சிறு சலனம் ஏற்பட்டது. தேவன்... கைவிட மாட்டான். அவள் எண்ணங்கள் அவனது கடைசிச் சந்திப்பில் மிதந்தன. செல்லம் ஏதேதோ சொன்னாள். தேவியோ ´ம்´ கொட்டிக் கொண்டிருந்தாள்.

"அக்கா, என்ன அக்கா, நான் பேசுறன். நீங்கள் யோசிச்சுக் கொண்டு..." செல்லம் கேட்டாள்.

தேவி பூவரசம் இலையொன்றை ஒடித்துக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தாள். செல்லம் மணப் பெண்ணாவாள். இளங்கோவோடு கரம் கோர்த்துத் திரிவாள். கணவனுக்கு உணவாக்கி அவனோடு உண்பாள். குழந்தை பிறக்கும். அதை மார்போடு அணைத்து மகிழ்வாள். தன்னைக் காட்டி "இந்த மாமியைப் பார்" என்பாள். குழந்தை சிரிக்கும்.

"செல்லம்... எனக்குப் பொறாமையாக இருக்கடி" தேவியின் கண்கள் கலங்கின.

"அக்கா..." செல்லம் தடுமாறிப் போனாள்.


பக்கம் 137

"எடியே, நீ நல்லா இருக்க வேணுமடி. செல்லம், உன்னிலே எனக்கு எவ்வளவு அன்பிருந்தாலும் குழந்தை, குட்டி, புருசன்... என்று யாரை நினைச்சாலும் எனக்கு... எனக்கு... என் நிலைதானடி தெரியிது. கடவுளே... எனக்கு ஏனிந்தக் கூடாத மனம்?"

"அக்கா, அழாதேங்கோ. நான்தான் உங்களை அழ வைச்சிட்டன்."

"இல்லையடி, நான் அழவென்றே பிறந்தனான்." எப்பொழுதுமே அவர்கள் உரையாடல் தேவியின் கண்ணீரில்தான் முடியும். தேவி தன்னுள்ளத்தைத் திறந்து சொல்லி அழுவது செல்லத்திடந்தான்.

"நீ போய்ப் படு செல்லம்."

"தங்கம் மாமி இன்னும் வர இல்லை...ß"

"இன்னுங் கொஞ்சத்திலே வருவா."

"நீ போய்ப் படு" தேவியும் செல்லமும் பிரிந்து சென்றனர். செல்லம் வீட்டுக்குள் சென்ற போது மகாதேவன் தூக்கம் வராது தரையில் புரண்டு கொண்டிருந்தான். நிலவு அவனைச் சுட்டெரித்தது. அவன் எழுந்து வெளியே வந்தான். அவன் கண்கள் வேலியினூடே சென்று தேவியைத் தேடின. வீட்டின் விளக்கொளியில் அவள் நிற்பது நிழலாகத் தெரிந்தது. அந்தக் கடைசிச் சந்திப்பு நிழலாக அவன் நெஞ்சில் ஓடியது. அவளை அவன் அணைத்த போது... அவள் கரங்கள் அவன் தலையைக் கோதிய போது...

தேவன் தன் தலைமயிரைக் கைகளால் குழப்பிக் கொண்டான். வீட்டினுள் நுழைந்து செல்லத்தை நோக்கினான். புன்னகை மலர அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். வெளியே வந்தவன் இளங்கோ வீட்டை ஆராய்ந்தான். தங்கத்தின் குரல் அவனுக்குக் கேட்டது. விரைவாக அவன் தேவியின் வீட்டை நோக்கி நடந்தான்.


பக்கம் 138

தேவி தூணோடு சாய்ந்தவாறு கற்பனை உலகில் நின்றாள். தேவன் மிக அருகில் வந்த பின்னர்தான் அவள் அவனைக் கண்டாள். ஒரு கணம் திகைத்தாள். தேவன் சில வினாடிகள் தலை குனிந்து நின்றான். அவன் அகன்ற மார்பு பொங்கித் தணிந்து கொண்டிருந்தது. நிலவு அவனை அணைத்துத் தன் ஆசையைத் தணித்துக் கொண்டிருந்தது. தேவியின் விழிகளும் போட்டியிட்டன.

"தேவி" அவன் அருகில் வந்தான்.

"தேவா, தங்கம் மாமி வருவா." அவன் அவள் கரங்களைப் பற்றினான். தேவி வேகமாக மூச்செறிய ஆரம்பித்தாள். அவள் கண்களில் ஒரு மயக்கம்.

´தேவா´ அவள் உதடுகள் அசைந்தன. வார்த்தைகள் வரவில்லை. அவள் மீண்டும் முயன்ற போது அவன் உதடுகள் அந்த அசைவையும் தடுத்தன. அவள், அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். இதயங்கள் இரண்டும் ஒன்றாகத் துடித்தன. அந்தத் துடிப்பின் ஓசையிலே உலகத்தின் சத்தங்கள் கேட்கவில்லை. தேவி கண்களை மூடிக் கொண்டாள்.

தங்கத்தின் கண்கள் அந்தக் காட்சியை நம்ப மறுத்தன. இளங்கோ தலையைக் குனிந்து கொண்டான். அவனும் அதை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வரவை அறிந்து கொள்ளாமலே அன்பின் அணைப்பில் கட்டுண்டு இருந்தார்கள் தேவியும், தேவனும்.

"தேவி" தங்கத்தின் குரல் நடுங்கியது. தங்கம் நிலத்தில் அப்படியே இருந்து விட்டாள். திடுக்குற்ற தேவி பாம்பை மிதித்தவள் போல் பதறி, விலகிக் கொண்டாள். தேவன் செய்வதறியாது கைகளைப் பிசைந்தவாறு நின்றான்.

யாருமே பேசவில்லை. தேவி தூணோடு முகத்தைப் புதைத்துக் கொண்டாள். தேவன் தலை குனிந்தவாறு கரங்களைப் பிசைந்தான். இளங்கோ வானத்தை வெறித்துப் பார்த்தான். அவன் சிந்தனையில் பல கேள்விகள் மோதின.

பக்கம் 139

தேவி - அவன் இதயத்தில் அன்பையும் ஒரு தூய்மையான இடத்தையும் பெற்றிருந்தாள். அவளா அந்த நிலையில்...? அவனால் நம்பவும் முடியவில்லை. ஆனால் உண்மை... மறுக்கவும முடியவில்லை. அடக்கம், அன்பு, இன்முகம் இவையெல்லாம் தேவியின் அணிகலன்கள் என அவன் எண்ணியது உண்டு. அந்த ஊரிலேயே விரிந்த சிந்தையும், முதிர்ந்த அறிவும் கொண்டவள் அவள்தானென அவன் கருதினான். அவளா இப்படி...? தனக்கு இளையவன் ஒருவனுடன் தன்னை மறந்து இந்த நிலையிலா?

தேவன்... எதையுமே நின்று, நிதானித்துச் செய்பவன். வாழ்வுக்கெனச் சில விதி முறைகளை அமைத்து அதன்படி நடப்பவன். அவனா அப்படி...? அக்கா, தம்பி போல் பழகியவர்கள். அவர்களா இந்த நிலையில்...? காதலிப்பது தவறென்று இளங்கோ நினைத்ததில்லை. இளங்கோ செல்லம் உறவுக்குப் பெயர் காதல்தான். ஆனால் இது காதலா...? வெறும் உடல் இச்சையின் விளைவா...? இந்த உறவிலும் ஓர் உண்மை அன்பு - காதல் - உருவாக முடியுமா...?

நால்வரின் நாக்குகளும் அசையவில்லை. இதயத்துக்குள்தான் எத்தனை போராட்டம். அமைதியான அந்தப் போராட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாது. முதலில் அசைந்தவன் தேவன்தான். தலை குனிந்தவாறு மெதுவாக அவன் படலையை நோக்கி நடந்தான். அவன் மூன்றடி கூட வைத்திருக்க மாட்டான். தங்கத்தின் குரலால் அவன் உடல் சிலிர்த்தது.

"நில்லடா"

அவன் மட்டுமல்ல, இளங்கோவும் திடுக்குற்றான். தேவியின் விழிகள் மருண்டன. அது சாதாரணமான தங்கத்தில் குரலல்ல. அவள் இதயத்தின் உணர்ச்சிகள் எல்லாம் ஒன்று திரண்டு வந்த குரல்.

"போவியே? நீ போவியேடா? அவளை இப்பிடியே விட்டிட்டுப் போவியேடா?"

பக்கம் 140

இருந்த தங்கம் ஆவேசம் வந்தது போல் எழுந்து கத்தினாள். தேவன் ஆடியே போய் விட்டான். தேவி திகைப்போடு தங்கத்தை நோக்கினாள். இளங்கோ தாயை இந்தக் கோலத்தில் என்றுமே கண்டதில்லை.

சாரம் மட்டுமே தேவன் அணிந்திருந்தான். அவன் மேனியிலிருந்து வியர்வை பெருகி ஓடியது. அவன் அசையாது நின்றான். தங்கம் ஓடிச் சென்று அவன் மடியைப் பிடித்து உலுக்கினாள்.

"டேய், டேய்... உன்னை நல்ல பெடியனென்று நெச்சனடா. படலைக்கு அங்காலே காலெடுத்து வைச்சாய்... முறிச்சுப் போடுவனடா... முறிச்சு"

இதுவரை பேசாது நின்ற இளங்கோவுக்குத் தாயின் செய்கை அதிகப்பிரசங்கித் தனமாகத் தோன்றியது. தவறு தேவனுடையது மாத்திரமல்லவே! தேவி விரும்பா விட்டால் இது நடக்குமா? அதுவும் அங்கு, அப்படி விபரீதமாக ஏதும் நடந்து விடவில்லை. அவன் தாயை நெருங்கி அவள் கைகளைப் பற்றியவாறு "அம்மா" என்றான். அவன் கைகளைத் தள்ளி விட்டு "என்னடி தூணுக்க ஒளியிறாய்? இஞ்சாலை வாடி." என்று தேவியைப் பார்த்து அவள் சீறினாள். தேவி நடுங்கியவாறு வெளியே வந்தாள். வேங்கையைப் போல் பாய்ந்து அவள் கூந்தலைப் பற்றித் தன் முகத்திற்கு அருகே இழுத்தவாறு தங்கம் பேசினாள்.

"எடியே, உனக்குத் தெரியுந்தானேடி, நாளெல்லாம் நான் ஏன் அழுகிறனென்று உனக்குத் தெரியாதே? நான் பெத்த பிள்ளைக்குத் தகப்பன் இல்லையென்று ஊரெல்லாம் சிரிக்குதே உனக்கும் தெரியுந்தானேடி. எடியே... எடியே..."

"உனக்குத் தானேடி சொன்னனான். உன்ரை கொப்பன் செய்த வினையாலே நான் என்ரை மோனைக் கூட நிமிர்ந்து பார்க்க ஏலாமல் இருக்கிறனென்டு."

பக்கம் 141

தேவியும் அழ ஆரம்பித்தாள். இளங்கோவின் உள்ளம் எதையோ கேட்கத் துடித்தது. வார்த்தைகள் வரவில்லை. மகாதேவன் செய்வதறியாது தடுமாறினான்.

"டேய் தேவா, கேட்டியேடா இவன்ரை அப்பன் ஆரென்று" சொல்லுறனடா கேள்... டேய், அறிவு கெட்டு நிக்கிறாளேடா இந்தப் பேச்சி, இவளைப் போல தானடா அண்டைக்கு நானும் நின்றன். பெடியள், ஆசை பாசங்கள் பெண்டுகளுக்கு இல்லையே? ஏழையளுக்குக் கிடையாதே? வயசாகியும் வாழ வழியில்லாமல் நான் ஏங்கிக் கொண்டிருந்தனடா. டேய், தடி மாடு மாதிரி நிக்கிறியேடா, உன்னைப் போலத்தான்டா அன்றைக்கு வந்தார்.... டேய், அந்தப் பழியைப் பாவத்தைத் தானடா இண்டைக்கு அவனும், நானும் இன்னும் சுமக்கிறம். அடி பாவிப் பெண்ணே, ஏனடி நீயும் குறுக்கால போறாய்?" அப்பன் செய்த பாவம் போதாதேடி?"

தேவியும் தங்கமும் அழுதார்கள். தேவனின் கண்களும் கலங்கின. அவன் மிக மெல்லிய குரலில் பேசினான்.

"மாமி, பிழை என்னிலைதான்... நான்தான் மாமி... ஆனால் நான் அவளைக் கைவிட மாட்டன். அவளுக்கு நான்தான் தாலி கட்டுவன்." மகாதேவன் குரல் மெதுவாக ஒலித்தாலும் அதில் உறுதியிருந்தது.

"தம்பி, டேய் உன்னைக் கும்பிட்டனடா... இப்ப சொன்னியே அந்தச் சொல்லைக் காப்பாத்திடு. இவள் எனக்குப் பிள்ளையடா... அவன்ரை தமக்கை. கோபால் வயித்திலே இருக்கிற நேரத்திலேதான் ஒரு நாள், இவளின்ரை தகப்பன் என்னை..."

இளங்கோ ஒன்றும் பேசாது வெளியே நடந்தான். அதற்கு மேல் அவனால் அங்கு நிற்க முடியவில்லை. அவனை யாரும் தடுக்கவில்லை. தடுக்கும் நிலையில் அங்கு யாரும் இல்லை.

மீட்டாத வீணை - 13

பக்கம் 142

பருவ நிலவுதான். அன்று அதன் ஒளிவெள்ளம் வழமையை விட பல மடங்காக இருந்தது. துள்ளும் தேவியின் உள்ளத்தைப் போல், பூரித்து நிற்கும் செல்லத்தைப் போல் நிலவுக்கும் மகிழ்ச்சியா? அதுதான் என்றுமில்லாத வகையில் முக மலர்ந்து ஒளி கொட்டுகிறது. தேவி வீட்டு மல்லிகைப் பந்தல் கூட அன்று முற்றாக மலர்ந்து மணம் வீசியது. தென்றலில் தவழ்ந்து வரும் இனிய நாதஸ்வர ஓசை வேறு அவர்கள் உள்ளத்தை அலை பாய வைத்தது. தேவியின் இதயத்தில் இன்று கேட்கும் இன்பநாதம் இதுவரை காலமும் ஏன் கேட்கவில்லை?

செல்லத்தின் கூந்தலில் மல்லிகைச் சரத்தைச் செருகி அதன் அழகை இரசித்தாள் தேவி. செல்லமோ தன் கூந்தலை அழகு படுத்தும் அந்தக் கரங்களின் மென்மையையும் அது அசையும் வேகத்தையும் பார்த்து இரசித்தாள்.

"கொஞ்சம் திரும்பு செல்லம்." செல்லத்தின் முகவாயைப் பற்றி நிமிர்த்திய தேவி, அவள் நெற்றியில் திலகமிட்டாள். நான்கு விழிகளும் சிரித்தன.

"அக்கா" என்று சொல்லியவாறு செல்லம் தேவியின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

"அடியே, கழுத்தை விடடி. பொட்டில்லே அழியப் போகுது." தேவி செல்லமாகக் கடிந்து கொண்டாள். ஆனால் செல்லமா விடுவாள்?


பக்கம் 143

"அக்கா, எத்தினை மணிக்கு நாங்கள் போறது?"

"என்னடி அவசரம், இரவோட இரவா சந்நிதியிலே தாலிகட்டு. அப்பிடியே விடியக் கச்சேரிக்குப் போய் கல்யாண எழுத்து. எத்தினை தடவை சொல்லிப் போட்டன். இன்னும் கொஞ்சத்திலை கார் வந்திடும். கெதியாச் சீலையைக் கட்டு."

"கட்டி விடுங்கோவன்."

"சீலை கட்டத் தெரியாது. கல்யாணம் கட்ட வெளிக்கிட்டிட்டாள். வாடி இஞ்சாலே."

கேலி, சிரிப்பு, போலிக் கோபம் இவைகளோடு அவர்கள் இருவரும் தங்களை அலங்கரித்துக் கொண்டனர்.

ஊரெல்லாம் கோவில் திருவிழாவுக்குக் கூடியிருக்கும் நேரம் - அதைத்தான் தங்கள் மணவிழாவுக்குத் தகுந்த நேரமாக நண்பர்கள் தேர்ந்தெடுத்தனர். பட்டு வேட்டி சர சரக்க இளங்கோவின் வீட்டை நோக்கி நடக்கும் தேவனின் இதயத்தில் ´எல்லாம் நல்லபடி நடக்க வேண்டுமே´ என்ற கவலை இருந்தது. தாங்கள் செய்யப் போகும் புரட்சித் திருமணத்தின் விளைவை எண்ணிப் பார்க்கும் போது ஒருவித பயமும் அவனுக்கு இருந்தது. தாய் மீனாட்சி கோயிலுக்குப் போய் விட்டாள். தங்கை செல்லத்துக்கும் தேவி வீட்டில்தான் அலங்காரம் நடக்கிறது. தேவன் வரு முன்னரே இளங்கோ தயாராகி விட்டான். கைகளைக் கட்டியவாறு நிலவொளியில் அவன் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். அவன் இதயமும் ஒரு நிலையில் இல்லை.

"நீ, ரெடியே மச்சான்?" தேவன் கேட்டுக் கொண்டே வந்தான்.

"நான் ரெடி. மற்றவை...?"

"கொம்மா, அவேயை இஞ்ச கூட்டிக் கொண்டு வரத்தான் போறா. இஞ்சதானே கலியாணச் சாப்பாடு" மகா

பக்கம் 144

தேவன் சிரித்தான். இளங்கோவும் புன்னகைத்தான். அந்தப் புன்னகையில் சிறிது கவலையும் இருந்தது. இப்படித்தானா அவர்கள் திருமண விருந்து நடக்க வேண்டும்? நண்பர்கள் இருவரும் இருந்து, நடக்க வேண்டிய விடயங்களைப் பற்றி மீண்டும் ஒரு முறை கதைத்துக் கொண்டார்கள். எங்கிருந்தோ கோபாலும் அங்கு வந்து சேர்ந்தான்.

"கார் சரியாகப் பத்து மணிக்கு வரும். மேசன் கோவிந்தரும் வாரார். ´டிரைவர்´ ஒரு சாட்சிக்குக் கையெழுத்துப் போடுவார். வேற ஒரு தம்பிக்கும் விசயம் தெரியாது. நாளைக்கு எல்லாம் முடிஞ்சு ஊருக்கு வந்தாப் போலைதான் பிரச்சனை இருக்கு." கோபால் மிக வேகமாகப் பேசினான்.

"விசயம் முடியட்டும். நடந்து முடிஞ்சாப்போலே ஆரும் அசைக்க ஏலாது. அம்மாக்கு நாங்கள் பயப்பிடலாந்தான். வேற ஆருக்கும் ஏன் பயப்பிட வேணும்? நாங்களென்ன கொலையோ செய்யப் போறம்? மனசுக்குப் பிடிச்சவையைக் கலியாணங் கட்டுறது பெரிய பிழையே? எங்கடை ரிஜிஸ்ரேசனைச் செய்வம். செல்லம், மைனர் இளங்கோ தாலியைக் கட்டினால் சரி." மகாதேவன் சொன்னான்.

"அதுகள் வருகுதுகள்." இளங்கோ சொன்னான். அவனுக்கு வெட்கமாக இருந்தது. தங்கம், தேவியையும் செல்லத்தையும் அழைத்துக் கொண்டு வந்தாள்.

தங்கத்தின் முகத்தில்தான், எவ்வளவு பெருமிதம்? கோபால் கூட பழைய கோபாலாக மாறி விட்டான். என்றுமில்லாத இன்பம் அவன் இதயத்தில் பொங்குகிறது. தேவியின் கைகளைப் பிடித்தவாறு செல்லம் வருகிறாள். எத்தனை விதமான உணர்ச்சி அவர்களுக்கு. மகிழ்ச்சிதான் - அது தொண்டைக் குழிக்குள் சிக்கி விட்டது போன்ற ஒருவித தடுமாற்றம். கால்கள் பின்னுகின்றன. கண்களோ நிலத்தில் - மகிழ்ச்சி, பயம், தயக்கம், வெட்கம்... இவைகள் முன்னே வர அவர்கள் பின்னே வந்தார்கள்.

பக்கம் 145

நாணம் - பெண்களுக்குத்தான் சொந்தமா? இளங்கோவின் கன்னங்களும் சிவக்கின்றனவே! மகாதேவனும் நிலத்தைத்தான் பார்த்தான்.

குடிசையின் வாசலை அவர்கள் நெருங்குகிறார்கள். மணப்பெண்களுக்கு வானம் பனித்துளியால் பன்னீர் தெளித்து வரவேற்கிறது. நிலவோ வெண்பட்டுக் கம்பளம் விரிக்கிறது. பனை மரத்தால் விழும் நுங்குகளின் ஓசை பட்டாசுகளாகின்றது. கோவிலிலிருந்து மேளத்தையும், நாதஸ்வரத்தையும் தோழி தென்றலாள் அழைத்து வருகிறாள். தங்கம் வளர்த்த வாழைகள் கூட குலை போட்டு அவர்கள் வாசலில் காத்து நின்றன.

"நில்லுங்கோடி பிள்ளையள். கடவுளே, நாவூறு படப் போகுது." தங்கம் வாசலில் அவர்களை நிற்க வைத்து உள்ளே ஓடினாள். தயாராகத் தான் வைத்துச் சென்ற தட்டத்தை ஏந்தி வந்தாள். வாழைப்பழத்தின் மீது திரி வைத்து எரிந்து கொண்டிருந்த அதனை, மணப்பெண்களின் முகத்தை மூன்று முறை சுற்றி எடுத்தாள். பெண்கள் குடிசைக்குள் ஓடி மறைந்தனர்.

நண்பர்கள் நடக்க வேண்டியவைகளை மீண்டும் மீண்டும் கதைத்தனர். கடைசியாகக் கோபால் நேரம் போவதைச் சுட்டிக் காட்டினான்.

"வாருங்கோடா பெடியள், இலை போடுறன்." தங்கம் உணவருந்த அழைத்தாள்.

"அம்மா, நீ குழைச்சுத் தா அம்மா... நாங்கள் கையிலே சாப்பிடுறம்." இளங்கோ சொன்னான்.

"போடா, கல்யாண விருந்து கையிலேயே சாப்பிடுறது? இலை போட்டாச்சு வாங்கோ."

"இல்லை மாமி, நீங்கள் குழைச்சுத் தார மாதிரி வருமே? உங்கடை கையாலே எல்லாருக்கும் தாங்கோ" மகாதேவன் கேட்டுக் கொண்டான்.

பக்கம் 146

"இவங்கள் விடாங்கள். கையைக் கழுவிக் கொண்டு வாங்கோடா. மோனை தேவி, செல்லத்தையும் கூட்டிக் கொண்டு வா... எல்லாரும் ஒன்றாச் சாப்பிடுங்கோ."

தங்கம் ஒரு பெரிய சட்டியில் சோற்றைப் போட்டாள். பல கறிகளையும் அதற்குள் போட்டாள். இளங்கோவுக்குப் பிடித்தமான தயிரும், வெந்தயக் குழம்பும் சேர்க்கப் பட்டிருந்தன.

"நல்லாச் சாப்பிடுங்கோடா. பிள்ளையார் துணையிருந்தால், கடவுளே உங்களுக்கு ஒவ்வொரு நாளும் இப்பிடிக் குழைச்சுத் தர மாட்டனே? பிள்ளையள், ஏதோ உங்கடை விருப்பப்படி நடக்கிறியள். ஒன்றாக, ஒற்றுமையாக இருங்கோ. கடவுள் கைவிட மாட்டார். கையை வடிவாக நீட்டன் செல்லம்."

செல்லம் தன் அலங்காரம் கெடாத வகையில் சோற்றைச் சாப்பிட்டாள். தங்கத்தின் சுவையான சமையலை விட, அந்தச் சூழல், அவளது அன்பு வார்த்தைகள் அதற்கு இன்னும் சுவையூட்டின. விரல்களிடையே தயிரும், குழம்பும் வழிந்தோட ஆண்கள் மூவரும் அதை நக்கி நக்கிச் சாப்பிடுவதைப் பார்க்கத் தேவிக்கு வெட்கமாக இருந்தது.

தம்மை மறந்து உணவருந்திக் கொண்டிருந்த அவர்களுக்குக் காரின் ஓசை உணர்வை ஊட்டியது.

"கார் வந்திட்டிது" செல்லந்தான் தன்னையறியாமல் சொல்லிவிட்டு உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

எல்லாரும் அவசர அவசரமாக எழுந்தனர்.

குடிசைக்கு வெளியே வந்த கோபால் தெருவை எட்டிப் பார்த்தான். அவன் முகம் வெளிறியது.

"வாடைக் காரில்லை. அது கணவதிப்பிள்ளையரின்ரை கார். இந்த மனிசன் ஏன் இப்ப வருகுது? அவன்

பக்கம் 147

மெதுவாக உள்ளே வந்து சொன்னான். எல்லோர் முகத்திலும் திகில் பரவியது. தங்கம் ´பிள்ளையாரே, பிள்ளையாரே´ என்று முணுமுணுத்தாள். சில நிமிடங்கள் அங்கு அமைதி நிலவியது.

"மனுசன் என்னட்டைத்தான் வந்திருக்க வேணும். தியேட்டருக்கு நான் போகல்லை. அதுதான் போலை. நான் பார்த்துக் கொண்டு வாரன். நீங்கள் ஒருவரும் வெளியிலே வராதேங்கோ." கோபால் அவசர அவசரமாகக் காரை நோக்கி நடந்தான்.

"ஏதும், தொந்தரவென்றால் கூப்பிடு கோபால்" மகாதேவன் சொன்னான். எல்லோரது கண்களும் அவன் செல்லும் வழியையே பார்த்துக் கொண்டு நின்றன. நிமிடங்கள் யுகங்களாகக் கடந்தன.

++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++++

கோபால் காரை நெருங்கினான். கணபதிப்பிள்ளையர் அவன் வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

"கோபால், நீயேன் தியேட்டருக்கு வரயில்லை?"

"அக்காக்குச் சுகமில்லை..." கோhபல் தலையைச் சொறிந்தான்.

"என்ன, தேவிக்குச் சுகமில்லையோ? பாவம். நீதானே அவளைப் பாக்க வேணும். காரிலே ஏறு. உன்னோட கொஞ்சம் கதைக்க வேணும்.“

கோபால் முதலில் தயங்கினான். பின்னர் காரிலேறி அவர் பக்கத்தில் அமர்ந்தான். கணபதிப்பிள்ளையரின் நெற்றி வியர்த்திருந்தது. அவர் மெதுவாகப் பேச ஆரம்பித்தார்.

"கோபால், நீங்கள் இரண்டு பேரும் எவ்வளவு கஸ்டப் படுறியள்! ஊரெல்லாம் திருவிழாக் கொண்டாடுது. நீங்கள்

பக்கம் 148

இரண்டு பேரும் மாத்திரம் இஞ்ச தனிய இருக்கிறியள். நீ நினைக்கிறியே, கொக்காக்கு ஒரு மாப்பிள்ளை கிடைப்பானென்று?"

கோபால் ஒன்றும் பேசாது அவரைப் பார்த்தான். அவர் தொடர்ந்தார்.

"கோபால், உங்கடை துன்பத்தைப் பார்த்தால் எனக்கு மனங் கேட்க இல்லை. நானொரு முடிவுக்கு வந்திட்டன். கோபால், கொக்காவை நானே கட்டுறன். உனக்கு வேணுமான நேரமெல்லாம் காசு நான் தருவன். காலேலாத நீ கஷ்டப் படத் தேவையில்லை."

கோபால் அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவர் தன் பையில் கையை விட்டுச் சில நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவன் கைகளில் திணித்தார். தூரத்தே வாடகைக் காரின் விளக்கொளி கோபாலின் முகத்தில் விழுந்தது.

அக்காவைக் கட்ட அவர் முடிவு செய்து விட்டாராம்.

யார், யாருக்காக முடிவு செய்கிறார்கள்? எத்தனை மனிதர்களின் வாழ்வை, எதிர்காலத்தை எல்லாம் எவரெவரோ ஏன் முடிவு செய்கிறார்கள்? இந்தக் காணி உனக்குச் சொந்தமென்று நிலத்தைப் பிரித்த மனிதன், லட்சக் கணக்கான மனிதர்களின் தாய் நாட்டைக் கூடத் தானே தீர்மானிக்கிறான். நீ பேச வேண்டிய மொழி, உடுக்க வேண்டிய உடை, உண்ண வேண்டிய உணவு - இவையெல்லாவற்றையும் இன்று யார் யாரோ நமக்காகத் தீர்மானித்து விடுகிறார்களே! கோபாலுக்குச் சிந்திக்க நேரமிருக்கவில்லை. வாடகைக் கார் அவர்களைக் கடந்து தங்கம் வீட்டு வாசலில் நின்றது.

"காசைப் பிடி கோhபல். கார், ஏன் இந்த நேரத்திலே?" கணபதிப்பிள்ளையர் கேட்டார்.


பக்கம் 149

கோபால் காசை வாங்கிச் ´சேர்ட்´ பையில் போட்டுக் கொண்டான்.

"தங்கம் மாமிக்குச் சுகமில்லைப் போல. அதுதான் கார் வருகுது. நீங்கள் போங்கோ. அக்காவோட கதைச்சுப் போட்டு நான் சொல்ரன்."

"கோபால், இன்னும் அரைமணித்தியாலத்திலே வாரன். நல்ல முடிவாச் சொல்லு. முதலிலே கொக்கா பஞ்சிப் படுவாள். எல்லாம் உன்ரை கையிலே கிடக்கு. நீ நினைச்சால் இந்தக் காரிலே ராசா மாதிரி இருக்க ஏலாதே?"

கோபால் காரை விட்டு இறங்கினான். கணபதிப்பிள்ளையர் மீண்டும் பையில் கையை விட்டு இன்னொரு நூறு ரூபாயை எடுத்துக் கோபாலிடம் கொடுத்தார். அவர் கார் மெதுவாக நகர்ந்தது. அவர் முகத்தில் புன்னகை விரிந்திருந்தது.

+++++++++++++++ +++++++++++ ++++++++

"கெதியாக ஏறுங்கோ காரிலே" கோபால் அவசரப் படுத்தினான்.

முன் ´சீட்டில்´ மேசன் கோவிந்தர் இருந்தார். அவர் பக்கத்தில் இளங்கோ ஏறிக் கொண்டான். மகாதேவன், தங்கம், செல்லம், தேவி நால்வரும் பின்னால் ஏறிக் கொண்டனர்.

"கோபால், ஏறன்." இளங்கோ துரிதப் படுத்தினான்.

"இல்லை, நான் வரயில்லை."

"ஏன்? என்ன? காரிலிருந்து பல குரல்கள் கேட்டன.

"இல்லை. இன்னுங் கொஞ்சத்திலே கணவதிப்பிள்ளையர் வருவார். இஞ்ச ஒராள் இருந்தால்தான் ஏதும் நடக்காமல் பார்க்கலாம்."


பக்கம் 150

"என்ன மண்ணாங்கட்டி நடக்கப் போகுது? பேய்க்கதை கதையாமல் ஏறு." மகாதேவன் சத்தம் போட்டான்.

"கதைக்க நேரமில்லை. நீங்கள் போங்கோ. ஏலுமென்றால் நான் பஸ்ஸிலே வாரன். கணவதிப்பிள்ளையர் இப்ப வருவார்." கோபால் கைகளைப் பிசைந்தான்.

"அவர் வரட்டும். அவருக்கு ஏன் நாங்கள் பயப்பிட வேணும்? நீ ஏறு மச்சான்."

மகாதேவன் வற்புறுத்தினான். ஆனால் கோபால் மறுத்து விட்டான்.

"இல்லை மச்சான், நான் இஞ்சை இருந்தாலும் என்ரை நெஞ்சு உங்களோடைதான் இருக்கு. நீங்கள் திரும்பி வரேக்க இஞ்சையும் ஆள் வேண்டாமே?"

இளங்கோவும், மகாதேவனும் கோபாலின் கரங்களைப் பற்றினர். கார் மெதுவாக நகர ஆரம்பித்தது.

"அக்கா" கோபால் தேவியைப் பார்த்தான்.

"கோபால்" அவள் கண்களில் கண்ணீர் திரண்டிருந்தது. "தம்பி, வர மாட்டாயா?" என்று கண்கள் கெஞ்சின. அமைதியாக அவன் புன்னகைத்தான். அவன் உள்ளத்தின் உவகையெல்லாம் அந்தப் புன்னகையில் மலர்ந்தது. கார் மறையும் வரை அவன் கைகளை ஆட்டிக் கொண்டே நின்றான். ´அம்மம்மா, இன்றைக்கு நீ உயிரோடை இருந்தால்...´ அவனிதயம் எண்ணமிட்டது. கோபால் நீண்ட பெருமூச்சோடு கோவிலை நோக்கி நடந்தான்.

+++ +++ +++

அலங்கார ஊர்த்தியில் ஆண்டவனின் பயணம், கோயிலைச் சுற்றிச் செல்ல ஆரம்பித்து விட்டது.

பக்கம் 151

"கட்டாடி, பந்ததந்துக்கு எண்ணெய் ஊத்தி நல்லா எரியன். வழி விடுங்கோ, வழி விடுங்கோ" வேலுப்பிள்ளையரின் கம்பீரமான குரல் மேள, நாதஸ்வர ஓசைகளைக் கடந்து நன்றாகக் கேட்கிறது.

கோயில் ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது. வண்ண வண்ண விளக்குகள் கண் சிமிட்டுகின்றன. வாண வேடிக்கைகள் என்ன! இதயத்தை இழுக்கும் இசை வெள்ளந்தான் என்ன! அழகு, இனிமை, மகிழ்ச்சி... பொங்கி வழிகிறது. ஊரெல்லாங் கூடி என்ன செய்கிறது? வெண்கலச் சிலைக்கு விழா எடுக்கிறது. காசு மாலைகள், காப்புகள், சங்கிலிகள் போட்டு அந்தச் சிலைக்கு அழகு பார்க்கிறார்கள். பொருள் அள்ளிக் கொடுத்துப் போற்றுகிறார்கள். இந்த விழாவை நடத்த இத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள். யாருமில்லாத இடத்தைத் தேடி திருமணஞ் செய்ய அந்தக் காதலர்கள் போகிறார்கள். ஓ... மனிதர்களே! உங்களில் ஒருத்திக்கு வாழ்வளித்து விழா நடத்த உங்களால் முடியவில்லையே! இந்தச் சிலைக்கு விழா எடுக்க வெட்கமில்லையா?

ஒரு மூலையில் நின்றவாறு கோபால் சிந்தித்தான். இளங்கோவின் வார்த்தைகள் அவன் காதில் விழுந்தன.

"நாங்கள் எவ்வளவோ எதிர்ப்பை எதிர்பார்த்து இந்தக் கலியாணம் செய்யப் போகிறம். ஏன் இந்த ஊருக்கு இது பிடிக்க இல்லை? உழைக்கிற கை எங்கடை கை. நாங்கள் தாலி கட்டினால் எங்கடை பெண்சாதி பிள்ளையளை இவே பார்க்கப் போற இல்லை. இன்பமோ, துன்பமோ அது எங்களோடைதான். ஒரு திருவிழாவை நடத்த இவ்வளவு பேர் கூடினமே, ஒரு நல்ல காரியத்தைச் செய்ய நாலுபேர் கூடக் கூடாதோ? திருவிழா நடத்திறது தெய்வத்துக்காக இல்லை. இந்த ஊரிலே தங்களைப் பெரிய மனிதர்களாகக் காட்டிக் கொள்ள, தங்கடை செல்வாக்கைப் பெருக்கி, தாங்கள் நினைச்சவாறு நடக்க, இன்றைக்குப் பொது விசயம் என்று சொல்லுறதிலே முக்காவாசியும் தனிமனிதனுடைய சுயநலத்திலேதான் உருவாகுது. கோபால், எங்கடை

பக்கம் 152

கலியாணத்தைக் கோயிலிலே வைச்சு அந்தச் சிலைகளுக்கு மதிப்புக் கொடுத்து இன்னும் பல போலி மனிதர்களை உருவாக்க நான் விரும்ப இல்லை. என்றாலும் உங்களுக்காக என் கொள்கைகளை ஒதுக்கி வைச்சு வாரன்:"

இளங்கோ சொன்னதிலே எவ்வளவு உண்மையிருக்கு! பண்பும், அன்பும் இல்லாதவைக்கும் ஒரு மதிப்பைத் தேடுறதுக்கு கோயில் பயன்படுகுது. கணபதிப்பிள்ளையர், வேலுப்பிள்ளையர் போல ஆட்கள்தான் திருவிழா நடத்தீனம். எவ்வளவு சின்ன மனிதர்கள் இவர்கள்! ஓர் இதயத்தின் உணர்ச்சிகளை இவர்களால் புரிந்து கொள்ள முடியுமா? தங்கள் சுயநலம் ஒன்றையே கருத்தில் கொண்டு வாழும் இவர்கள் ஊரின் பெரிய மனிதர்களாவது எப்படி? இவர்களின் குரல்தான் சமூகத்தின் குரலானது எப்படி?

"அதுகள் தாலியைக் கட்டிக் கொண்டு ஊருக்கு வரேக்க இந்த மனிதர்கள்தானே முன்னுக்கு நின்று பேசப் போகினம். ஆட்களை வைச்சு அடிப்பீனம். வீட்டுக்கு நெருப்பு வைப்பீனம். தோட்டத்துக்க மாட்டை அவிழ்த்து விடுவீனம். ஊரை விட்டே துரத்துவீனம். தங்கடை எண்ணங்கள் நிறைவேறாத படியால் பழி தீர்த்துக் கொள்ளுவீனம்!"

கோபாலின் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன. இன்னும் கொஞ்ச நேரத்திலே கணபதிப்பிள்ளையர் அவனைத் தேடி வருவார். தேவியின் முடிவைக் கேட்க வருவார். வேலுப்பிள்ளையர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வெகுவேகமாக யாரையோ தேடுகிறார்.

"மீனாட்சி, இஞ்ச வா ஒரு கதை"

"என்ன அண்ணே" மீனாட்சியும் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வேலுப்பிள்ளையரை நோக்கி வருகிறாள். இருவரும் கோபால் ஒதுங்கி நின்ற மருத மரத்திற்கு அருகில் வருகிறார்கள். கோபால் மரத்துக்குப் பின்னால் மறைகிறான்.

பக்கம் 153

"மீனாட்சி, செல்லமும் மகாதேவனும் வீட்டிலேயே?"

"ஓமண்ணை" மீனாட்சி சொன்னாள்.

"பேய்க்கதை கதையாதை. அதுகள் இரத்தினனின்ரை காரிலே எங்கேயோ போகினமாம். படத்துக்குப் போன பெடியள் கண்டு சொல்லுதுகள்." வேலுப்பிள்ளையர் சொன்னார்.

"என்ரை பெடியளோ? எந்த வம்புக் குட்டியள் சொன்னது? பல்லுக் கொட்டிப் போடுவன்." மீனாட்சி சீறினாள்.

"அதுகள் சும்மா சொல்லாதுகள். நீ வீட்டை போய்ப் பார். நானும் கெதியா வாரன்." வேலுப்பிள்ளையர் சொன்னார்.

"பொறு, பொறு நான் வந்து கதைக்கிறன்." மீனாட்சி சேலையைக் செருகிக் கொண்டு நடந்தாள். வேலுப்பிள்ளையர் கோவிலை நோக்கிச் சென்றார். கோபால் மரத்தின் பின்னாலிருந்து வந்தான்.

"கோபால்" மீனாட்சியின் குரல் அவனை ஏதோ செய்தது.

"கோபால், வீட்டை போக வேண்டியிருக்கு. வாரியோ துணைக்கு?" மீனாட்சி கேட்டாள்.

"வாரன் மாமி" கோhபால் அவளை நோக்கி நடந்தான். இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.

"மேனை, தேவனைக் கண்டனீயே?" மீனாட்சி கேட்டாள்.

"இல்லை" அவன் தடுமாறினான். அவள் வழி நெடுகத் தன் பிள்ளைகளின அருமை பெருமைகளைப் பேசிக் கொண்டு நடந்தாள். வீட்டை அவர்கள் நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அதற்குள் கணபதிப்பிள்ளையரின் கார் அவர்கள் அருகில் வந்து நின்றது.


பக்கம் 154

"கோபால், தேவி வீட்டிலே இல்லையோ?" அவர் கேட்டார்.

கோபால் தன் பையில் கையை விட்டு அவர் கொடுத்த பணத்தை எடுத்துக் கொடுத்தான்.

"கோபால்" அவர் கோபத்தோடு கத்தினார்.

"முதலாளி விசயம் முடிஞ்சு போச்சு. வீணாக மினைக்கெடாதேங்கோ" கோபால் சொன்னான்.

"என்ன விசயம்? என்ன நடந்தது? எங்கே தேவி? செல்லம், செல்லம்! தேவா... தேவா, டேய் தேவா!" மீனாட்சி திறந்திருந்த படலையைத் கடந்து வீட்டுக்குள் ஓடினாள். கத்தினாள்.

"ஐயோ, என்ரை பிள்ளையள்... எடே கோபால், எங்கேயடா இவங்கள்?"

அவள் கேட்ட கேள்வியைத்தான் கணபதிப்பிள்ளையரும் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் கைகளில் கோபாலின் ´சேர்ட் காலர்´ இருந்தது.

"என்ரை அக்காவைப் பற்றிக் கேட்க நீங்கள் ஆர்?" கோபால் கோபமாகவே கேட்டான்.

"சொல்லப் போறியோ இல்லையோ? எலும்பு முறிச்சுப் போடுவன்."

கோபால் முகத்தைத் திருப்பிக் கொண்டான்: அவன் கன்னத்தில் ஓர் அறை விழுந்தது. அவன் திமிறினான்.

"சொல்லடா" கணபதிப்பிள்ளையர் கத்தினார். ஓங்கி மீண்டும் ஓர் அறை. கோபாலின் வலுவிழந்த கால்கள் அவனைத் தாங்கிக் கொள்ள மறுத்தன. திருவிழாவை மறந்து தெரு விழாவைப் பார்ப்பதற்கு சனம்; கூட ஆரம்பித்தது. பணபலம், உடற்பலம் உள்ளவன் ஒருவனால்


பக்கம் 155

ஓர் ஏழை நொண்டி உதைக்கப் படுகிறான். கதை பரவுகிறது. வேலுப்பிள்ளையர், அவர் மகன் மணியன் எல்லோரும் அங்கு வருகிறார்கள். மீனாட்சியோ வயிற்றலடித்தபடி கதறுகிறாள். கோபாலின் இதழோரத்தில் படிந்த புழுதியை, கடைவாயில் வடிந்த இரத்தம் கழுவுகிறது. அவன் தலையை நிமிர்த்தினால், எங்கே அடி விழுமோ என்ற எண்ணத்தில் நிலத்தையே பார்த்தபடி இருக்கிறான்.

மணல் ஒழுங்கை - அந்த மணலில் விழுந்திருக்கும் கோபால், சுற்றி ஒரு கூட்டம். வேலுப்பிள்ளையர் நடுவிற்கு வருகிறார்.

"ஐயோ அண்ணே, என்ரை பெடியளைக் காணயில்லை." மீனாட்சி அழுகிறாள்.

"தேவியில்லை. இளங்கோ இல்லை. செல்லமும் இல்லை. எங்கே தங்கம்?" கணபதிப்பிள்ளையர் கேட்டார். "விசயம் விளங்க இல்லையே!"

வேலுப்பிள்ளையரும், மணியமும் விளங்கிக் கொண்டார்கள்.

"ஐயோ, அவளோடை என்ரை மகன் ஓடிப் போயிட்டான்." மீனாட்சி கத்தினாள்.

"செல்லம்...?" வேலுப்பிள்ளையர் கேட்டார்.

"இளங்கோவோட..." மணியன் காறித் துப்பிவிட்டு நடந்தான்.

"சீ... சீ... அந்தத் தகப்பனில்லாதவனோட..." வேலுப்பிள்ளையரும் நடந்தார்.

"அண்ணே, அண்ணே நில்லண்ணே. எனக்கொரு வழி சொல்லு" மீனாட்சியின் குரல் அவர் காதில் விழவில்லை. கூட்டத்தின் கண்கள் கணபதிப்பிள்ளையரையே நோக்கின.


பக்கம் 156

"நாயள், நாயள் எக்கேடும் கெட்டுப் போங்கோ. மானம், ரோசம் கிடையாது. ஊரின்ரை பேரைக் கெடுக்க வந்ததுகள்." அந்த நல்ல மனிதரும் பேசி விட்டு நடந்தார். திருவிழா முடிந்தது. கூட்டம் கலைந்தது.

மீட்டாத வீணை - 14

பக்கம் 157

மீனாட்சி சேலைத் தலைப்பை நிலத்தில் விரித்துக் குடிசையின் தரையில் படுக்கிறாள். அவளால் அழுகையை இன்னும் அடக்க முடியவில்லை.

"என்ரை பெடியள் இப்பிடிச் செய்யுங்களோ?" அவள் வாய் முணுமுணுக்கிறது.

"ஐயோ கடவுளே, எனக்கு இனி ஆர்?"

வெறிச்சோடிக் கிடந்தது வீடு. பொழுது விடிந்து விட்டது. தேத்தண்ணி போட்டுத் தரச் செல்லமில்லை. கிணற்றடியிலே தேவன் தண்ணீர் இறைக்கும் சத்தம் இல்லை. ஆடு மட்டும் கத்துகிறது. தனிமை... பயங்கரமான தனிமை.

´எடியே, அதை வையடி. இதை எடடி´ இப்படி மீனாட்சி இனி யாருக்குச் சொல்ல முடியும்?

"அம்மா, தேத்தண்ணியைக் குடியன்." மீனாட்சி எழுந்து பார்க்கிறாள். அவள் இல்லை. செல்லம் இல்லை. வெறும் பிரமைதான்.

"கொண்ணனுக்குத் தேத்தண்ணி குடுத்தனீயே?" கேட்கத் துடிக்கிறது நாக்கு. அவனும் அங்கில்லை. அவளும் அங்கில்லையே. மீனாட்சிக்குத் தன் தலையை நிலத்தோடு மோத வேண்டும் போலிருக்கிறது. அவள் எழுந்து கிணற்றடியை நோக்கி நடக்கிறாள். வாளியில் தண்ணீர் இல்லை. அவனிருந்தால் வாளி நிறையத் தண்ணீர் இருக்குமே. மீனாட்சி கிணற்றுக் கட்டில் இருந்து விடுகிறாள்.
பக்கம் 158


ஆடு அவிழ்த்துக் கொண்டு ஓடி மிளகாய்ச் செடிகளைக் கடிக்கிறது. துள்ளி எழுகிறாள்.

"சூ... சூ... அடி செல்லம் ஆட்டைப் பிடிச்சுக் கட்டடி. இஞ்ச மிளகாயெல்லாம் கடிக்குது. கொண்ணன்..."

அவள் வார்த்தைகள் பாதியில் நிற்கின்றன. மீதி கண்ணீராக வடிகிறது. செல்லம் வரவில்லை.

ஆட்டை இழுத்துக் கட்டிய கோபால் மீனாட்சியின் அருகில் போய் நின்றான்.

"மாமி"

"மோனை" அவனைப் பிடித்துக் கொண்டு அவள் அழுதாள். "மோனை... மோனை... அதுகள் இல்லாமல் என்னாலே இருக்க ஏலாது..."

"மாமி, இன்னுங் கொஞ்சத்திலே அதுகள் வந்திடும். நீங்கள் விரும்பினால், அதுகள் இஞ்சையே இருக்கும். மாமி, ஆசைப்பட்டதுகள் கலியாணம் கட்டினால் என்ன பிழை?" கோபால் கேட்டான்.

"மாமி, நீங்கள் கோபப் பட்டால் ஞாயம். ஏன் மற்றவைக்கு இவ்வளவு வருத்தம்? உங்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டியவை எல்லாம் இப்ப எங்கே?"

"ஓமடா மோனை, எனக்கும் விளங்குது. நானும் என்ரை எண்ணப்படி நடக்கு வேணுமென்று பார்த்தன். அதுகள் கெட்டிக்காரர்கள், என்ரை பிள்ளையளில்லே? கோபால் அதுகள் எப்ப வரும்?" மீனாட்சி கேட்டாள்.

"இவ்வளவும் கலியாணம் முடிஞ்சிருக்கும். வழியிலே வந்து கொண்டிருப்பீனம்." கோபால் சொன்னான்.

"மோனை... அதுகள் புதுக்கப் புதுக்க மாப்பிளை பொம்பிளையா வரப் போகுதுகள். நான் ஒன்றும் செய்ய இல்லை. கொஞ்சம் உதவி செய்யிறியே? ஒரு சோறு காய்ச்சிப் போடுவன்."


பக்கம் 159

மீனாட்சி பழைய மீனாட்சியானாள். பம்பரமானாள். வீட்டைக் கூட்டிப் பெருக்கினாள். வீட்டு வாசலில் கோபாலைக் கொண்டு இரண்டு வாழைகள் நட்டு வைத்தாள். அக்கம் பக்கத்தவர்களும் ஒரு சிலர் வந்து உதவ ஆரம்பித்தார்கள். தடல்புடலாகச் சமையல் நடக்க ஆரம்பித்தது. மீனாட்சியின் மனதின் ஓர் ஓரத்திலே சிறிது வெட்கமும், வேதனையும் இருந்தாலும் அவள் முகத்தில் அது தெரியவில்லை. நேரம் கடந்து கொண்டிருந்தது. தனக்குப் பயந்து பிள்ளைகள் அங்கு வரமாட்டார்களோ என்ற பயம் அவளுக்கு ஏற்பட ஆரம்பித்தது. அவர்கள் வரவேண்டுமென அவள் பிரார்த்திக்க ஆரம்பித்தாள். எல்லோரும் மணமக்களை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

"பெடியள், வெடியைக் கொளுத்துங்கோடா, கார் வருகுது" மீனாட்சி சத்தமிட்டாள். படபடவென சீனவெடிகள் வெடித்தன. கார் மணல் ஒழுங்கையில் திரும்பியது. திகைப்போடு மணமக்கள் காரை விட்டு இறங்கினர். குத்துவிளக்கும், கும்பமும் அவர்களை வரவேற்றன. கோபால் புன்னகையோடு நின்றான். மீனாட்சி புதுச்சேலை அணிந்து மலர்ந்த முகத்தோடு காணப்பட்டாள். வாசலில் அவர்களை ஆராத்தி எடுக்க இரு பெண்கள் காத்திருந்தனர். அவர்களால் தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை. ஓடிப் போனவர்களுக்கா இந்த வரவேற்பு? தேவன் தன் தாயைப் பார்த்தான். ´அம்மா, எங்களை மன்னித்து விடு´ என்று அவன் கண்கள் கெஞ்சின.

ஆனால் மீனாட்சியின் கண்களிலோ பூரிப்புப் பொங்கியது. அப்பப்பா, தேவிதான் என்ன அழகாக இருக்கிறாள். முகமோ மலர் போலிருக்க, கூந்தலிலும் மல்லிகை மலர்களை அழகாகச் செருகியிருந்தாள். கழுத்திலும் அழகியதொரு மலர்மாலை - கன்னம் இரண்டிலும் மகிழ்வும், நாணமும் செங்குழம்பைப் பூசிக் கொண்டிருந்தன. ஆனால் கண்கள் மட்டும் மருட்சியோடு மீனாட்சியைப் பார்த்தன.

பக்கம் 160

அந்தப் பார்வை மீனாட்சியின் இதயத்தை ஏதோ செய்தது. தேவிக்கு, தான் பல கொடுமைகளைச் செய்து விட்டதைப் போன்ற உணர்வு - ஒரு கணம் அவள் அம்மம்மாவுக்கு ஏற்பட்ட கதி நினைவுக்கு வருகிறது. அடுக்களையில் வைத்து அவளை அடித்தது - பாவம் பெண் பேதை. மீனாட்சி மீண்டும் தேவியைப் பார்த்தாள். தேவியின் விழியோரங்களில் நீர் திரள ஆரம்பிக்கின்றது. மீனாட்சிக்து அது என்னமோ செய்கிறது.

"மருமகளே, வா" மீனாட்சி ஓடிச் சென்று அவள் கரங்களைப் பிடிக்கிறாள். தேவியின் கரங்கள் நடுங்குகின்றன. இதழ்கள் படபடக்கின்றன. அவள் பேச முடியாது தவிக்கிறாள். தேவனின் இதயத்தில் இடம் கிடைத்தது பெரிதல்ல. மீனாட்சியே அவளை ஏற்றுக் கொண்டால்...? தேவி அப்படியே குனிந்து அவள் கால்களைக் கட்டிக் கொண்டாள். மீனாட்சியின் உடலெங்கும் ஒரு புல்லரிப்பு. ஒரு பெண்ணுக்கு அவளுக்கு உரிய இடத்தைக் கொடுத்தால், இத்தனை இன்பமா? அவள் கரங்கள் தன் மருமகளின் கூந்தலைத் தடவுகின்றன. கண்கள் ஏனோ இன்பத்தால் பனிக்கின்றன. அவள் கண்கள் மட்டுமா? தங்கம் சேலைத் தலைப்பால் தன் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். கோபால் தன் கண்களில் வடியும் கண்ணீரை மறந்து அந்த இன்பக் காட்சியைப் பார்த்து நிற்கிறான். இளங்கோவோ அந்த இன்பத்தில் செல்லத்தின் கரங்களை அழுத்துகிறான். செல்லமோ தன் தாயை எண்ணிப் பெருமை கொள்கிறாள்.

"என்னடா, பார்த்துக் கொண்டு நிற்கிறாய்? பெரிய மனுசர் மாதிரி செய்யிறதையும் செய்து போட்டு. அதுகள் வெயிலுக்க நிக்குதுகள், கூட்டிக் கொண்டு வாவெனடா உள்ளே" மீனாட்சி தேவனைப் பார்த்து உரிமையோடு பேசுகிறாள். தேவன் புன்னகையோடு எல்லோரையும் வீட்டுக்குள் அழைத்து வருகிறான்.


பக்கம் 161

கலியாண வீடு களை தட்டுகிறது. ஆண், பெண்களெல்லாம் எங்கிருந்தோ வந்து சேருகிறார்கள். மீனாட்சி மகாராணி போல் அங்குமிங்கும் கட்டளையிட்டவாறு திரிகிறாள்.

"இலையைப் போடு, இலையைப் போடு என்று அவள் குரல் கேட்கும்.

"தங்கம், இந்த இலையைப் பார்த்து கறியைப் போடு." என்பாள்.

"இளங்கோ மோனை, நெய் விடட்டோ?" என்று கேட்பாள்.

"அடக் கோபால் சாப்பிடனடா. சோறு அப்பிடியே இருக்கு" என்று கடிந்து கொள்வாள்.

+++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++++++++++++++++


கலகலப்பாக அன்றைய பொழுது அங்கே மறைந்து கொண்டிருந்தது. கணபதிப்பிள்ளையர் மதுப்புட்டிகளைக் காலி செய்து கொண்டிருந்தார். அந்த ஏமாற்றத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மதுப்புட்டிகள் காலியாகக், காலியாக மனதில் குரோதமும், கோபமும் நிரம்புகின்றன.

"இதயம், பாசம், பண்பு - இது இருக்கிறவன் ஏழையில்லை. எண்பது வயதைத் தாண்டினாலும் எனக்குத் துணையாக இருக்கலாம்... ஆனால்... நீங்கள்... சீ... போங்கோ."

தேவியின் வார்த்தைகள் அவர் இதயத்தில் இன்னும் இருந்தன. ஆண்களால் எதையும் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் ஒரு பெண்ணால் அவன் புறக்கணிக்கப் பட்டால் அது தாங்க முடியாத வேதனைதான். அதுவும் கணபதிப்பிள்ளையர் பணத்தால் வெற்றிகளையே கண்டு வந்தவர். அவரால் அதைத் தாங்க முடியுமா?

பக்கம் 162

"விசயம் முடிஞ்சு போச்சு, வீணாக மினைக்கெடாதேங்கோ" கோபால் சொன்னவை அவர் காதில் விழுகின்றது. அவர் மேசையில் ஓங்கி அறைகிறார். மதுப்புட்டிகள் நடுங்குகின்றன. அவர் கதவை ஓங்கிச் சாத்திவிட்டு நடக்கிறார். எதிரே வந்த மகளையும் சட்டை செய்யாது ஏதோ ஒரு வெறியுடன் அவர் காரை ஓட்ட ஆரம்பிக்கிறார். அவருடைய கார் அவரது கையாள் வீட்டிற்குச் செல்கிறது. அவருக்கு வேண்டாதவர்களை அடிப்பதற்கும், அழிப்பதற்கும் என்று இருப்பவன்தான் நடராசன். அவன் கையில் காசை வைத்து "காரியத்தை முடி" என்கிறார் கணபதிப்பிள்ளையர்.

"முதலாளி கவலைப் படாதேங்கோ" என்கிறான் அவன். அவர் முகத்தில் வெற்றிப் புன்னகை மலர்கிறது.

+++++++++++ +++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++


திண்ணையில் இருந்தவாறு கோபால், இளங்கோ, தேவன் ஆகியோர் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கதிரவன் விரைவாக மறைந்து கொண்டிருக்கிறான். புதுத் தம்பதிகள் இரவைக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரியும் போலும். இளங்கோ, தேவனின் கண்கள் அடிக்கடி வீட்டினுள்ளே சுழல்கின்றன.

தேவியின் தலையை மீனாட்சி வாரிக் கொண்டிருக்கிறாள். தன் மருமகளின் நீண்ட, நெளிந்த கூந்தலைத் தடவும் போது அவளுக்கு ஒரு மகிழ்ச்சி. தன் மகனின் குறைகள் நிறைவுகளையும், விருப்பு வெறுப்புகளையும் அவள் சொல்லிக் கொண்டிருக்கிறாள். அவர்களுக்கு எதிரே தங்கம் செல்லத்தின் கூந்தலை அலங்கரிக்கிறாள். கிழவிகள் இடையிடையே கேலியும் செய்கிறார்கள். இளசுகள் வெட்கத்தால் இதழைக் கடித்துக் கொள்கிறார்கள்.

"தங்கம், பொழுதுபடப் போகுது. பொழுதுபட்டால் தலை இழுக்கக் கூடாது. கெதியா இழுத்து விடு." மீனாட்சி சொல்கிறாள். தேவியின் தலை பின்னியாயிற்று. அவள் எழுகிறாள்.


பக்கம் 163

"இஞ்ச திரும்பு பிள்ளை, பார்ப்பம்" மீனாட்சி தேவியைப் பார்க்கிறாள். "கடவுளே, நாவூறு படக் கூடாது. என்ரை கண்ணே பட்டிடும் போலயிருக்கு."

"மாமி, நீங்கள் தேத்தண்ணியும் குடிக்க இல்லை. போட்டுக் கொண்டு வரட்டே?" தேவி கேட்டாள்.

"போ பிள்ளை. இன்றைக்கு உனக்கு வேற வேலை கனக்க இருக்கு. போய் முகத்தைக் கழுவிக் கொண்டு வா. செல்லம், நீயும் போவனடி" மீனாட்சி சொன்னாள்.

"கொஞ்சம் பொறு மீனாட்சி. இன்னும் முடிய இல்லை. தலையைக் கொஞ்சம் குனி பிள்ளை." தங்கம் சொன்னாள்.

தேவி அறைக்குள் சென்றாள். எப்படியோ அங்கு வந்து விட்ட தேவன், அவள் கரத்தைப் பற்றிக் கொண்டான். அவள், அவன் விழிகளை ஆசையோடு பார்த்தாள். திருமணத்தின் பின் அவர்கள் இப்பொழுதுதான் தனிமையில் சந்திக்கின்றனர்.

"தேவி" அவன் கரங்கள் அவள் கன்னத்தைத் தடவுகின்றன. அவள் அவன் திறந்த மார்பில் தன் முகத்தைப் பதித்துக் கொள்கிறாள். அவள் செவ்விதழ்கள் அங்கே முத்திரையைப் பதிக்கின்றன. அவள் மெதுவாகப் பேசுகிறாள்.

"இன்னும் கொஞ்சம் பொறுங்கோ."

"ம்... ஹ_ம்" அவன் அவளை இறுகக் கட்டிக் கொள்கிறான்.

"விடுங்கோ. ஆரும் வரப் போகினம்... விடுங்கோவன். மாமியைக் கூப்பிடுவன்." தேவி சொல்கிறாள்.

"எனக்குப் பயமில்லை"

"மா... மி..."

பக்கம் 164

"டேய், அங்க என்னடா சத்தம்?" தேவி, இன்னும் முகம் கழுவ இல்லையே?" மீனாட்சியின் குரல் கேட்கிறது.

தேவி தேவனின் கன்னத்தில் கிள்ளி விட்டுத் துள்ளி ஓடுகிறாள். அதை ஜன்னலினூடே பார்த்த செல்லம் ´கிளுக்´ கெனச் சிரிக்கிறாள்.

"என்னடி சிரிப்பு?" மீனாட்சி கேட்க, தங்கம் பார்க்க செல்லம் ஒன்றும் சொல்ல முடியாது தவிக்கிறாள்.

"செல்லம், நான் கிணத்தடிக்குப் போறன். நீ வா" தேவி கிணற்றடியை நோக்கிப் போகிறாள். அவள் நடையில் ஒரு துள்ளல். உள்ளத்தின் எதிரொலியது. முகத்திலே மின்னுகிறது ஒரு புன்னகை. அவள் கதை குளத்திலோ, குட்டையிலோ முடியவில்லை. அவள் ஏங்கிக் கிடந்த வாழ்வு கிடைத்து விட்டது. அவள்... அவள்... இன்று ஒருவனுக்கு... அவள் ஆசைக்குரியவனுக்கு மனைவி. நம்ப முடியவில்லை. அவளுக்குக் கலியாணம் முடிந்து விட்டது. அவள் தாiலியைத் தடவிக் கொள்கிறாள். அவள் இதயமே மகிழ்ச்சியில் வெடித்து விடும் போலிருக்கிறது. தக்காளிப் பழங்களைக் கைகளால் தட்டியவாறு அவள் குழந்தை போல் துள்ளித் துள்ளி ஓடுகிறாள். இனி அவளை யாரும் கேலி செய்ய முடியாது.

இந்த உலகம் முழுவதும் கேட்கும் வகையில் "எனக்கும் கலியாணம் ஆகி விட்டது." என்று அவள் கத்த விரும்பினாள். வானத்துப் பறவைகளைப் பார்த்துக் கைகளை வீசினாள். வாழை இலைகளை வருடினாள். ஆட்டுக்குட்டியை அணைத்து முத்தங் கொடுத்தாள். நிலவைப் பார்த்துச் சிரித்தாள். இன்னும்; சில மணி நேரங்களின் பின், அவள் தன் கணவனின் மார்பில் சாய்ந்திருப்பாள். அந்த இணைப்பிலே அவள் வாழ்வின் இனிய நாதம் கேட்கப் போகிறது. அந்த இன்பநாதம் எழுந்து அவளுடலெங்கும் ஓடுகிறது. கிணற்றடியை அடைந்த தேவி வாய்விட்டுச் சிரித்தாள்.

பக்கம் 165

அவள் கண்களில் ஓட்டை வாளிதான் முதலில் பட்டது. ஒரு சேலைத் துண்டால் அவள் அந்த ஓட்டையை அடைத்தாள். அவள் இனி ஓட்டை வாளியில்லை. அந்த நீர் வீணாகப் போய் விடாது.

"எடி செல்லம், செல்லம்... கெதியாக வாவனடி" அவள் கிணற்றடியில் நின்று கத்தினாள்.

"வந்திட்டனக்கா... போக விடுங்கோவன்" தன் வழியை மறித்துக் கொண்டு நின்ற இளங்கோவைச் செல்லம் கெஞ்சினாள். அவளுக்கு ஓர் ஆசை - தேவி அக்காவைப் போல தானும் அவன் கன்னத்தில் கிள்ளி விட்டு ஓட வேண்டுமென்று. அவள், அவன் கன்னத்தைக் கிள்ள நெருங்கினாள். கை நடுங்கியது. அவன் சிரித்தான். அவள் வெட்கத்தோடு ஓடினாள்.

தேவி தண்ணீர் அள்ள ஆரம்பித்தாள். கிணற்று விளிம்பில் நின்றவாறு துலாக்கயிற்றை இழுத்தாள். யாரோ பின்னால் அசைவது போன்ற உணர்வு. செல்லமா? அவள் திரும்பினாள். அதற்குள் நடராசன் காரியத்தை முடித்து விட்டான். அவன் கை பலங்கொண்ட மட்டும் அவளைத் தள்ளியது.

"ஐயோ, அம்மா" அவள் வீரிட்டாள். கிணற்றின் பாதாளத்தை நோக்கி அவளுடல் போய்க் கொண்டிருந்தது. கணபதிப்பிள்ளையரின் கையாள் நடராசன் வேலியால் பாய்ந்து மறைந்து விட்டான்.

செல்லம் "வீல்" என்று அலறினாள்.

தேவனுக்கு எந்தக் குரலும் கேட்கவில்லை. ஆனால் தேவியின் குரல் தெளிவாகக் கேட்டது. எல்லோரும் கிணற்றடியை நோக்கி ஓடினார்கள். தங்கமும், மீனாட்சியும் ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார்கள். செல்லம் விம்மினாள். தேவனைத் தொடர்ந்து இளங்கோவும் கிணற்றுக்குள் இறங்கினான். கோபாலே கற்சிலை போல நின்றான்.


பக்கம் 166

நிலவு மறையவில்லை. அந்த வேதனைக் காட்சியைக் காண்பதில் அதற்கும் மகிழ்ச்சியா? இல்லை - தேவியின் முகத்தைத் தேவன் பார்க்க வேண்டுமென்று ஒளி கொடுக்கிறதா? கிணற்று நீர் - அதற்குள் அமிழ்ந்து கொண்டிருக்கிறது அந்த இன்பநாதம். தேவன் தேவியைத் தன் கரங்களில் அள்ளிக் கொண்டான். அவள் நெற்றியில் இப்பொழுது கரைவது குங்குமமல்ல. இரத்தம். அந்த இரத்தத்தைக் கரைப்பது தண்ணீர் மட்டுமல்ல, அவன் கண்ணீரும் கூட. தேவி தன் விழிகளால் ஏதோ சொல்லத் துடிக்கிறாள். அந்தப் பார்வை, ´ஓ... தேவா, என்னை வாழ வைச்சிட்டாய்´ என்கிறதா? இல்லை, ´தேவா, இந்த உலகம் ஏன் என்னை வாழவிடவில்லை?´ என்று ஏக்கத்தோடு கேட்கிறதா? தேவனின் கண்களில் திகில் பரவுகிறது. அவன் முடியும் வரை அவளைத் தன் மார்போடு சேர்த்துக் கொள்கிறான். ´தேவி, என்னைப் பிரிந்து போய் விடாதே.´ எனும் அவன் இதயத்தின் ஒலி அவளுக்கும் கேட்கட்டும் என்றா? இல்லை அவன் இதயத் துடிப்பாவது அவள் இருதயத்தை இயங்க வைக்காதா என்ற ஏக்கத்திலா? தேவி அவனையே பார்க்கிறாள். அந்தப் பார்வை... அந்தப் பார்வை... அப்படியே நிலைத்து விடுகிறது.

"தே... வி....."

தேவனின் குரல் கிணற்றுச் சுவரெங்கும் மோதி எதிரொலிக்கிறது. பல இதயச் சுவர்களிலே மோதிப் பரிதாபமாக ஒலிக்கிறது. கிணற்றின் மேலிருந்து கண்ணீர்த் துளிகள் அவன் மேனியில் விழுந்து நனைக்கின்றன. அதைச் சகிக்க முடியாது நிலவு கருமேகங்களிடையே மறைந்து கொண்டது.

முற்றும்.