Tuesday, March 27, 2007

மீட்டாத வீணை - 13

பக்கம் 142

பருவ நிலவுதான். அன்று அதன் ஒளிவெள்ளம் வழமையை விட பல மடங்காக இருந்தது. துள்ளும் தேவியின் உள்ளத்தைப் போல், பூரித்து நிற்கும் செல்லத்தைப் போல் நிலவுக்கும் மகிழ்ச்சியா? அதுதான் என்றுமில்லாத வகையில் முக மலர்ந்து ஒளி கொட்டுகிறது. தேவி வீட்டு மல்லிகைப் பந்தல் கூட அன்று முற்றாக மலர்ந்து மணம் வீசியது. தென்றலில் தவழ்ந்து வரும் இனிய நாதஸ்வர ஓசை வேறு அவர்கள் உள்ளத்தை அலை பாய வைத்தது. தேவியின் இதயத்தில் இன்று கேட்கும் இன்பநாதம் இதுவரை காலமும் ஏன் கேட்கவில்லை?

செல்லத்தின் கூந்தலில் மல்லிகைச் சரத்தைச் செருகி அதன் அழகை இரசித்தாள் தேவி. செல்லமோ தன் கூந்தலை அழகு படுத்தும் அந்தக் கரங்களின் மென்மையையும் அது அசையும் வேகத்தையும் பார்த்து இரசித்தாள்.

"கொஞ்சம் திரும்பு செல்லம்." செல்லத்தின் முகவாயைப் பற்றி நிமிர்த்திய தேவி, அவள் நெற்றியில் திலகமிட்டாள். நான்கு விழிகளும் சிரித்தன.

"அக்கா" என்று சொல்லியவாறு செல்லம் தேவியின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

"அடியே, கழுத்தை விடடி. பொட்டில்லே அழியப் போகுது." தேவி செல்லமாகக் கடிந்து கொண்டாள். ஆனால் செல்லமா விடுவாள்?


பக்கம் 143

"அக்கா, எத்தினை மணிக்கு நாங்கள் போறது?"

"என்னடி அவசரம், இரவோட இரவா சந்நிதியிலே தாலிகட்டு. அப்பிடியே விடியக் கச்சேரிக்குப் போய் கல்யாண எழுத்து. எத்தினை தடவை சொல்லிப் போட்டன். இன்னும் கொஞ்சத்திலை கார் வந்திடும். கெதியாச் சீலையைக் கட்டு."

"கட்டி விடுங்கோவன்."

"சீலை கட்டத் தெரியாது. கல்யாணம் கட்ட வெளிக்கிட்டிட்டாள். வாடி இஞ்சாலே."

கேலி, சிரிப்பு, போலிக் கோபம் இவைகளோடு அவர்கள் இருவரும் தங்களை அலங்கரித்துக் கொண்டனர்.

ஊரெல்லாம் கோவில் திருவிழாவுக்குக் கூடியிருக்கும் நேரம் - அதைத்தான் தங்கள் மணவிழாவுக்குத் தகுந்த நேரமாக நண்பர்கள் தேர்ந்தெடுத்தனர். பட்டு வேட்டி சர சரக்க இளங்கோவின் வீட்டை நோக்கி நடக்கும் தேவனின் இதயத்தில் ´எல்லாம் நல்லபடி நடக்க வேண்டுமே´ என்ற கவலை இருந்தது. தாங்கள் செய்யப் போகும் புரட்சித் திருமணத்தின் விளைவை எண்ணிப் பார்க்கும் போது ஒருவித பயமும் அவனுக்கு இருந்தது. தாய் மீனாட்சி கோயிலுக்குப் போய் விட்டாள். தங்கை செல்லத்துக்கும் தேவி வீட்டில்தான் அலங்காரம் நடக்கிறது. தேவன் வரு முன்னரே இளங்கோ தயாராகி விட்டான். கைகளைக் கட்டியவாறு நிலவொளியில் அவன் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். அவன் இதயமும் ஒரு நிலையில் இல்லை.

"நீ, ரெடியே மச்சான்?" தேவன் கேட்டுக் கொண்டே வந்தான்.

"நான் ரெடி. மற்றவை...?"

"கொம்மா, அவேயை இஞ்ச கூட்டிக் கொண்டு வரத்தான் போறா. இஞ்சதானே கலியாணச் சாப்பாடு" மகா

பக்கம் 144

தேவன் சிரித்தான். இளங்கோவும் புன்னகைத்தான். அந்தப் புன்னகையில் சிறிது கவலையும் இருந்தது. இப்படித்தானா அவர்கள் திருமண விருந்து நடக்க வேண்டும்? நண்பர்கள் இருவரும் இருந்து, நடக்க வேண்டிய விடயங்களைப் பற்றி மீண்டும் ஒரு முறை கதைத்துக் கொண்டார்கள். எங்கிருந்தோ கோபாலும் அங்கு வந்து சேர்ந்தான்.

"கார் சரியாகப் பத்து மணிக்கு வரும். மேசன் கோவிந்தரும் வாரார். ´டிரைவர்´ ஒரு சாட்சிக்குக் கையெழுத்துப் போடுவார். வேற ஒரு தம்பிக்கும் விசயம் தெரியாது. நாளைக்கு எல்லாம் முடிஞ்சு ஊருக்கு வந்தாப் போலைதான் பிரச்சனை இருக்கு." கோபால் மிக வேகமாகப் பேசினான்.

"விசயம் முடியட்டும். நடந்து முடிஞ்சாப்போலே ஆரும் அசைக்க ஏலாது. அம்மாக்கு நாங்கள் பயப்பிடலாந்தான். வேற ஆருக்கும் ஏன் பயப்பிட வேணும்? நாங்களென்ன கொலையோ செய்யப் போறம்? மனசுக்குப் பிடிச்சவையைக் கலியாணங் கட்டுறது பெரிய பிழையே? எங்கடை ரிஜிஸ்ரேசனைச் செய்வம். செல்லம், மைனர் இளங்கோ தாலியைக் கட்டினால் சரி." மகாதேவன் சொன்னான்.

"அதுகள் வருகுதுகள்." இளங்கோ சொன்னான். அவனுக்கு வெட்கமாக இருந்தது. தங்கம், தேவியையும் செல்லத்தையும் அழைத்துக் கொண்டு வந்தாள்.

தங்கத்தின் முகத்தில்தான், எவ்வளவு பெருமிதம்? கோபால் கூட பழைய கோபாலாக மாறி விட்டான். என்றுமில்லாத இன்பம் அவன் இதயத்தில் பொங்குகிறது. தேவியின் கைகளைப் பிடித்தவாறு செல்லம் வருகிறாள். எத்தனை விதமான உணர்ச்சி அவர்களுக்கு. மகிழ்ச்சிதான் - அது தொண்டைக் குழிக்குள் சிக்கி விட்டது போன்ற ஒருவித தடுமாற்றம். கால்கள் பின்னுகின்றன. கண்களோ நிலத்தில் - மகிழ்ச்சி, பயம், தயக்கம், வெட்கம்... இவைகள் முன்னே வர அவர்கள் பின்னே வந்தார்கள்.

பக்கம் 145

நாணம் - பெண்களுக்குத்தான் சொந்தமா? இளங்கோவின் கன்னங்களும் சிவக்கின்றனவே! மகாதேவனும் நிலத்தைத்தான் பார்த்தான்.

குடிசையின் வாசலை அவர்கள் நெருங்குகிறார்கள். மணப்பெண்களுக்கு வானம் பனித்துளியால் பன்னீர் தெளித்து வரவேற்கிறது. நிலவோ வெண்பட்டுக் கம்பளம் விரிக்கிறது. பனை மரத்தால் விழும் நுங்குகளின் ஓசை பட்டாசுகளாகின்றது. கோவிலிலிருந்து மேளத்தையும், நாதஸ்வரத்தையும் தோழி தென்றலாள் அழைத்து வருகிறாள். தங்கம் வளர்த்த வாழைகள் கூட குலை போட்டு அவர்கள் வாசலில் காத்து நின்றன.

"நில்லுங்கோடி பிள்ளையள். கடவுளே, நாவூறு படப் போகுது." தங்கம் வாசலில் அவர்களை நிற்க வைத்து உள்ளே ஓடினாள். தயாராகத் தான் வைத்துச் சென்ற தட்டத்தை ஏந்தி வந்தாள். வாழைப்பழத்தின் மீது திரி வைத்து எரிந்து கொண்டிருந்த அதனை, மணப்பெண்களின் முகத்தை மூன்று முறை சுற்றி எடுத்தாள். பெண்கள் குடிசைக்குள் ஓடி மறைந்தனர்.

நண்பர்கள் நடக்க வேண்டியவைகளை மீண்டும் மீண்டும் கதைத்தனர். கடைசியாகக் கோபால் நேரம் போவதைச் சுட்டிக் காட்டினான்.

"வாருங்கோடா பெடியள், இலை போடுறன்." தங்கம் உணவருந்த அழைத்தாள்.

"அம்மா, நீ குழைச்சுத் தா அம்மா... நாங்கள் கையிலே சாப்பிடுறம்." இளங்கோ சொன்னான்.

"போடா, கல்யாண விருந்து கையிலேயே சாப்பிடுறது? இலை போட்டாச்சு வாங்கோ."

"இல்லை மாமி, நீங்கள் குழைச்சுத் தார மாதிரி வருமே? உங்கடை கையாலே எல்லாருக்கும் தாங்கோ" மகாதேவன் கேட்டுக் கொண்டான்.

பக்கம் 146

"இவங்கள் விடாங்கள். கையைக் கழுவிக் கொண்டு வாங்கோடா. மோனை தேவி, செல்லத்தையும் கூட்டிக் கொண்டு வா... எல்லாரும் ஒன்றாச் சாப்பிடுங்கோ."

தங்கம் ஒரு பெரிய சட்டியில் சோற்றைப் போட்டாள். பல கறிகளையும் அதற்குள் போட்டாள். இளங்கோவுக்குப் பிடித்தமான தயிரும், வெந்தயக் குழம்பும் சேர்க்கப் பட்டிருந்தன.

"நல்லாச் சாப்பிடுங்கோடா. பிள்ளையார் துணையிருந்தால், கடவுளே உங்களுக்கு ஒவ்வொரு நாளும் இப்பிடிக் குழைச்சுத் தர மாட்டனே? பிள்ளையள், ஏதோ உங்கடை விருப்பப்படி நடக்கிறியள். ஒன்றாக, ஒற்றுமையாக இருங்கோ. கடவுள் கைவிட மாட்டார். கையை வடிவாக நீட்டன் செல்லம்."

செல்லம் தன் அலங்காரம் கெடாத வகையில் சோற்றைச் சாப்பிட்டாள். தங்கத்தின் சுவையான சமையலை விட, அந்தச் சூழல், அவளது அன்பு வார்த்தைகள் அதற்கு இன்னும் சுவையூட்டின. விரல்களிடையே தயிரும், குழம்பும் வழிந்தோட ஆண்கள் மூவரும் அதை நக்கி நக்கிச் சாப்பிடுவதைப் பார்க்கத் தேவிக்கு வெட்கமாக இருந்தது.

தம்மை மறந்து உணவருந்திக் கொண்டிருந்த அவர்களுக்குக் காரின் ஓசை உணர்வை ஊட்டியது.

"கார் வந்திட்டிது" செல்லந்தான் தன்னையறியாமல் சொல்லிவிட்டு உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

எல்லாரும் அவசர அவசரமாக எழுந்தனர்.

குடிசைக்கு வெளியே வந்த கோபால் தெருவை எட்டிப் பார்த்தான். அவன் முகம் வெளிறியது.

"வாடைக் காரில்லை. அது கணவதிப்பிள்ளையரின்ரை கார். இந்த மனிசன் ஏன் இப்ப வருகுது? அவன்

பக்கம் 147

மெதுவாக உள்ளே வந்து சொன்னான். எல்லோர் முகத்திலும் திகில் பரவியது. தங்கம் ´பிள்ளையாரே, பிள்ளையாரே´ என்று முணுமுணுத்தாள். சில நிமிடங்கள் அங்கு அமைதி நிலவியது.

"மனுசன் என்னட்டைத்தான் வந்திருக்க வேணும். தியேட்டருக்கு நான் போகல்லை. அதுதான் போலை. நான் பார்த்துக் கொண்டு வாரன். நீங்கள் ஒருவரும் வெளியிலே வராதேங்கோ." கோபால் அவசர அவசரமாகக் காரை நோக்கி நடந்தான்.

"ஏதும், தொந்தரவென்றால் கூப்பிடு கோபால்" மகாதேவன் சொன்னான். எல்லோரது கண்களும் அவன் செல்லும் வழியையே பார்த்துக் கொண்டு நின்றன. நிமிடங்கள் யுகங்களாகக் கடந்தன.

++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++++

கோபால் காரை நெருங்கினான். கணபதிப்பிள்ளையர் அவன் வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

"கோபால், நீயேன் தியேட்டருக்கு வரயில்லை?"

"அக்காக்குச் சுகமில்லை..." கோhபல் தலையைச் சொறிந்தான்.

"என்ன, தேவிக்குச் சுகமில்லையோ? பாவம். நீதானே அவளைப் பாக்க வேணும். காரிலே ஏறு. உன்னோட கொஞ்சம் கதைக்க வேணும்.“

கோபால் முதலில் தயங்கினான். பின்னர் காரிலேறி அவர் பக்கத்தில் அமர்ந்தான். கணபதிப்பிள்ளையரின் நெற்றி வியர்த்திருந்தது. அவர் மெதுவாகப் பேச ஆரம்பித்தார்.

"கோபால், நீங்கள் இரண்டு பேரும் எவ்வளவு கஸ்டப் படுறியள்! ஊரெல்லாம் திருவிழாக் கொண்டாடுது. நீங்கள்

பக்கம் 148

இரண்டு பேரும் மாத்திரம் இஞ்ச தனிய இருக்கிறியள். நீ நினைக்கிறியே, கொக்காக்கு ஒரு மாப்பிள்ளை கிடைப்பானென்று?"

கோபால் ஒன்றும் பேசாது அவரைப் பார்த்தான். அவர் தொடர்ந்தார்.

"கோபால், உங்கடை துன்பத்தைப் பார்த்தால் எனக்கு மனங் கேட்க இல்லை. நானொரு முடிவுக்கு வந்திட்டன். கோபால், கொக்காவை நானே கட்டுறன். உனக்கு வேணுமான நேரமெல்லாம் காசு நான் தருவன். காலேலாத நீ கஷ்டப் படத் தேவையில்லை."

கோபால் அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவர் தன் பையில் கையை விட்டுச் சில நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவன் கைகளில் திணித்தார். தூரத்தே வாடகைக் காரின் விளக்கொளி கோபாலின் முகத்தில் விழுந்தது.

அக்காவைக் கட்ட அவர் முடிவு செய்து விட்டாராம்.

யார், யாருக்காக முடிவு செய்கிறார்கள்? எத்தனை மனிதர்களின் வாழ்வை, எதிர்காலத்தை எல்லாம் எவரெவரோ ஏன் முடிவு செய்கிறார்கள்? இந்தக் காணி உனக்குச் சொந்தமென்று நிலத்தைப் பிரித்த மனிதன், லட்சக் கணக்கான மனிதர்களின் தாய் நாட்டைக் கூடத் தானே தீர்மானிக்கிறான். நீ பேச வேண்டிய மொழி, உடுக்க வேண்டிய உடை, உண்ண வேண்டிய உணவு - இவையெல்லாவற்றையும் இன்று யார் யாரோ நமக்காகத் தீர்மானித்து விடுகிறார்களே! கோபாலுக்குச் சிந்திக்க நேரமிருக்கவில்லை. வாடகைக் கார் அவர்களைக் கடந்து தங்கம் வீட்டு வாசலில் நின்றது.

"காசைப் பிடி கோhபல். கார், ஏன் இந்த நேரத்திலே?" கணபதிப்பிள்ளையர் கேட்டார்.


பக்கம் 149

கோபால் காசை வாங்கிச் ´சேர்ட்´ பையில் போட்டுக் கொண்டான்.

"தங்கம் மாமிக்குச் சுகமில்லைப் போல. அதுதான் கார் வருகுது. நீங்கள் போங்கோ. அக்காவோட கதைச்சுப் போட்டு நான் சொல்ரன்."

"கோபால், இன்னும் அரைமணித்தியாலத்திலே வாரன். நல்ல முடிவாச் சொல்லு. முதலிலே கொக்கா பஞ்சிப் படுவாள். எல்லாம் உன்ரை கையிலே கிடக்கு. நீ நினைச்சால் இந்தக் காரிலே ராசா மாதிரி இருக்க ஏலாதே?"

கோபால் காரை விட்டு இறங்கினான். கணபதிப்பிள்ளையர் மீண்டும் பையில் கையை விட்டு இன்னொரு நூறு ரூபாயை எடுத்துக் கோபாலிடம் கொடுத்தார். அவர் கார் மெதுவாக நகர்ந்தது. அவர் முகத்தில் புன்னகை விரிந்திருந்தது.

+++++++++++++++ +++++++++++ ++++++++

"கெதியாக ஏறுங்கோ காரிலே" கோபால் அவசரப் படுத்தினான்.

முன் ´சீட்டில்´ மேசன் கோவிந்தர் இருந்தார். அவர் பக்கத்தில் இளங்கோ ஏறிக் கொண்டான். மகாதேவன், தங்கம், செல்லம், தேவி நால்வரும் பின்னால் ஏறிக் கொண்டனர்.

"கோபால், ஏறன்." இளங்கோ துரிதப் படுத்தினான்.

"இல்லை, நான் வரயில்லை."

"ஏன்? என்ன? காரிலிருந்து பல குரல்கள் கேட்டன.

"இல்லை. இன்னுங் கொஞ்சத்திலே கணவதிப்பிள்ளையர் வருவார். இஞ்ச ஒராள் இருந்தால்தான் ஏதும் நடக்காமல் பார்க்கலாம்."


பக்கம் 150

"என்ன மண்ணாங்கட்டி நடக்கப் போகுது? பேய்க்கதை கதையாமல் ஏறு." மகாதேவன் சத்தம் போட்டான்.

"கதைக்க நேரமில்லை. நீங்கள் போங்கோ. ஏலுமென்றால் நான் பஸ்ஸிலே வாரன். கணவதிப்பிள்ளையர் இப்ப வருவார்." கோபால் கைகளைப் பிசைந்தான்.

"அவர் வரட்டும். அவருக்கு ஏன் நாங்கள் பயப்பிட வேணும்? நீ ஏறு மச்சான்."

மகாதேவன் வற்புறுத்தினான். ஆனால் கோபால் மறுத்து விட்டான்.

"இல்லை மச்சான், நான் இஞ்சை இருந்தாலும் என்ரை நெஞ்சு உங்களோடைதான் இருக்கு. நீங்கள் திரும்பி வரேக்க இஞ்சையும் ஆள் வேண்டாமே?"

இளங்கோவும், மகாதேவனும் கோபாலின் கரங்களைப் பற்றினர். கார் மெதுவாக நகர ஆரம்பித்தது.

"அக்கா" கோபால் தேவியைப் பார்த்தான்.

"கோபால்" அவள் கண்களில் கண்ணீர் திரண்டிருந்தது. "தம்பி, வர மாட்டாயா?" என்று கண்கள் கெஞ்சின. அமைதியாக அவன் புன்னகைத்தான். அவன் உள்ளத்தின் உவகையெல்லாம் அந்தப் புன்னகையில் மலர்ந்தது. கார் மறையும் வரை அவன் கைகளை ஆட்டிக் கொண்டே நின்றான். ´அம்மம்மா, இன்றைக்கு நீ உயிரோடை இருந்தால்...´ அவனிதயம் எண்ணமிட்டது. கோபால் நீண்ட பெருமூச்சோடு கோவிலை நோக்கி நடந்தான்.

+++ +++ +++

அலங்கார ஊர்த்தியில் ஆண்டவனின் பயணம், கோயிலைச் சுற்றிச் செல்ல ஆரம்பித்து விட்டது.

பக்கம் 151

"கட்டாடி, பந்ததந்துக்கு எண்ணெய் ஊத்தி நல்லா எரியன். வழி விடுங்கோ, வழி விடுங்கோ" வேலுப்பிள்ளையரின் கம்பீரமான குரல் மேள, நாதஸ்வர ஓசைகளைக் கடந்து நன்றாகக் கேட்கிறது.

கோயில் ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது. வண்ண வண்ண விளக்குகள் கண் சிமிட்டுகின்றன. வாண வேடிக்கைகள் என்ன! இதயத்தை இழுக்கும் இசை வெள்ளந்தான் என்ன! அழகு, இனிமை, மகிழ்ச்சி... பொங்கி வழிகிறது. ஊரெல்லாங் கூடி என்ன செய்கிறது? வெண்கலச் சிலைக்கு விழா எடுக்கிறது. காசு மாலைகள், காப்புகள், சங்கிலிகள் போட்டு அந்தச் சிலைக்கு அழகு பார்க்கிறார்கள். பொருள் அள்ளிக் கொடுத்துப் போற்றுகிறார்கள். இந்த விழாவை நடத்த இத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள். யாருமில்லாத இடத்தைத் தேடி திருமணஞ் செய்ய அந்தக் காதலர்கள் போகிறார்கள். ஓ... மனிதர்களே! உங்களில் ஒருத்திக்கு வாழ்வளித்து விழா நடத்த உங்களால் முடியவில்லையே! இந்தச் சிலைக்கு விழா எடுக்க வெட்கமில்லையா?

ஒரு மூலையில் நின்றவாறு கோபால் சிந்தித்தான். இளங்கோவின் வார்த்தைகள் அவன் காதில் விழுந்தன.

"நாங்கள் எவ்வளவோ எதிர்ப்பை எதிர்பார்த்து இந்தக் கலியாணம் செய்யப் போகிறம். ஏன் இந்த ஊருக்கு இது பிடிக்க இல்லை? உழைக்கிற கை எங்கடை கை. நாங்கள் தாலி கட்டினால் எங்கடை பெண்சாதி பிள்ளையளை இவே பார்க்கப் போற இல்லை. இன்பமோ, துன்பமோ அது எங்களோடைதான். ஒரு திருவிழாவை நடத்த இவ்வளவு பேர் கூடினமே, ஒரு நல்ல காரியத்தைச் செய்ய நாலுபேர் கூடக் கூடாதோ? திருவிழா நடத்திறது தெய்வத்துக்காக இல்லை. இந்த ஊரிலே தங்களைப் பெரிய மனிதர்களாகக் காட்டிக் கொள்ள, தங்கடை செல்வாக்கைப் பெருக்கி, தாங்கள் நினைச்சவாறு நடக்க, இன்றைக்குப் பொது விசயம் என்று சொல்லுறதிலே முக்காவாசியும் தனிமனிதனுடைய சுயநலத்திலேதான் உருவாகுது. கோபால், எங்கடை

பக்கம் 152

கலியாணத்தைக் கோயிலிலே வைச்சு அந்தச் சிலைகளுக்கு மதிப்புக் கொடுத்து இன்னும் பல போலி மனிதர்களை உருவாக்க நான் விரும்ப இல்லை. என்றாலும் உங்களுக்காக என் கொள்கைகளை ஒதுக்கி வைச்சு வாரன்:"

இளங்கோ சொன்னதிலே எவ்வளவு உண்மையிருக்கு! பண்பும், அன்பும் இல்லாதவைக்கும் ஒரு மதிப்பைத் தேடுறதுக்கு கோயில் பயன்படுகுது. கணபதிப்பிள்ளையர், வேலுப்பிள்ளையர் போல ஆட்கள்தான் திருவிழா நடத்தீனம். எவ்வளவு சின்ன மனிதர்கள் இவர்கள்! ஓர் இதயத்தின் உணர்ச்சிகளை இவர்களால் புரிந்து கொள்ள முடியுமா? தங்கள் சுயநலம் ஒன்றையே கருத்தில் கொண்டு வாழும் இவர்கள் ஊரின் பெரிய மனிதர்களாவது எப்படி? இவர்களின் குரல்தான் சமூகத்தின் குரலானது எப்படி?

"அதுகள் தாலியைக் கட்டிக் கொண்டு ஊருக்கு வரேக்க இந்த மனிதர்கள்தானே முன்னுக்கு நின்று பேசப் போகினம். ஆட்களை வைச்சு அடிப்பீனம். வீட்டுக்கு நெருப்பு வைப்பீனம். தோட்டத்துக்க மாட்டை அவிழ்த்து விடுவீனம். ஊரை விட்டே துரத்துவீனம். தங்கடை எண்ணங்கள் நிறைவேறாத படியால் பழி தீர்த்துக் கொள்ளுவீனம்!"

கோபாலின் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன. இன்னும் கொஞ்ச நேரத்திலே கணபதிப்பிள்ளையர் அவனைத் தேடி வருவார். தேவியின் முடிவைக் கேட்க வருவார். வேலுப்பிள்ளையர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வெகுவேகமாக யாரையோ தேடுகிறார்.

"மீனாட்சி, இஞ்ச வா ஒரு கதை"

"என்ன அண்ணே" மீனாட்சியும் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வேலுப்பிள்ளையரை நோக்கி வருகிறாள். இருவரும் கோபால் ஒதுங்கி நின்ற மருத மரத்திற்கு அருகில் வருகிறார்கள். கோபால் மரத்துக்குப் பின்னால் மறைகிறான்.

பக்கம் 153

"மீனாட்சி, செல்லமும் மகாதேவனும் வீட்டிலேயே?"

"ஓமண்ணை" மீனாட்சி சொன்னாள்.

"பேய்க்கதை கதையாதை. அதுகள் இரத்தினனின்ரை காரிலே எங்கேயோ போகினமாம். படத்துக்குப் போன பெடியள் கண்டு சொல்லுதுகள்." வேலுப்பிள்ளையர் சொன்னார்.

"என்ரை பெடியளோ? எந்த வம்புக் குட்டியள் சொன்னது? பல்லுக் கொட்டிப் போடுவன்." மீனாட்சி சீறினாள்.

"அதுகள் சும்மா சொல்லாதுகள். நீ வீட்டை போய்ப் பார். நானும் கெதியா வாரன்." வேலுப்பிள்ளையர் சொன்னார்.

"பொறு, பொறு நான் வந்து கதைக்கிறன்." மீனாட்சி சேலையைக் செருகிக் கொண்டு நடந்தாள். வேலுப்பிள்ளையர் கோவிலை நோக்கிச் சென்றார். கோபால் மரத்தின் பின்னாலிருந்து வந்தான்.

"கோபால்" மீனாட்சியின் குரல் அவனை ஏதோ செய்தது.

"கோபால், வீட்டை போக வேண்டியிருக்கு. வாரியோ துணைக்கு?" மீனாட்சி கேட்டாள்.

"வாரன் மாமி" கோhபால் அவளை நோக்கி நடந்தான். இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.

"மேனை, தேவனைக் கண்டனீயே?" மீனாட்சி கேட்டாள்.

"இல்லை" அவன் தடுமாறினான். அவள் வழி நெடுகத் தன் பிள்ளைகளின அருமை பெருமைகளைப் பேசிக் கொண்டு நடந்தாள். வீட்டை அவர்கள் நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அதற்குள் கணபதிப்பிள்ளையரின் கார் அவர்கள் அருகில் வந்து நின்றது.


பக்கம் 154

"கோபால், தேவி வீட்டிலே இல்லையோ?" அவர் கேட்டார்.

கோபால் தன் பையில் கையை விட்டு அவர் கொடுத்த பணத்தை எடுத்துக் கொடுத்தான்.

"கோபால்" அவர் கோபத்தோடு கத்தினார்.

"முதலாளி விசயம் முடிஞ்சு போச்சு. வீணாக மினைக்கெடாதேங்கோ" கோபால் சொன்னான்.

"என்ன விசயம்? என்ன நடந்தது? எங்கே தேவி? செல்லம், செல்லம்! தேவா... தேவா, டேய் தேவா!" மீனாட்சி திறந்திருந்த படலையைத் கடந்து வீட்டுக்குள் ஓடினாள். கத்தினாள்.

"ஐயோ, என்ரை பிள்ளையள்... எடே கோபால், எங்கேயடா இவங்கள்?"

அவள் கேட்ட கேள்வியைத்தான் கணபதிப்பிள்ளையரும் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் கைகளில் கோபாலின் ´சேர்ட் காலர்´ இருந்தது.

"என்ரை அக்காவைப் பற்றிக் கேட்க நீங்கள் ஆர்?" கோபால் கோபமாகவே கேட்டான்.

"சொல்லப் போறியோ இல்லையோ? எலும்பு முறிச்சுப் போடுவன்."

கோபால் முகத்தைத் திருப்பிக் கொண்டான்: அவன் கன்னத்தில் ஓர் அறை விழுந்தது. அவன் திமிறினான்.

"சொல்லடா" கணபதிப்பிள்ளையர் கத்தினார். ஓங்கி மீண்டும் ஓர் அறை. கோபாலின் வலுவிழந்த கால்கள் அவனைத் தாங்கிக் கொள்ள மறுத்தன. திருவிழாவை மறந்து தெரு விழாவைப் பார்ப்பதற்கு சனம்; கூட ஆரம்பித்தது. பணபலம், உடற்பலம் உள்ளவன் ஒருவனால்


பக்கம் 155

ஓர் ஏழை நொண்டி உதைக்கப் படுகிறான். கதை பரவுகிறது. வேலுப்பிள்ளையர், அவர் மகன் மணியன் எல்லோரும் அங்கு வருகிறார்கள். மீனாட்சியோ வயிற்றலடித்தபடி கதறுகிறாள். கோபாலின் இதழோரத்தில் படிந்த புழுதியை, கடைவாயில் வடிந்த இரத்தம் கழுவுகிறது. அவன் தலையை நிமிர்த்தினால், எங்கே அடி விழுமோ என்ற எண்ணத்தில் நிலத்தையே பார்த்தபடி இருக்கிறான்.

மணல் ஒழுங்கை - அந்த மணலில் விழுந்திருக்கும் கோபால், சுற்றி ஒரு கூட்டம். வேலுப்பிள்ளையர் நடுவிற்கு வருகிறார்.

"ஐயோ அண்ணே, என்ரை பெடியளைக் காணயில்லை." மீனாட்சி அழுகிறாள்.

"தேவியில்லை. இளங்கோ இல்லை. செல்லமும் இல்லை. எங்கே தங்கம்?" கணபதிப்பிள்ளையர் கேட்டார். "விசயம் விளங்க இல்லையே!"

வேலுப்பிள்ளையரும், மணியமும் விளங்கிக் கொண்டார்கள்.

"ஐயோ, அவளோடை என்ரை மகன் ஓடிப் போயிட்டான்." மீனாட்சி கத்தினாள்.

"செல்லம்...?" வேலுப்பிள்ளையர் கேட்டார்.

"இளங்கோவோட..." மணியன் காறித் துப்பிவிட்டு நடந்தான்.

"சீ... சீ... அந்தத் தகப்பனில்லாதவனோட..." வேலுப்பிள்ளையரும் நடந்தார்.

"அண்ணே, அண்ணே நில்லண்ணே. எனக்கொரு வழி சொல்லு" மீனாட்சியின் குரல் அவர் காதில் விழவில்லை. கூட்டத்தின் கண்கள் கணபதிப்பிள்ளையரையே நோக்கின.


பக்கம் 156

"நாயள், நாயள் எக்கேடும் கெட்டுப் போங்கோ. மானம், ரோசம் கிடையாது. ஊரின்ரை பேரைக் கெடுக்க வந்ததுகள்." அந்த நல்ல மனிதரும் பேசி விட்டு நடந்தார். திருவிழா முடிந்தது. கூட்டம் கலைந்தது.

No comments: