1
பக்கம்-1
ஓங்கி வளர்ந்த பனைமரங்கள் ஓலைகளால் திரை போட, அதனூடே தனது ஒளிக்கற்றை நீட்டி தரையைப் பார்க்கத் துடிக்கிறது பொங்கிவரும் பெரு நிலவு. அந் நிலவுக்கு இளங்காற்று தோழன் போலும். அதனால்தான் அந்த ஓலைத் திரையை விலக்கி, நிலவின் ஒளி முகத்தைத் தரைக்குக் காட்டுகிறது. வாழ்க்கைப் பயணம் முடிந்து, பாதி வழியில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு காய்ந்த ஓலைக்குக் காற்றின் செய்கை பிடிக்கவில்லை. அது பனையோடு மோதி, மோதி, பலத்த ஓசையுடன், தனது ஆட்சேபனையைத் தெரிவிக்கிறது. காற்றின் குறும்பு கவிஞருக்கு விருந்தாகலாம். ஆனால் பாவம், இளங்கோ என்ன தவறு செய்தான்? அவன் குடிசைக்குள் தவழ்வது போதாதென்று, அவன் விளக்கோடுமா அதற்கு விளையாட்டு?
மெழுகப்பட்ட தரையில் தாயின் சேலையை விரித்து, குழந்தையைப் போல் குப்புறப் படுத்தபடி புத்தகமொன்றைப் படிக்க முயன்று கொண்டிருந்தான் அவன். இளங்கோ தன்னை மறந்து புத்தகத்தில் மூழ்கி விடக் கூடாதென்று பயந்த தென்றலாள், மண்ணெண்ணெய் விளக்கின் சுடரோடு விளையாடி, அவனைத் தன் பக்கம் ஈர்க்க முயன்றான். அசைகின்ற விளக்கின் சுடருக்கேற்ப தன் புத்தகத்தையும் அசைத்து நற்கருத்துக்களை அசை போட்டுக் கொண்டிருந்தான் அவன். அவன் கவனத்தை ஈர்க்க தென்றலாள் மட்டுமா முயல்கிறாள்? இளங்கோவின் தாயும் பலமுறை முயன்று விட்டாள்.
பக்கம்-2
"தம்பி சாப்பிட இல்லையே?" ஐந்தாவது தடவையாக அவள் கேட்டாள்.
மெதுவாக விழிகளை உயர்த்தினான் இளங்கோ. குடிசை வாசலில் இருந்தபடி அவள் ஒடியல் முறிக்கிறாள். அதை முறிக்கும் வேகத்திலிருந்து, பொறுமையை அவள் இழந்து கொண்டிருக்கிறாள் என்பது புரிகிறது. அவன் முறுவலித்தான்.
"என்னம்மா, திருவிழாவுக்கு நேரமாச்சுதே?"
அவன் கேலியாகக் கேட்பது அவளுக்குப் புரிகிறது.
"உங்களைப் போல நாங்களென்ன படத்துக்கே போறம்? வா... வா... கையைக் கழுவிக் கொண்டு" அவள் பட படவென்று பேசியபடி ஒடியலை அப்புறப் படுத்துகிறாள்.
நாதஸ்வர ஓசை காற்றில் தவழ்கிறது. புத்தகத்தை ஒதுக்கி, குடிசைக்கு வெளியே இருக்கும் குடத்து நீரில் தன் கைகளைக் கழுவிக் கொள்ள இளங்கோ விரைகிறான். வெண்ணிலவின் தண்ணொளி அவன் பொன்னிற மேனியை மெருகேற்றுகிறது. தென்றலாள் ஓடிவந்து அவனை அணைத்துக் கொள்கிறாள். அந்த வேகத்தில் அவன் சுருண்ட கேசம் நெற்றியில் புரள்கிறது. இல்லையேல், அழகாக அரும்பியிருக்கும் அவன் மீசையைப் பார்த்து, அது அழகுப் போட்டிக்கு அழைக்கிறதோ? கைகளைக் கழுவித் தாயருகில் வந்தமர்ந்தான். வெந்தயக் குழம்பி ன் வாசம் மூக்கைத் துளைக்கின்றது. குழம்புச் சட்டிக்குள் சோற்றைப் போட்டு, தாய் அதைக் குழைக்கிறாள். சிறிது தயிரும் ஊற்றிச் சோற்றைப் பிசைந்தாள். நாவில் நீர் ஊறுகிறது. இளங்கோ இரு கைகளையும் விரித்து நீட்டினான். விரல்களிடையே தயிரும், குழம்பும் வழிந்தோட, அவன் கரங்களில் திரட்டிய சோற்றைக் கொடுத்தாள் தாய்.
"தம்பி இன்னும் கொஞ்சம் சாப்பிடன்."
"எனக்குப் போதும் நீ சாப்பிடு." வழக்கமாக அவன் சொல்லும் பொய்யது.
பக்கம்-3
அவள் கடைசிப் பிடியைச் சாப்பிட்டு, சட்டியைக் கழுவினாள். கழுவவும் வேண்டுமா? சில வினாடிகளில் பல வேலைகளை முடித்து இளங்கோவின் தாய் திருவிழாவிற்குச் செல்லத் தயாராகி விட்டாள். அவனும் தன் வேட்டியைச் சுற்றிக் கட்டிக் கொண்டான். ஒரு கையில் சுருட்டிய பாயும், மறு கையில் அரிக்கன் விளக்குமாகத் தாய் முன்னே நடக்க, ஓலைக் கதவை இறுகக் கட்டிவிட்டு அவன் பின் தொடர்ந்தான்.
"தங்கமக்கை, நில். நாங்களும் வாறம்." பக்கத்து வீட்டு மீனாட்சியின் குரலது.
இளங்கோவின் இதயத்தில் ஓர் இனந்தெரியாத இன்ப உணர்ச்சி பரவியது. அது மீனாட்சியின் குரல் தந்த உணர்வல்ல. அதைத் தொடர்ந்து காற்று சுமந்து வந்த மல்லிகையின் மணம் தந்த மகிழ்ச்சியா? அதுவுமல்ல. அந்த மல்லிகையைச் சுமந்து வந்த இளமங்கை செய்யும் இன்பக் கிளர்ச்சி.
"கெதியாக வா பிள்ளை" இளங்கோவின் தாய் சொல்கிறாள். அவனும் சொல்லத் துடிக்கிறான். நிலவு மேகத்தில் மறைந்திருக்கிறது. மேகத்தினூடே அதன் ஒளி சிறிது தெரிகிறது. மீனாட்சியின் பின்னால் பட்டுப்பாவாடை சரசரக்கிறது. மேகம் கலைகிறது. இளங்கோவுக்குப் பூவாடையும், பாவடையும் வாடைக்காற்றுத் தரும் மயக்கத்தைத் தருகின்றன. ´பளிச்´ சென்று நிலவு தெரிகிறது. வெண்ணிலவா? இல்லை. அது பெண்ணிலவு. அடி மேல் அடி வைத்து மீனாட்சியின் மகள் செல்லம் வருகிறாள். ´பருவ நிலா பவனி வருகிறது.´
நீல நிறத்தில் கால்வரை நீண்ட பாவாடையும், அதே நிறத்தில் சட்டையும் அவள் அணிந்திருந்தாள். நிலவின் ஒளி அவள் சிறிய பாதங்களில் பட்டுத் தெறிக்கும் போது, பாவாடையின் மஞ்சள் வர்ணக் கரை ஒளி
பக்கம்-4
யிழந்தது. கருவிழிகள் அங்குமிங்கும் ஓடும் போது அவன் இதயமும் சேர்ந்து ஓடியது.
"இளங்கோ, நீ இப்பதானே கோயிலுக்குப் போறாய். என்ரை மோன், இண்டு முழுக்க அங்கதானே. சாப்பிடக் கூட வர இல்லை. பெடியள் திருவிழா இல்லே? நீயேன் போகல்லை.?" மீனாட்சி கேட்டாள்.
"என்ரை இவனுக்கு உதுகள் பிடிக்காது பிள்ளை. உது மற்றதுகள் மாதிரியில்லை. எத்தனை தடவை சொன்னனான் போகச் சொல்லி" தாய் தங்கம் அங்கலாய்த்தாள்.
"உவன் தம்பிக்கும் பொல்லாத கோவம். எல்லாப் பொடியளும் சேரக்குள்ள இவனேன் சேரல்லை?" மீனாட்சி வினாவினாள்.
செல்லத்தின் விழிகளும் அதையே கேட்டன. அவன் பதில் ஒரு புன்னகைதான். மேளக் கச்சேரி இப்பொழுது தெளிவாகக் கேட்டது. அவர்கள் கோயிலை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். பாதையின் இரு பக்கங்களிலும் மனிதர்கள் நடந்தனர். சிரத்த முகங்கள், கலகலப்பான பேச்சுக்கள், வாழ்க்கைக்கு நம்பிக்கையூட்டும் காட்சி. செல்லத்தின் விழிகள் துரு துருவென அங்குமிங்கும் ஓடி அலைந்தன. கூண்டுக்குள்ளேயே அடைபட்டிருக்கும் அந்தப் பைங்கிளி வெளியே வந்ததால் ஏற்பட்ட களிப்புணர்ச்சி, அவள் கண்களிலே பளபளத்தது. அலங்காரச் சிகரங்கள், வண்ண வண்ண விளக்குகள், வாழையும், சவுக்க மரங்களும்... அப்பப்பா, என்ன காட்சி! அதை விட துள்ளியோடும் குழந்தைகளின் ´கல, கல´ சிரிப்பொலி, பல்லில்லாக் கிழவிகளின் பொக்கை வாய்ச் சிரிப்பு, பருவக் குமரிகளின் மந்தகாசப் புன்னகை... செல்லத்தின் இதயம் மட்டுமா, எல்லா நல்ல உள்ளங்களும் இன்பத்தில் தவழ்ந்தன. கன்னியர் கூட்டத்தை நோக்கிக் கண்களைச் சுழல விடும் காளையர், கடைக்கண்
பக்கம்-5
ணோரத்தால் கள்ளமாகப் பார்த்துத் தங்களுக்குள் ´குசு குசுக்கும்´ மங்கையர் கூட்டம், விழிகளால் பேசும் காதலர், அதை விமர்சனம் செய்யும் தாய்மார்கள்... இவைகளை மறந்து தவில் வித்துவான்கள் இருவர் சவால் விடுவது போல் முழங்கித் தள்ளுகிறார்கள். அதை இரசிப்பது போல் ஒருவர் தலையசைத்து, அந்த இரசிப்பை யாராவது இரசிக்க மாட்டார்களா என்று அங்குமிங்கும் நோட்டம் விடுகிறார். வெண்மணற் பரப்பின் நடுவே அமைக்கப் பட்ட அலங்கார மேடையில் மேளக் கச்சேரி நடந்து கொண்டிருக்கிறது. பெரிய மேளந்தான். அதனால் பெரியவர்கள்தான் அங்கு அதிகம். சின்ன மேளத்தை எதிர் பார்த்து மற்றவர்கள் காத்திருந்தார்கள்.
"கலாவரை மணலை நீ போட்டிருந்தால் கதை வேறை" கோயில் மடத்தில் நடந்து கொண்டிரந்த சீட்டுக் கச்சேரியிலிருந்து வரும் குரலது.
"டேய், துரையன்தான் மூக்குத்தூள் போட்டவன்" தூங்கும் போது மூக்ககுத்தூளைப் போட்டு ஓடியவனைப் பழிவாங்கத் துடிக்கும் நண்பனுக்கு உதவுகிறான் ஒரு சிறுவன். துரையனைத் Nதுடி இருவரும் ஓடுகின்றனர்.
"அவனைக் கோயிலுக்கை விடக் கூடாது." சாதி வெறியர் ஒருவர் குடிவெறியில் கத்துகிறார். இருவர் அவரைச் சாந்தப் படுத்துகின்றனர்.
கோயிலை நெருங்கியதும் தங்கம் தன் சேலை முடிச்சை அவிழ்த்து அவன் கரங்களில் பத்துச் சதத்தைத் திணிக்கிறாள்.
"கடலை வாங்கிச் சாப்பிடு"
பத்து வயதிலும் அவள் அவனுக்குப் பத்துச் சதந்தான் கொடுத்தாள். இன்று இருபது வயதுக் காளைக்கும் அதைத்தான் கொடுக்கிறாள். செல்லம் பார்க்கிறாள். வெட்கத்தால் அவன் முகம் சிவக்கிறது. அவள் புன்
பக்கம்-6
னகை பூத்தாள். அவள் அதரங்களிலிருந்து முத்துதிர ஆரம்பிக்கிறது.
"அம்மா, அண்ணன் அங்க நிற்கிறார்."
அதற்குள் மகாதேவன் தன் தாயையும், தங்கையையும் காண்கிறான். மல்யுத்த வீரனின் உருவத்தைப் போன்றது அவன் உடலமைப்பு. கரிய உருண்டு, திரண்ட அவனது தோள்களும், பரந்த மார்பும் பாவையரின் விழி அம்புகட்கு விருந்தாகிக் கொண்டிருந்தன.
"கந்தசாமி, மேளக்காரருக்கு சோடாவை உடைச்சுக் குடு" என்று தன் சகாவிற்கு உத்தரவைக் கொடுத்து தாயை நோக்கி மகாதேவன் வந்தான். தாயின் முகத்தில் பெருமிதம் பொங்குகிறது.
"ஏன் வர நேரஞ் செண்டது? இந்தாங்கோ, கோயிற் பிரசாதம்." மகாதேவன் இலையில் சுற்றப் பட்ட திருநீற்றையும், பூவையும் நீட்டுகிறான். இளங்கோவைத் தவிர மற்றவர்கள் பூசிக் கொள்கிறார்கள்.
"பெரியவர் பூசமாட்டார் போலை" மகாதேவன் சிறிது குத்தலாகச் சொன்னான்.
"அவன் அப்பிடித்தான் மேனை. உதெல்லாம் மினைக்கெட்ட வேலையாம். நீங்கள் சினேகிதரெண்டு இருக்கிறனீங்கள், சொல்லித் திருத்த வேண்டாமே?" தங்கம் பெருமூச்சு விட்டாள்.
"உது கெட்ட பழக்கம் தம்பி" மீனாட்சி ஒத்துபஇ பாடினாள். செல்லத்தின் விழிகளிலும அதிருப்தி தெரிகிறது.
"டேய் இளங்கோ. கோயில் விசயத்திலை நீ விலகி நடந்தது, பெடியளெல்லாருக்கும் பெரிய கோவம். கொஞ்சம் விட்டுக் கொடுத்து நட" என்று அவன் தோளில் தட்டி மகாதேவன் சொன்னான். மாமி பாயைத்
பக்கம்-7
தாங்கோ" என்று பாயையும் வாங்கிக் கொண்டு அவன் கூட்டத்தை விலக்கி முன் வரிசையை நோக்கி நடந்தான். மக்கள் அவனைக் கண்ட மாத்திரத்தில் வழி விட்டனர். பெண்கள் மூவரும் மகாதேவனைப் பின் தொடர, இளங்கோ விழிகளால் அந் நால்வரிடமிருந்தும் விடை பெற்றுக் கொண்டு, வாலிபர்கள் கூடியிருந்த மரத்தடியை நோக்கி நடந்தான். மகாதேவன் பெண்களை முன்வரிசையில் இருத்தி, தன் சால்வையில் கடலை வாங்கி அவர்களுக்கும் கெர்டுத்தான். பின்னர் அவர்களிடமிருந்து அவனும் விடைபெற்றான்.
அமைதியும், அழகும் கொண்ட அந்த இனிய கிரமாத்தில் இணைபிரியாத நண்பர்கள் இளங்கோவும் மகாதேவனும். ஆண்டுக்கு ஒருமுறை வரும் கோயிற் திருவிழாவின் அன்றைய நிகழ்ச்சி அவ்வூர் இளைஞர்களால் நடாத்தப் படுகிறது. கட்டுக்கடங்காக் களிப்போடு காளையர்கள் கலந்து அதை நடாத்துகையில், இளங்கோ மட்டும் விலகிக் கொண்டது அவர்கட்கு கசப்பைத தருவது வியப்பல்ல. அவனது செய்கைக்குக் கண்டனந் தெரிவிக்க, அவர்கள் அங்கு காத்திருந்தார்கள். அவர்களில் மணியன் சிறது முன்கோபி. முரடனுங்கூட. இளங்கோ அவர்களை நெருங்கியதும் அவன்தான் முதலில் பேசினான்.
"வரவேண்டும். வரவேண்டும். எங்கே ஐயா வரவில்லையென்றால் திருவிழா நின்று விடுமோ என்று பயந்தோம்." நாடக பாணயில் அவன் பேசியதும் மற்றவர்கள் வாய்விட்டுச் சிரித்தனர்.
"தங்கள் திருவுளங் கனிய அன்பன் வருகை தந்துள்ளேன்" அதே பாணியில் இளங்கோ பதிலளித்தான்.
"கடவுள் இருப்பிடம், மூடக் கொள்கைளின் பிறப்பிடம், எனப் பரபட்பிடும் தாங்கள், வருகையின் காரணத்தைப் புகல்வீரோ?" மணியன் தொடர்ந்தான்.
பக்கம்-8
"மடைமை இருளகற்றி, அறிவு ஒளிபரப்ப திருவுளங் கனிந்து தங்கள் முன் எழுந்தருளினேன்." இளங்கோவும் விடவில்லை.
"இருள் இங்கில்லை நண்பரே. பாவம். பட்டப்பகலில் விளக்கோடு புறப்பட்டாய். கண்களைக் கொஞ்சம் திறந்து பார். இருள் போயிடும். இளங்கோ, அந்த இளங் கலைஞனின் இனிய இசையிலே இந்தச் சனமெல்லாம் கட்டுண்டிருக்கிறதைப் பார். சிரிப்பும், சிங்காரமும் நிறைஞ்சிருக்கிறதைப் பார். இவையெல்லாம் நாம் நடாத்தும் திருவிழா நமக்களிக்கும் பேரின்பம். இதில் நீ கலந்து கொள்ளக் கூடாதோ? அதை நடாத்தும் நாங்கள் மடையன்களோ?"
மணியனின் கேள்வி நண்பர்கட்கு மகிழ்வூட்டியது.
"மணியா, இசைக்கும் இன்பத்துக்கம் நான் எதிரியில்லை. அது ஆண்டவன் பேரிலைதான் நடக்க வேணுமே? மொழியாலை இனத்தாலை, மதத்தாலை சிதறிக் கிடக்கிற இந்தச் சமுதாயத்தை ஒன்றாக்க வேண்டிய நாங்கள் சிந்தனைக்குச் சிறை போடுற மதத்தை வளர்க்கவே விழா எடுக்க வேணும்.? கலைவிழா எண்டால் நான் கலநது; கொள்ளத் தவற மாட்டேன். இது கடவுள் விழா." இளங்கோ சிறிது ஆவேசமாகப் பேசினான்.
கடவுளும், மதமுந்தான் எங்கடை சமுதாயத்தின்ரை கட்டுக் கோப்பையும், ஒழுங்கையும் கட்டிக் காக்கிறது. இது உனக்குத் தெரியாதே?" மணியனுக்குப் பதில் மனோகரனெனும் மற்றொருவன் கேட்டான்.
"இல்லை. அன்பைப் பரப்பிறதாகச் சொல்லி, அழிவைப் பரப்பினது மதந்தான். கடவுள் பெயராலை கணக்கில்லாத மக்கள் மடிஞ்சிருக்குதுகள். மனித வரலாற்றிலேயே கறை படிஞ்சிருக்கு. முகமதியப் போர், சிலுவை யுத்தங்கள் இதுக்கெல்லாம் மதங் காரணமில்லையோ? இன்றைக்கும் இந்து, முஸ்லீம் கலகம் நடக்குது எதாலை?
பக்கம்-9
வெளிநாட்டான் எங்களை ஆள விரும்பினதுக்கு மதமும் ஒரு காரணந்தானே? தங்கடை பக்தர்கள் கடவுளுக்காகப் போராடி உயிரிழந்த நேரத்திலை இந்தக் கடவுள் வந்து அவர்களைக் காப்பாத்தினவரே?" இளங்கோ தொடர்ந்திருப்பான். அவள் தோளில் முரட்டுக் கரமொன்று விழுந்தது. அது மணியனின் தந்தை வேலுப்பிள்ளையரின் கரம்.
"டேய் கழுதை, நல்ல பெடியளையும் கெடுக்க வந்தனியே? எலும்பு முறிச்சுப் போடுவன் போடா வீட்டை" அவர் சீறினார். அவனோ சிரித்தான்.
"என்னடா சிரிப்பு?" பளாரென்று ஓர் அறை அவன் கன்னத்தில் விழுந்தது. ஆவேசத்தால் இளங்கோவின் கரங்கள் துடித்தன. அவன் ஆத்திரத்தோடு அவரைப் பார்த்தான்.
"என்னடா பர்க்கிறாய்? தகப்பன் பேர் தெரியாத தரித்திரமே." வேலுப்பிள்ளையார் வார்த்தையை முடிக்கவில்லை. மனிதனின் சிந்தனை எவ்வளவுதான் விரிந்திருந்தாலும், சில சமயங்களில் அவன் தன் கட்டுப்பாட்டை இழந்து விடுகிறான். உணர்ச்சிக்குப் பின்னர்தானே அறிவு வேலை செய்கிறது. வேலுப்பிள்ளையரின் வார்த்தைகள் இளங்கோவின் இதயத்தைச் சுண்டி இழுத்தன. அவன் தன்னை மறந்தான். அவனது மூடிய கரங்கள் அவரது முன்வரிசைப் பற்களைப் மிக மோசமான முறையில் முத்தமிட ஆரம்பித்தன. அதுவும் சில வினாடிகள்தான். தந்தை தாக்கப் படுவதைப் பார்த்து மணியன் சும்மா நிற்கவில்லை. இளங்கோவின் வயிற்றில் ஓங்கி உதைத்தான். இளங்கோ நிலத்தில் விழுந்தான். தொடர்ந்து மணியனின் கால்களுக்குப் பந்தானான். ´சண்டை, சண்டை´ எனுங் குரல் எங்கும் பரவியது. மக்கள் இசையை மறந்தார்கள். கூட்டம் சண்டை நடக்கும் இடத்தைச் சூழ்ந்து கொண்டது. நண்பர்கள் மணியனைப் பிடித்துக் கொண்டனர். நால்வர் அவன் தந்தை வேலுப்பிள்ளையைப் பிடித்திருந்தனர்.
பக்கம்-10
அவர் உறுமினார். எங்கிருந்தோ வந்த மகாதேவன் நிலத்தில் விழுந்திருந்த இளங்கோவைத் தூக்கி நிறுத்தினான். அவன் நெற்றியில் வழிந்த இரத்தத்திலே வெண்மணல் ஒட்டியிருந்தது.
கூட்டத்தை விலக்கித் தன் மகனைப் பார்க்கத் துடிக்கிறாள் தங்கம். அவளோடு ஒட்டிக் கொண்டு செல்லமும், மீனாட்சியும் நிற்கின்றனர். யாரோ ஒரு பெரியவர் கூட்டத்தை விலக்குகிறார். மணியனையும், வேலுப்பிள்ளையையும் மற்றவர்கள் இழுத்துச் செல்லுகிறார்கள். இளங்கோவின் கரத்தைப் பிடித்திருக்கிறான் மகாதேவன்.
"தம்பி" என்கிறாள் பதறிய தங்கம். வெறுப்போடும், ஆத்திரத்தோடும் இளங்கோ அவளைப் பார்க்கிறான். மருண்டு, கலங்கிய விழிகளோடு செல்லமும் அவனைப் பார்க்கிறாள்.
"தகப்பன் பேர் தெரியாத தரித்திரமே"
இளங்கோவின் இதயத்தில் அக்குரல் கேட்கிறது. பைத்தியம் பிடித்தவன் போல் அவன் ஓடுகிறான். தாய் அவனைப் பின் தொடர்கிறாள்.
"தம்பி இளங்கோ" என்று அவள் கத்துகிறாள். அவன் திரும்பியும் பாராது ஓடுகிறான். வெறிச்சிட்ட தெருவில் இருவரும் ஓடினர். கல்லொன்று தடக்கித் தாய் நிலத்தில் விழுகிறாள். அவன் திரும்பிப் பார்க்கிறான். ஆனால் அவன் கால்கள் நிற்கவில்லை. "தகப்பன் பேர் தெரியாத தரித்திரமே" அந்தக் குரலொன்றுதான் அவனுக்குக் கேட்கிறது. அது ஒன்றுதான் அவனைத் தொடர்கிறது. அவன் வேகமாக ஓடுகிறான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment