2
பக்கம்-11
இயற்கை அழகுதான். ஆனால் இதயங்கள் ஏங்கும் போது, அதை இரசிக்கும் கண்களும் தூங்கி விடுகின்றன. கடலன்னை விரித்த வெண்மணற் பரப்பில் வீழ்ந்து கிடந்த இளங்கோவின் இதயம், தரையில் தள்ளப்பட்ட மீனைப் போல் துடித்தது. உயர்ந்து, உயர்ந்து பொங்கிவரும் பேரலைகள் கூட கரைக்கு வந்ததும் அடங்கி விடுகின்றன. அவன் இதயத்தில் மோதுகின்ற துன்ப அலைகளோ ஆர்ப்பரிக்கின்றன. மேலும் மேலும் பொங்குகின்றன. இதயச் சுவர்களோடு மோதி அதனை உடைக்கப் பார்க்கின்றன. ஊருருவத் துடிக்கின்றன. அந்தப் போராட்டத்தின் விளைவுதான் அவன் கண்களில் பாயும் நீரோட்டம். அவன் இதயத்தின் ஓலம் கடலின் பேரிரைச்சலை அடக்கி விடுகிறது.
´எனக்கு அப்பா இல்லையா?´அவன் குழந்தையாக இருந்த நாள் முதல் குமுறிக் கொண்டிருந்த அந்தக் கேள்வி இன்று அவன் குரல் வளையைப் போட்டு நெரிக்கிறது. நீண்ட அந்த இரவிடமிருந்து நிலவு விடைபெறும் வரை, அவன் தன் நினைவிழந்தே இருந்தான். அவன் எழுந்திருக்க முயன்றான். அவன் விழிகளிரண்டிலும் செவ்வானம் தெரிந்தது. கால்கள் தள்ளாடின. கட்டுடல் கனலெனக் கொதித்தது. அவன் தள்ளாடித் தள்ளாடி நடந்தான்.
தங்கம் குடிசைக் கதவில் தன்னுடலைச் சாய்த்தபடி இருந்தாள். அவள் முழங்காலிற் சிந்திய இரத்தத்தோடு
பக்கம்-12
அவள் சேலை ஒட்டிக் கொண்டிருந்தது. அவள் விழிகளோ அவளது இரத்த உறவைத் தேடிக் கொண்டிருந்தன. அவன் ஏன் ஓடினான்? அவள் விழுந்த போதும் பாராமல் ஏனப்படி ஓடினான்? அவர்கள் அவனை ஏனடித்தார்கள்? இப்படி ஓராயிரங் கேள்விகள் அவள் இதயத்தில். தூரத்தில் தள்ளாடித் தள்ளாடி வரும் இளங்கோவின் உருவம் அவளுக்குத் தெரிகிறது. எழுந்திருக்க முயல்கிறாள். முழங்காலின் வேதனை தடுக்கிறது. காலோடு ஒட்டியிருந்த சேலையை விடுவிக்க முயல்கிறாள். இரத்தத்தால் இறுகி விட்ட அந்த உறவைப் பிரிப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. பற்களை இறுகக் கடித்தபடி சேலையை இழுக்கிறாள். வேதனை அவளைப் பிடித்துத் தின்கிறது. சேலை விடுபடுகிறது. ஆனால் இரத்தம் குபு, குபு எனப் பெருகுகிறது.
"தம்பி, என்னடா இது?" தாய் மகனை நோக்கி ஓடுகிறாள்.
குடிசையின் கதவருகில் இளங்கோ வந்தான். அவன் தள்ளாடிய உடலுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு பலம் வந்ததென்று அவனுக்கே தெரியவில்லை. தன்னை அணைக்க வந்த கரங்களை தன் பலங்கொண்ட மட்டும் தள்ளினான். தடுமாறிய தாய் "தம்பி" என்றபடி நிலத்தில் வீழ்ந்தாள். குருதி வடிந்து கொண்டிருந்த அவள் முழங்காற் புண்ணில், தரையிலிருந்த சிறிய கற்கள் குத்தி மேலும் வேதனையைக் கொடுத்தன. அவள் இதயப் புண்ணிற்கு?
அவளுடல் பதைக்கிறது. உள்ளம் துடி துடிக்கிறது. உதடுகள் நடு நடுங்க கண்களில் வடியும் நீர் புழுதியிற் படிகிறது. புழுவைப் பார்ப்பது போல் இளங்கோ அவளைப் பார்க்கிறான். அவனுடலும் நடுங்குகிறது. குடிசையின் கதவில் சாய்ந்தவாறு அவன் நிற்கிறான். அவன் கால்கள் வலுவிழந்து கொண்டிருக்கின்றன. அவன் தன் உடலின் சக்தி யாவற்றையும் திரட்டிக் கேட்கிறான்.
"என்ரை அப்பன் ஆர்?"
பக்கம்-13
´சுளீர்´ என சவுக்கால் அடித்தது போன்ற உணர்ச்சி தங்கத்தின் உடலில் பரவுகிறது.
"கடவுளே, ஐயோ என்ரை கடவுளே" அவள் புழுதியிற் புரண்டு, புரண்டு அழுகிறாள். வெண்மையும், கருமையும் கலந்திருந்த அவள் கூந்தலில் புழுதியின் செம்மை படர்கிறது. அழுகித் துர்நாற்றமடித்து, ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும் ஒரு மாமிச பிண்டத்தைப் பார்ப்பது போல், இளங்கோ அவளைப் பார்க்கிறான். அவன் கண்கள் இருளடைகின்றன. இதயம் எப்பொழுதோ இருண்டு விட்டதே. அவன் தரையில் மெதுவாகச் சாய்கிறான்.
தங்கமோ, தன் மகன் தரையில் சாய்ந்ததைக் காணவில்லை. அவள் கன்னத்தில் பாயும் கண்ணீரில் ஒட்டிக் கொள்ளும் புழுதியை அவள் தன் கண்ணீரால் கழுவுகிறாள். மீண்டும் அது ஒட்டிக் கொள்ளும். அவள் விழி நீரும் விடாது அதைக் கழுவும்.
"மாமி, என்ன மாமி இது?" அதிர்ச்சியும், அன்பும் கலந்த குரல். மெல்லிய இரு கரங்கள் அவள் முதுகில் பட்டன.
"செல்லம், என்ரை மோனை" செல்லத்தைக் கட்டிக் கொண்டு தங்கம் கதறினாள். அவள் இதயமே வெடித்தது போல் அவள் குமுறினாள்.
"மாமி, மாமி அழாதேங்கோ மாமி" செல்லம் அவளை அணைத்த படி சொன்னாள். அந்தக் குரலில்தான் எத்தனை கனிவு! ஆனால் தங்கமோ வாய்விட்டு அழ ஆரம்பித்தாள்.
செல்லம் செய்வதறியாது திகைத்து நிற்கையில், தங்கம் அவளை அணைத்தபடி அழுதாள். எவ்வளவு நேரம் அழுதாளென்று அவளுக்கே தெரியாது. கண்ணீர் நின்று
பக்கம்-14
விடலாம். ஆனால் வேதனை...? செல்லம் மெதுவாகத் தன்னை விடுவித்துக் கொள்கிறாள். அவளருகில் அவள் கொண்டு வந்த கைப்பெட்டி இருந்தது. பனங்காணியில் நுங்கு பொறுக்கிக் கொண்டிருந்தவள், தங்கத்தின் அழுகுரல் கேட்டுத்தான் ஓடி வந்தாள். கைப்பெட்டியில் அவள் பொறுக்கிய நுங்குகள் இருந்தன. அவையெல்லாம் அணில் கோதியவை. அதிலொன்று மிகச் சிறியது. ஒரே ஒரு கண்தான் அதிலிருக்கும். அதையும் அணில் கோதி விட்டது. தங்கம் அதையே வெறித்துப் பார்த்தாள். அது சொல்லுமா அவள் கதையை?
"காலெல்லாம் இரத்தம். விழுந்தனீங்களோ?" முழங்காலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள் செல்லம். தங்கம் எழுந்திருக்க முயன்றாள்.
"அப்பிடியே இருங்கோ மாமி" செல்லம் சொல்லி விட்டு குடிசை வாசலிலிருந்த தண்ணீர்க் குடத்தை நோக்கி ஓடினாள். சிரட்டை நிறையத் தண்ணீரை எடுத்தாள்.
பட்ட மரம் போல் குடிசைத் தரையில் வீழ்ந்திருந்த இளங்கோவை அவள் விழிகள் வியப்போடு பார்க்கின்றன. திருவிழா ´நித்திரை போலை´ அவள் மனம் எண்ணமிடுகிறது. இரவில் நடந்ததெல்லாம் கனவு போல் தெரிகிறது. கூரையில் செருகியிருந்த ஒரு பழஞ் சேலையையும், சிரட்டையில் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு அவள் தங்கத்தை நோக்கி நடந்தாள்.
"வேண்டாம் பிள்ளை. நான் கழுவிறன்" தன் காற் புண்ணைக் கழுவ வந்த செல்லத்தைப் பார்த்து தங்கம் அன்போடு சொன்னாள்.
"சும்மா இருங்கோ மாமி" கண்டிப்பான ஓர் அன்புக் கட்டளையைப் போட்டு, செல்லம் தானே புண்ணைக் கழுவினாள். தங்கம் நன்றியோடு அவளை நோக்கினாள்.
பக்கம்-15
"அவன் என்ன செய்கிறான்?" தங்கம் கேட்டாள். "காலைக் கொஞ்சம் நீட்டுங்கோ, ´அது´ படுத்திருக்கு. எங்க விழுந்தனீங்கள்? உங்களுக்க சண்டையே?" செல்லம் கேட்டாள். ´அது´ என்பது இளங்கோவைத்தான்.
"ஊ... ஊ... மெதுவா. நோகுது பிள்ளை. அவனுக்கு என்னைப் பிடிக்கல்லை. நான் செய்த பாவம்." தங்கத்தின் குரல் தழதழத்தது.
"மருந்து ஒண்டுமில்லையே? மருந்து போட்டால்தானே புண் மாறும்." செல்லம் குறிப்பிட்டது முழங்காற் புண்ணைத்தான்.
"வீட்டுக்க இருக்கு. இடது பக்கச் சுவருக்கு மேல் பரியாரியாரின்ரை மருந்து வைச்சனான்." தங்கம் சொன்னாள். செல்லம் அதை எடுத்து வர எழுந்தவள், தயங்கினாள்.
"ஏன் பிள்ளை?" தங்கம் கேட்டாள்.
"அது படுத்திருக்கு" தங்கத்தின் முழங்காலிற் பாய்ந்த இரத்தம், செல்லத்தின் கன்னங்களில் பிரதிபலிக்கிறது. அந்த நேரத்தில் கூட தங்கத்தின் முகத்தில் புன்னகை பரவியது.
"போ, செல்லம்"
செல்லம் போகிறாள். நீண்ட அவள் பாவாடை கால்களைத் தடுக்கிறது. குடிசை வாசலில் அவன் படுத்திருந்தான். அவன் முகம் அவளுக்குத் தெரியவில்லை. அவனைத் தாண்டித்தான் அவள் போக வேண்டும். இதயம் படபடத்தது. அவன் எழுந்து விடக் கூடாது என அவள் ஏங்கினாள். தயக்கம் அவளுக்கு மட்டும் உரியதல்ல. அங்கு வாழும் இளமங்கையர் பலருக்கு இத் தயக்கம் இருப்பது அவளுக்குத் தெரியும். அதுவும் அவர்கள் கிராமமோ உயர்ந்த வேலிகளைப் போட்டு இளம் உள்ளங்களைப் பழக
பக்கம்-16
விடாது, பார்க்க விடாது தடுக்கும் தாழ்ந்த உள்ளங்கள் நிறைந்தது. இதனால் தனிமையில் அவர்கள் சந்திக்க நேர்ந்தால் ஏற்படும் பயத்தாலும், படபடப்பாலும் தங்களையே இழந்து விடுவார்கள். அவளும் இதற்கு விதிவிலக்கல்ல. பருவம் வருமுன் அவள் இளங்கோவோடு கிட்டியடித்திருக்கிறாள். கிளித்தட்டுவாள். கெந்திப் பிடிப்பாள். ஓடி, ஒளித்து விளையாடுவார்கள். அவையெல்லாம் பழைய இன்ப நினைவுகள். காலம் தன் கடமையைச் செய்யும் போது அவர் ஊராரும் கடமையென எண்ணித் தங்கள் மடைமையைச் செய்வார்கள். வேலிகள் எட்டடிக்கு உயரும். அவள் நடை, உடை, பாவனை அனைத்திலும் குறை காணத் துடிக்கும் ஒரு கூட்டம். பழைய நண்பர்களைப் பார்க்கக் கூடாது. பேசினாலும் தலை நிமிரக் கூடாது. அவள் சிரிப்பது குற்றம். சிங்காரிப்பது சிறுமை.
அவளுக்கு இன்று பதினாறு வயது. காலம் அவள் கால்களுக்கு விலங்கிட்டது இரண்டு வருடங்களுக்கு முன்னரே. அதுவரை பட்டாம் பூச்சி போல் அவள் பறந்து திரிந்தாள். சிறுவர், சிறுமியர் கூடுமிடமெல்லாம் அவள் நிற்பாள். அவர்கள் போடும் கும்மாளம், விளையாட்டு, சிரிப்பு, வேடிக்கை கணக்கிலடங்கா. அந்தக் ´குண்டான்´ கோபாலனிடம் அவனைப் பட்டஞ் சொல்லியே எத்தனை முறை குட்டு வாங்கினாள். ´மாங்கொட்டை´ மணியன் அவளை ஓட ஓட விரட்டியிருக்கிறான். ஏன் இளங்கோ கூட அவனை ´அவிச்ச இறால்´ என்று அழைத்ததற்காக எத்தனை முறை அவளை அடித்திருப்பான். ஆனால், அவள், மனோ, கமலா, மாலா எல்லோரும் சேர்ந்து அந்தச் சிறுவர்களைப் பட்டம் சொல்லியே அழ வைத்திருப்பார்கள். அவர்கள் பாடசாலை நடத்தியிருக்கிறார்கள். விளையாட்டுப் போட்டி நிகழ்த்தியிருக்கிறார்கள். சமைத்து விளையாடி இருக்கிறார்கள். கல்யாணம் கூட நடத்திப் பார்த்திருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் பறந்து செல்லும் பைங்கிளியவள். கூண்டுக் கிளியாக அவள் மாறிய போது கதையே மாறியது.
பக்கம்-17
அவள் பெயரளவில் பெரிய மனுசியாகி விட்டாள். ஏனவள் அப்டியானாள்? அவளுக்குப் புரியவில்லை. அவள் பெரிய மனுசிதானா? அவளால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. உடலில் ஏற்படும் சிறுமாற்றம் உள்ளத்தில் எவ்வளவு மாறுதலை ஏற்படுத்த முடியும்? அவளால் மாற முடியவில்லை. ஆனால் ஊரும், உற்றாரும், பெற்றவளும் அவளை மாற்றினார்கள். அவளால் வீட்டை விட்டு வெளியே போக முடியவில்லை. அன்று முதல் இன்று வரை பெண்கள் மீது தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் ஆண் வர்க்கமும், அவர்களால் பேதைகளாகவே உருவாக்கப் பட்ட மற்றைய பெண்களும் சேர்ந்து, அந்த இளங்கன்னியின் இன்பச் சிறகை ஒடித்தனர். பண்பாடு, கலாச்சாரம் என்ற பெயரில் அவள் சுதந்திரம் அழிக்கப் பட்டது. இன்பம் பறிக்கப் பட்டது. அறிவு ஒடுக்கப் பட்டது. எதிர்காலத்தைப் பற்றிய ஏக்கத்தையும், பயத்தையும் ஊட்டினார்கள். தன்னோடு ஓடி, ஆடித் திரிந்தவர்களுக்கே பயந்து அவள் ஒளித்தாள். சிந்திக்கவும் பயந்தாள். சிறகொடிந்த பறவையானாள். அவள் மட்டுமா அப்படி வளர்க்கப் படுகிறாள்?
செல்லம் மெதுவாக அடி மேல் அடி வைத்து நடந்தாள். ஒருவாறு அவனைத் தாண்டி மருந்துக் குப்பியை எடுத்தாள். அவன் பின்னாலிருந்து தன்னைப் பார்ப்பது போன்ற உணர்ச்சி அவளுக்கு ஏற்பட்டது. அவள் கரங்கள் நடுங்கின. அவள் பருவமடைந்த பின்னர், முதன்முறையாக ஒரு வாலிபன் இருக்கும் இடத்தில் தனித்து நிற்கிறாள். யாரோ தன்னைத் தொடுவது போன்ற உணர்ச்சி அவள் உடலெங்கும் பரவுகிறது. அவள் கையிலிருந்த மருந்துக் குப்பி நழுவி நிலத்தில் விழுந்தது. அவள் நடுங்கியவாறு திரும்பினாள். ஆனால் இளங்கோ எழுந்திருக்கவில்லை. இரு கரங்குளுக்கும் இடையே முகத்தைப் புதைத்தவாறு குப்புறப் படுத்திருந்தான். அவள் எண்ணமெல்லாம் வெறும் பிரமையா? இல்லை, அவள் அடிமனத்தில் எழுந்த சில உணர்ச்சிகளின் விளைவா? கையிலிருந்து நழுவிய குப்பி உருண்டு சென்று இளங்கோவின் மார்புக்கருகில் அடைக்கலம் புகுந்தது. அவள்
பக்கம்-18
தன்னை அறியாது விரலைக் கடித்துக் கொண்டாள். நன்றாகவே கடித்து விட்டாள். விரல் வலித்தது. குப்பியை எப்படி எடுப்பது? அவனைத் தாண்டி வரவே பயந்தவள், அவன் மார்புக்கடியில் இருக்கும் குப்பியை எடுப்பதென்றால் நடக்குமா?
ஏதோ ஓர் அசட்டுத் துணிச்சல். அவள் குனிந்து குப்பியை எடுக்க முயன்றாள். அவள் கூந்தலில் ஒரு கரம் விழுந்தது. செல்லத்தின் உடல் பயத்தால் நடுங்கியது. அவள் நிமிர முயன்றாள். அதற்கு முன்னர் அந்தக் கரமே அவள் தலையை நிமிர்த்தியது. ´பளாரென´ அவள் கன்னத்தில் விழுந்த அறை, செல்லத்தை நிலைதடுமாறச் செய்தது.
"அம்மா" என்ற படி அதிர்ச்சியோடு அவள் பார்த்தாள். அங்கே அவளன்னை பத்திரகாளியாகக் காட்சியளித்தாள்.
"கழுதை, எங்கையடி வந்தாய்?" மீனாட்சி சீறினாள். "போடி வீட்டை" அவளைத் தள்ளியவள் "எங்கே அந்த நாய் தங்கம்?" என்று கத்தினாள். செல்லம் அழுதவாறே ஓடினாள்.
பனங்காணியில் மகளைத் தேடி வந்த மீனாட்சி குடிசையின் பின் பக்கத்தால் வந்ததால், தங்கத்தைக் காணவில்லை. ஆனால் தங்கம் அவளைக் கண்டாள்.
"ஏன் மீனாட்சி, ஏனிப்படி சினக்கிறாய்?" தங்கம் கேட்டாள்.
"நாயே, உன்ரை பழக்கத்தை என்ரை மோளுக்கும் பழக்கிறியே? அவளை வீட்டுக்கை விட்டிட்டு நீ வெளியிலை காவலே? ரோசங்கெட்ட நாயள். நாயள். அயலுக்க வந்தியள் இல்லே, உள்ள குமரையெல்லாங் கெடுக்க. தகப்பன் தெரியாத பிள்ளையளைப் பெத்து..." மீனாட்சி வசைமாரி பொழிந்தாள்.
பக்கம்-19
செல்லமோ, அழுதவாறு ஓடி விட்டாள். ஓட முடியாத ஒருத்தி கண்ணீரில் நனைந்து கொண்டிருந்தாள். அவள் காற் புண்ணுக்கு மருந்து கிடைக்கவில்லை. இதயப் புண்ணுக்கோ மேலும் வேதனை கிடைத்தது. இளங்கோ, நித்திரையானால் எழுந்திருப்பான். நல்ல காலம் அவன் மயக்கமுற்றிருந்தான். மீனாட்சி பொரிந்து தள்ளி விட்டுப் போய் விட்டாள். தங்கம் நொண்டியவாறே குடிசைக்குள் வந்தாள். தன் மகனைத் தொட்டதும் அவள் பதறினாள். அவனுடல் கனலெனச் சுட்டது.
"தம்பி, தம்பி எழும்படா. என்னடா உனக்கு?" பதறியபடி அவன் முகத்தில் நீர் தெளித்தாள். அவனோ எழவில்லை. அவள் பதறினாள். விழி நீரை உகுத்தாள். செய்வதறியாது தவித்தாள். உதவிக்கு வர உறவென்று ஒன்று அவளுக்கு இல்லை. வைத்தியரிடம் போகலாம். அவனைத் தனியாக விட்டுச் செல்ல அவளுக்கு மனமில்லை. வைத்தியருக்குக் கொடுக்க அவளிடம் பணமும் இல்லை. கண்ணீர் பெருகியது. மீனாட்சி ஒருத்திதான் அவள் மீது சிறிதாவது அநுதாபம் கொண்டவள். அவளும் கோபம் கொண்ட பின் தங்கம் எங்கே போவாள்? "முருகா, முருகா" எனப் புலம்பினாள். பக்தர்கள் பாடுவது போல், அவள் இதயம் உருகி வரவில்லை. அவளைப் போலவே எலும்பாலும், சதையாலும் உருவான எத்தனையோ மனிதர்களுக்கு ஏற்படாத கருணையா அவர்களால் உருவாக்கப் பட்ட கற்சிலைகளுக்குத் தோன்றப் போகிறது?
தங்கத்துக்குப் பொறுக்கவில்லை. குடிசையை விட்டு வெளியே வந்தாள். இதயத்தை இளங்கோவிடம் விட்டு, திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே அவள நொண்டி, நொண்டி நடந்தாள். "கடவுளே, கடவுளே பரியாரியார் கோவிக்காமல் பிள்ளையை வந்து பார்க்க வேணும். உன்னாணை, உனக்கு நான் கற்பூரம் கொளுத்துவேன்." அவள் வாய் விட்டுச் சொல்லிக் கொண்டு போனாள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment