Tuesday, March 27, 2007

மீட்டாத வீணை - 9

9

பக்கம் 88


வானம் ஏனோ அழுதது. சில நாட்களில், சில நேரங்களில் அது அழும். சிலர் கண்களுக்கு என்றுமே மாரிகாலம்தானோ? தேவி வாசற்படியில் இருந்து விம்மி, விம்மி அழுதாள். வானம் அவளோடு போட்டியிட முடியாது நின்று விட்டது.

"தேவி, தேவி, ஏன் மேனை அழுகிறாய்?"

"தேவியின் வயது சென்ற பாட்டி கனிவோடு கேட்டாள். தேவியோ எதுவும் பேசாது அழுதாள். கிழவி தனது பொல்லை ஊன்றியவாறு தேவியின் அருகில் தள்ளாடித் தள்ளாடி வந்தாள். அவள் கைகள் தேவியின் தலையை வருடின.

"மோனை, விளக்கும் வைக்காமல் ஏன் மேனை அழுகிறாய்? காசு இல்லையே?"

"அம்மம்மா" தேவி கிழவியைத் தன்னோடு அணைத்த படி அழுதாள்.

"அழாதே மோனை. காசில்லா விட்டால் அழுகிறதே? நான் எவ்வளவு கஸ்டப்பட்டு உங்களை வளர்த்தனான். ஒரு நாளாவது அழுதனானே? சீ... சீ... கெட்ட பழக்கம். எழும்பு பிள்ளை. போய் விளக்கை வை."

"அம்மம்மா... எங்களை ஏனம்மா வளர்த்தனீ?" கிழவி, அழும் தேவியின் கண்ணீரைத் துடைத்தாள்.


பக்கம் 89

"எனக்கில்லே கண் சீராகத் தெரியாதாம். இல்லையென்றால் நானே விளக்கு கொழுத்திப் போடுவன். மோனை, மண்ணெண்ணெய் வாங்கக் காசில்லையே? இஞ்சை பாரன் மோனை, என்ரை தோடு இரண்டு கிடக்குது இல்லே..."

" அம்மம்மா" தேவி தன் தலையைக் கிழவியின் மடியில் வைத்துக் குழந்தையைப் போல் அழுதாள்.

"மீனாட்சியக்கையவை வேலியை அடைச்சுப் போட்டீனம். அங்க தண்ணியள்ள வரக் கூடாதாம்."

"என்னடி கதையிது? உவள் மீனாட்சி எப்ப வந்தவள் வேலியடைக்க? எடியே மீனாட்சி, மீனாட்சி? கிழவியின் குரலில் எங்கிருந்து அவ்வளவு சக்தி வந்ததோ தெரியவில்லை.

"வேண்டாம் அம்மம்மா"

"எடி, என்னை விடடி." கிழவி தேவியை உதறி விட்டு வேலியை நோக்கி நடந்தாள்.

"எடியே மீனாட்சி" கிழவி கத்தினாள்.

"யாரங்க சத்தம்?" மீனாட்சி வெளியில் வந்து பதிலுக்குச் சத்தமிட்டாள். கிழவிக்குக் கண்ணும் நன்றாகத் தெரியாது. இருட்டு வேறு. அவள் வேலியைப் பிடித்துக் கொண்டு கத்தினாள்.

"ஆரைக் கேட்டடி வேலி அடைச்சனி? மரியாதையாக எங்கடை பாதையை விட்டிடு. இல்லை...?"

"என்ன கிழவி, பயப் படுத்திறாய். என்ரை வேலியை அடைக்க உன்னைக் கேட்க வேணுமோ?" மீனாட்சி கேட்டாள்.

"எடியே, உந்தக் கிணறு என்ரை அவரும், உன்ரை கொப்பனும் சேர்ந்து வெட்டினதடி. நீ யாரடி எங்களைத தடுக்க?"


பக்கம் 90

"தண்ணி எடுக்க வாரீpங்களோ? இல்லை இஞ்சை மாப்பிள்ளை தேடுறியளோ? உன்ரை பேத்தியைக் கொஞ்சம் அடக்கி வை."

"அடியே, என்ரை பேத்தியையும் தெரியும். உன்ரை ஆட்டமும் தெரியும். சொன்னால் உன்ரை பெடியள் கிணத்துக்க விழுந்திடுங்கள்." மாறி மாறி இருவரும் வசைமாரி பொழிந்தனர். சில நிமிடங்களின் பின் கிழவி தன் கைப்பொல்லால் வேலியை அடிக்க ஆரம்பித்தாள். மட்டைகள் கீழே விழுந்தன. வேலி வழிவிட ஆரம்பித்தது. கிழவியின் கையிலிருந்த பொல்லுக்கும், அதை விட வலிமையான அவளது நாவுக்கும் பயந்து மீனாட்சி தூரவே நின்று சத்தமிட்டாள். கிழவியைத் தடுக்க வழியின்றித் தேவி நின்றாள். செல்லமோ ´அம்மாக்கு உதுவும் வேணும், இன்னும் வேணும்´ என்று எண்ணியவாறு அடுக்களையில் வேலையாக இருந்தாள். வேலியைப் பிரித்த கிழவி சும்மா இருக்கவில்லை.

"எடியே, உந்தக் கிணற்றிலே நானும் தண்ணியள்ளுகிறதுதான். ஏலுமென்றால் நிற்பாட்டிப் பார் பார்ப்பம்." கிழவி கைத்தடியை அங்குமிங்கும் சுழற்றியவாறு நடக்க ஆரம்பித்தாள். கிழவியைத் தடுக்கத் தேவி வேலியைத் தாண்டி வரவேண்டியிருந்தது.

"விடு மேனை என்னை" என்று சொல்லியபடி கிழவி நடக்க ஆரம்பித்தாள். மீனாட்சிக்கோ ஆத்திரம் தாங்க முடியவில்லை.

"குறுக்கால போக. நீங்கள் நாசமாகப் போக" என்று மண்ணை வாரி தேவி மீது அவள் வீசினாள். தேவியின் உடலெங்கும் மண். அவள் கண்களைத் திறக்க முடியாது தவித்தாள். கிழவியோ கண்டவாறு பேசிய படி கிணற்றடியை நெருங்கி விட்டாள்.

"மீனாட்சியக்கை சும்மாயிருங்கோ. அம்மம்மா இல்லே கிணற்றடிக்குப் போகிறா." தேவி கண்களைத் துடைத்தவாறு தவித்தாள். மீனாட்சிக்கு அவள் தவிப்பு மேலும் உற்சாகத்தை அளித்தது.


பக்கம் 91

"நாய்கள், நாய்கள், பொறுக்கி நாய்கள் தொலைஞ்சு போங்கோ." அவள் கற்களாலும் வீச ஆரம்பித்தாள். அடுக்களையிலிருந்த செல்லம் விசயம் விபரீதமாவதை உணர்ந்து தாயைத் தடுக்க ஓடி வந்தாள். இதற்குள் கிழவியோ துலாக்கயிற்றை ஒருவாறு தேடிப் பிடித்தாள்.

"வரச் சொல்லடி பார்ப்பம். அவளை. வந்து தடுக்கச் சொல்லடி. இது நெல்லுக் குத்தின கையடி. என்ன நினைச்சாள் உவள்" கிழவியின் குரலும் வாளியின் ஓசையும் தேவியின் காதுகளில் விழுந்தன.

"அம்மம்மா, நீங்கள் அள்ளாதேங்கோ. நான் வாரன்." தேவி கத்தியவாறு கிணற்றடியை நோக்கி ஓடினாள். அதற்குள் கிழவி துலாவைத் தாழ்த்தினாள். வாளி ஆழமான கிணற்று நீரில் முட்டி மோதியது. அந்த ஓசை கிழவியின் போராட்டத்தின் வெற்றியை அவளுக்கு அறிவுறுத்தின. அவள் வளைந்த முதுகை நிமிர்த்தினாள். வெற்றிக் களிப்பு அவள் கண்களில் விளையாடியது.

"எடியே பிள்ளை, வாளியைக் கொண்டு வா தண்ணி வார்க்க" அவள் தேவியை அழைத்தாள்.

"நீர் நிரம்பிய வாளி கிணற்றின் விளிம்பை அடைந்தது. கிழவி குனிந்து வாளியைத் தூக்க முயன்றாள். முடியவில்லை. அது விளிம்போடு மோதியபடி நின்றது. கிழவிக்கோ தோல்வியை ஒத்துக் கொள்ள முடியவில்லை. நன்றாகக் குனிந்தாள். வாளியை இழுத்தாள். வாளி வேகமாக வெளியே வந்தது. துலா ´படாரென´ மரத்தோடு மோதியது. கிழவி தடுமாறினாள். கிணற்றின் விளிம்பை நோக்கி அவள் கால்கள் வழுவிச் சென்றன. மறுகணம் அவள் ஆழமான அக்கிணற்றின் அடித்தளத்தில் கிடந்தாள். தேவி ´வீலென´ அலறினாள். அவளைத் தொடர்ந்து செல்லம் "ஐயோ" எனக் கத்தினாள். ஓரு கணம் சிலையாக நின்ற மீனாட்சியும் "கடவுளே" எனக் கூக்குரலிட்டாள்.

பக்கம் 92


"என்ன, என்ன நடந்தது?" பதறியபடி நொண்டி, நொண்டி அப்பொழுதுதான் வந்த கோபால் அங்கு வேகமாக வந்தான். கிணற்றைச் சுற்றி நின்ற மூன்று பெண்களும் கத்தினார்கள்.

"அம்மம்மா கிணத்துக்கையடா..." தேவி அலறினாள். கோபாலின் உடல் துடித்தது. கிணற்றின் விளிம்புவரை அவன் சென்றான். அவனுடல் நடுங்கியது. "அம்மம்மா அம்மம்மா" ´ஐயையே, என்னாலே இறங்கவும் ஏலாதே´ அவன் பதறினான். இயற்கையின் கொடுமை அன்றுதான் அவனிதயத்தை ஆழமாகக் கூறு போட்டது.

"டேய், சும்மா நிற்காதேடா. யாரையாவது கூப்பிடடா." தேவி அழுதழுது வேண்டினாள்.

"ஐயோ அண்ணனும் எங்கேயோ போட்டுதே" செல்லம் பதை பதைத்தாள்.

கோபால் கண்களில் கண்ணீர் பெருக வலது காலை இழுத்து, இழுத்து வெளியே ஓடினான். தூரத்தில் இளங்கோ வந்து கொண்டிருந்தான். கோபாலின் கண்களில் ஒரு நம்பிக்கை ஒளி தெரிந்தது.

"இளங்கோ, இளங்கோ..."

நடந்து வந்த இளங்கோ கோபாலின் குரல் கேட்டு ஒரு கணம் நின்றான். அவனால் நடக்க முடியவில்லை. அவன் கண்களில் வெறுப்பும், அருவருப்பும் வியர்த்திருந்த முகத்தை இன்னும் கோரமாக்கின. ´இந்த நன்றி கெட்டவனோட எனக்கென்ன கதை. கதைச்சாலும் கை வைக்க வேண்டித்தான் வரும். பேசாமல் எங்கேயாவது போயிட்டு பிறகு வருவம்.´ இளங்கோ இந்த முடிவோடு திரும்பி நடந்தான். கோபால் திகைத்தான்.

"இளங்கோ, இளங்கோ நில்லடா. டேய், டேய் இஞ்ச வாடா" இளங்கோ வேகமாக நடந்தான். கோபால் கால்களை இழுத்தபடி பின்னால் ஓடினான்.

பக்கம் 93

"டேய், டேய் அம்மம்மா கிணத்துக்க விழுந்திட்டாடா. வாடா" கோபால் கத்தினான். தெருவில் ஓடிய ´டிராக்டர்´ சத்தத்தில் அவன் குரல் அமிழ்ந்தது. அதற்குள் இளங்கோ அடுத்த தெருவில் திரும்பிப் போய் விட்டான். கோபால் ஒழுங்கை மணலில் விழுந்து, விழுந்து அழுதான். என்றுமே சிரித்துக் கொண்டிருக்கும் கோபால் அன்று அழுதான்.

இளங்கோ கோயிற் கிணற்றில் நன்கு குளித்தான். நாளெல்லாம் உழைத்த களைப்பு உடலை விட்டு மறைந்து விட்டது. ஆனால் உள்ளத்தில் ஒரு சோர்வு. அவன் மனதில் மகிழ்ச்சியில்லை. ´இளங்கோ, இளங்கோ´ கோபாலின் கீச்சுக் குரல் . அதுவும் அவலமான ஒரு குரலாக அவன் காதில் ரீங்காரமிட்டது. ஏன் அப்பிடி அவன் கூப்பிட்டவன்? மனதை ஏதோ அரித்தது. அவன் வீட்டை நோக்கி நடந்தான். தூரத்தே ´பெற்றேமாக்ஸ்´ விளக்கோடு சைக்கிளில் யாரோ வந்தார்கள்.

"டேய் இளங்கோ, எங்கேயடா போனனீ? ஒரு கையில் விளக்கோடு, மறுகையால் பிரேக்கை அழுத்தினான் மகாதேவன்.

"என்ன மச்சான் விளக்கோட?" இளங்கோ கேட்டான்.

"உனக்கு விசயம் தெரியாதே? கோபாலின்ரை அம்மம்மா இல்லே கிணத்துக்க விழுந்து போச்சு"

"என்னடா!" இளங்கோவின் காதில் கோபாலின் குரல் மீண்டும் ஒலித்தது. அவன் இதயத்தை யாரோ இரு கைகளால் பிசைவது போல் இருந்தது.

"ஏறி விளக்கைப் பிடியனடா" மகாதேவன் அவசரப் படுத்தினான். இளங்கோ சைக்கிள் பாரில் ஏறியமர்ந்தான். வழியில் மகாதேவன் தனக்குத் தெரிந்ததை விளக்கினான்.


பக்கம் 94

"நானும் வீட்டை நிற்க இல்லை மச்சான். நல்ல காலத்துக்கு, பெண்டுகளின்ரை சத்தங் கேட்டு அயலுக்க இருந்து நாலைஞ்சு பேர் வந்தவையாம். அதுகளில்லையென்றால் அந்தப் பெண்கள் என்ன செய்யும்? பாவம், கோபால் காலும் ஏலாது கிழவியிலே சரியான பாசமடா. மனுசிதானே வளர்த்து ஆளாக்கினது. கதறிக் கொண்டிருக்கிறான். பார்க்க ஏலாமலிருக்கடா"

அழுகுரல் இப்பொழுது நன்கு கேட்டது. பெண்களின் அழுகுரலையும் மீறிக் கொண்டு அந்த ஆண் குரல் நெஞ்சைப் பிளந்தது.

"அம்மம்மா... என்ரை அம்மம்மா... என்னைத் தூக்கி வளர்த்தியே, உன்னைத் தூக்கக் கூட ஏலாமல் நின்றேனே. என்ரை அம்மம்மா... என்னை விட்டுப் போனீயே..."

விளையாட்டு, வேடிக்கையென்று நாளெல்லாம், பொழுதெல்லாம் ஊரெல்லாம் சிரிக்க வைக்கும் கோபால் அப்படிக் கதறுகிறான். கூவும் குயிலோசை நமக்கு இனிதே. அது சோகக் கீதமா, இல்லை இன்பச் சங்கீதமா என்பது குயிலுக்குத்தானே தெரியும். பெண்கள் பலர் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்தவாறு ஒப்பாரி வைத்தனர். தங்கமும் அங்கிருந்தாள். ஏன்? மீனாட்சி கூட சேர்ந்தழுதாள். செல்லமும் கண்ணீர் வடித்தாள். ஆனால் தேவி அழவில்லை. அவள் கண்கள் அந்த மனிதர்களையே பார்த்தன. ஏன அவர்கள் அழுகிறார்கள்?

கிழவியின் மறைவு அவ்விதயங்களை நெகிழ வைத்ததா? கன்னி இவள், இனித் தனிய என்ன செய்வாளென எண்ணி மனம் நொந்தார்களா? உயிரோடு இருக்கையில் வாழ்க்கையிலெ உதவாத இம்மனிதர்கள் உணர்ச்சியற்ற உடலைப் பார்த்து ஏன் அழுகிறார்கள். அவள துயரத்தில் என்றுமே பங்கு கொள்ளாத இவர்கள் இன்று மட்டும் ஏன் ஓடி வந்தார்கள்? உதடுகளில் ஒப்பாரி, உள்ளங்களோ உறியில் வைத்த கறியில், பெட்டகத்தில் பூட்டி வைத்த பணத்தில், மற்றவர்


பக்கம் 95

வாழ்வை நினைத்துப் பொறாமைத் தீயில்! சாவீடு கல்யாணம் பேசும் சந்தையாகும். நரம்பில்லா நாக்குகள் அங்கு பல கூடும். கன்னியர் வாழ்வைக் கெடுக்க பல கதைகள் தேடும்! சுடுகாட்டில் கிழவியின் உடல் எரியும்! சாவீட்டில் உயிரோடு உள்ளவர்களின் வாழ்வு.

இதற்குத்தான் இங்கு கூடுகிறார்களா? நாளை தங்கள் வீட்டுக்கு நாலு மனிதர்கள் வரவேண்டும் என்று கூறுகிறார்கள்: அவர்கள் கண்ணீரெல்லாம் பொய்யா? கடந்து போன தங்கள் வாழ்வில், கவலை நிறைந்த காலங்களை நினைத்தும் கண்ணீர் வடிக்கிறார்கள். ´ஐயோ நாளை நானும் இறந்து விடுவேனே´ என்று பயந்து கண்ணீர் வடிக்கிறார்கள். தேவி - அவளுக்காக இங்கு எத்தனை பேர் அழுகிறார்கள்?

அவர்கள் அழுகிறார்கள். ஏன் அவள் அழவில்லை? ஏன் அவள் அழ வேண்டும்? கிழவிதான் செத்த வீட்டுச் செலவுக்குத் தன் தோட்டை விட்டுப் போனாளே.

-------------------------------------------------------

எட்டு வீடும் முடிந்து விட்டது. இனி எட்டிக் கூட அங்கு பார்க்க யாரும் இல்லை. தேர்தல் முடிந்த பின் வாக்காளருக்கு ஏற்படும் நிலைதான். அவள் வீட்டிற்கு இருந்த ஒரே சட்டையும் கிழிந்து விட்டது. தேவி சேலையைப் போர்த்திக் கொண்டு தன் கிழிந்த சட்டையைத் தைத்துக் கொண்டிருந்தாள். அவள் தையல் மெசின் ஓசையைத் தவிர வேறு ஓசை அங்கில்லை. குனிந்த தலை நிமிராது அவள் தைத்துக் கொண்டிருந்தாள். அவள் சட்டையில்லா மேனியழகை இரு விழிகள் பருகுவதை அவள் காணவில்லை. அவள் தலையை நிமிர்த்திய போதுதான், அவரும் தொண்டையைச் செருமினார். துள்ளி எழுந்த தேவி கதவுக்குள் ஒளிந்தளர்.

"ஏன் தேவி பயப்படுகிறாய்? நல்ல காரியமாகத்தான் வந்தனான்."


பக்கம் 96

தேவி அவசர, அவசரமாகச் சட்டையை மாட்டிக் கொண்டாள். அவள் வெளியில் வராமலே பதிலைச் சொன்னாள்.

"தம்பி தியேட்டருக்குப் போயிட்டான்"

"ஓ தெரியும். அம்மம்மா செத்தது உனக்குப் பெரிய கவலைதான். நடக்கிறது நடந்துதானே தீரும். அவள் தன் கழுத்தைத் தடவிக் கொண்டாள். ´நடக்க வேண்டியவை நடப்பதில்லையே´ என்றது மனம்.

"நான் வருவேனென்று நீ நினைச்சிருக்க மாட்டாய். என்னமோ மனம் கேட்கவில்லை. பாவம் நீயும் ஒரு பெண் பேதை. என்ன செய்வாய்?"

மற்றவர்களின் அனுதாபம் சில சமயங்களில்தான் உள்ளங்களுக்கு ஆறுதலைத் தருகின்றன. தேவிக்கு ஏனோ அந்தச் சமயத்தில் அது எரிச்சலைத்தான் தந்தது. ´இந்த மனிதருக்கு ஏன் இந்தக் கவலையெல்லாம்´ அவள் நினைத்தாள். அவரோ கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்தார்.

தேவி, உன்னை நான் தேர்த்திருவிழா அன்று பார்த்தனான். வேலுப்பிள்ளையர்தான் உன்னைப் பற்றிச் சொன்னார். எனக்கென்னமோ உன்னிலை ஒரு பரிவு வந்திட்டுது. அதுதான் உன்ரை தம்பிக்கும் என்ரை தியேட்டரிலே வேலை கொடுத்தனான்." கணபதிப்பிள்ளையர் கனிவோடு சொன்னார்.

"இப்ப ஒருத்தரும் வீட்டிலே இல்லை. நீங்கள் தம்பி இருக்கைக்க வாங்கோவன்" தேவி சொல்லி விட்டு நாக்கைக் கடித்தாள்.

"இல்லை உன்னோட தனியாகப் பேசத்தானே வந்தனான். இது விசயமாகத் தங்கத்தை உன்னட்டை அனுப்பி வைக்கப் பார்த்தனான். அவளின்ரை பெடியனைப் பற்றி

பக்கம் 97

ஊரிலே நல்ல கதையில்லை. பிறகு அது எனக்கும் கூடாதென்றுதான் அவனுக்கு வேலையும் கொடுக்கவில்லை." அவரது சுற்றி வளைத்த பேச்சு அவளுக்குப் புரியவில்லை.

"தேவி, உனக்கும் ஆரும் இல்லை. எனக்கும் ஒரு துணையில்லை."

"தயவு செய்து நீங்கள் போறீங்களே?" அவள் கேட்டாள்.

"நான் சொன்னது விளங்கிச்சே?"

"இதுக்கு மிஞ்சி விளக்கம் வேண்டாம்." அவள் கதவுக்கு வெளியே வந்தாள். "எரியிற வீட்டிலே பிடுங்கிறது லாபமென்று பார்க்கிறியள்." அவரோ நிதானம் தவறவில்லை. மெல்லச் சிரித்தார்.

"தேவி, வலிய வார சீதேவி - எனக்கொன்றும் அவ்வளவு வயசாக இல்லை. நிரந்தரமாக ஒரு துணையைத் தேடி கனகாலமாக நானும் திரியிறன். உனக்கோ இனி என்ன வாழ்க்கை?" தேவிக்கு தலையில் சம்மட்டியால் அடிப்பது போலிருந்தது.

"என்னைப் போல ஆராவது கிடைச்சால் சரி. இல்லையென்றால் குளமோ... குட்டையோ..." அவர் தொடர்ந்தார்.

"நிற்பாட்டுங்கோ. ஆறுதல் சொல்ல வந்தனீங்களோ? ஆசையைத் தீர்க்க வந்தனீங்களோ? இப்ப வாங்க வந்தது நீங்கள். விற்க நான் தயாரில்லை. அந்த விலை உங்களால் தர முடியாது."

"தேவி கார், பங்களா, காசு, பணம் எனக்கு இருக்கிற மாதிரி இந்த ஊரிலே ஆருக்கும் இல்லை."

பக்கம் 98

"இதயம், பாசம், பண்பு இது இருக்கிறவன் ஏழையில்லை. எண்பது வயதைத் தாண்டினாலும் எனக்குத் துணையாக இருக்கலாம். ஆனால் நீங்கள்... சீ... போங்கோ." கணபதிப்பிள்ளையர் புன்னகையோடு எழுந்தார்.

"இலாபமும், நட்டமும் வாழ்க்கையிலே இயற்கை. இப்ப எனக்கு மாத்திரம் நட்டமில்லை. உனக்கும்தான். மனம் மாறினால் சொல்லி அனுப்பு. காரை அனுப்புறன். இல்லை ஒரு முழக்கயிறுதான் வேணுமென்றால்... அது உன்ரை தலைவிதி." அவர் எழுந்து நடந்தார். அவர் படலையருகில் சென்றதுதான் தாமதம், தேவி சத்தமிட்டாள்.

"நில்லுங்கோ"

"தேவி" ஆசையோடு அவர் திரும்பினார். அதே சமயம் மீனாட்சியின் கண்கள் வேலியினூடே அக்காட்சியை இரசித்தன. ஆனால் அதற்குள் மகாதேவன் வந்தான். படத்தின் ´கிளைமாக்ஸ்´ காட்சியில் ரீல்ஸ் அறுந்த கதை போலாயிற்று மீனாட்சிக்கு. படக்கதை புரியாவிட்டாலும் ஒரு புதுக்கதையை மீனாட்சியால் உருவாக்க முடியாதா? அவன் மனமின்றி வேலியைப் பிரிந்து சென்றாள். இந்த வேலிகள்தான் எங்கள் பெண்களின் பொழுது போக்குச் சாதனம்.

"இந்தக் காசை ஏன் வைச்சிட்டுப் போறியள்?" தேவி தையல் மெசின் மேசையிலிருந்த பணத்தைக் காட்டினாள்.

"ஓ... அது உனக்குத்தான்."

வியாபாரமே நடக்க இல்லையே. அட்வான்ஸ் எதுக்கு. ?" அவள் கேட்டாள்.

அது அந்த வியாபாரத்துக்கு இல்லை. எனக்கு நீ காட்சியளித்ததற்கு, கதைத்ததற்கு."


பக்கம் 99

"ஓ, அப்படியென்றால் உங்கடை தியேட்டரிலே கடனுக்கு படம் காட்டிரியளோ?" அவருக்குப் புரியவில்லை. அவர் விழிகளை உருட்டினார். மடித்த நூறுரூபாய் நோட்டு அவர் முகத்தில் வந்து விழுந்தது.

"உங்கடை மகள், என்ரை தம்பிக்கு அடிக்கடி காட்சி தாராளாம். அவன் ஏழை. வீணாக நட்டப் படாதேங்கோ."

கணபதிப்பிள்ளையரின் கண்கள் கோபத்தால் சிவந்தன. அவர் ஓங்கி, படலையைச் சாத்தி விட்டு நடந்தார். அடுத்தடுத்து வீட்டு வாசல்களில் பல உருவங்கள் அவரை வியப்போடு நோக்கின.

No comments: