Tuesday, March 27, 2007

மீட்டாத வீணை - 12

பக்கம் 128

வெறுந் தரையில் படுத்திருந்தான் மகாதேவன். அவன் விழிகள் கூரையை நோக்கிக் கொண்டிருந்தன. ஆனால் கூரை அவனுக்குத் தெரியவில்லை. மனதை ஏதொ அரித்துக் கொண்டிருந்தது.

எதையோ இழந்தவன் போலல்ல, எல்லாவற்றையுமே இழந்தது போன்ற நினைப்பு - வெறுமை - எல்லாமே வெறுமையாக இருந்தது.

"அண்ணே" அவன் அசையவில்லை.

"அண்ணே" செல்லம் மீண்டும் கூப்பிட்டாள்.

"ம்..."

"என்ன அண்ணே, எழும்பி இரன். ஏனிப்பிடி இருக்கிறாய்? தேத்தண்ணியைக் குடி"

அவன் எழுந்து தேத்தண்ணியையும், ஒரு கையில் பனங்கட்டியையும் வாங்கிக் கொண்டான். செல்லம் தரையில் இருந்தாள். முழந்தாள் இரண்டையும் கைகளால் கட்டிக் கொண்டு செல்லம் அவனைப் பார்த்தாள். அவன் தன் விழிகளைத் திருப்பிக் கொண்டான்.

"உனக்குச் சுகமில்லையே?" செல்லம் கேட்டாள்.

"சும்மா கரைச்சல் தராமல் போ." அவன் எரிந்து விழுந்தான். அவள் சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை. தன் கால் விரல்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் தங்கையைப் பார்த்தான்.

"செல்லம்"


பக்கம் 129

செல்லத்தின் விழிகள் மலர்ந்தன. அண்ணன் அன்பாகத்தான் அழைக்கிறான்.

"ம்..."

"உனக்கு மணியனைப் பிடிக்க இல்லையே" அவன் கேட்டான்.

"உனக்குப் பிடிப்பே?" அவள் திருப்பிக் கேட்டாள்.

"எனக்கு விருப்பமில்லை." அவன் சொன்னான்.

"அம்மாக்குச் சொல்லன்:"

மகாதேவன் முகத்தில் இருள் பரவியது. ஏன், தாயை எதிர்த்து அவனால் பேச முடியாமலிருக்கிறது? இதுவரை காலமும் அவன் வார்த்தைக்கு அங்கு மதிப்பிருந்தது. ஆனால் இன்று...? தேவியின் தொடர்பு தவறானதா...? அவனால் அதைத் தீர்மானிக்க முடியவில்லை. தான் செய்வது சரியானது என்று அவனால் அடித்துச் சொல்ல முடியவில்லை. அது அவனது கோழைத்தனமா அல்லது தேவியின் துணிவின்மையா?

உலகம் ஆயிரம் சொன்னாலும், தான் செய்வது சரியானது என்று ஒரு தீர்க்கமான முடிவுக்கு அவன் வந்திருந்தால் அவனை அசைத்து விட முடியாது.

"என்ன பேசாமல் இருக்கிறாய்?" செல்லம் கேட்டாள்.

"செல்லம்... எனக்கொரு ஆசை... எவ்வளவோ ஆசைகள்... அதையெல்லாம் அம்மாக்காக, இந்த ஊருக்காக விட்டுக் குடுத்திருக்கிறன்... ஏன் தெரியுமோ? என்னாலே உன்ரை வாழ்க்கை பாழாகக் கூடாது. நீ நல்ல ஒருவனைக் கட்டி நல்லா இருக்க வேணும்.... கேட்டிதே?"

செல்லம் "ம்" கொட்டினாள்.


பக்கம் 130

"நான் ஒரு முடிவுக்கு வந்திட்டன். உனக்குப் பிடிச்சால் சொல்லு" அவன் அவள் முகத்தைப் பார்த்தான். அவளும் ஆவலோடு அவனைப் பார்த்தாள். அவன் குரலைச் செருமிக் கொண்டான். தேத்தண்ணியின் கடைசி மண்டியையும் எடுத்து வாயில் விட்டுக் கொண்டான்.

"உனக்கு, உவன் இளங்கோவைப் பிடிச்சிருக்கே?"

செல்லத்துக்கு எங்கோ இன்ப வானத்திலே தவழ்வது போன்ற உணர்ச்சி. கண்கள் மலர்ந்தன.

"அண்ணே" அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவன் கால்களைத் தன் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும் போலிருந்தது. தன் தங்கையின் முகத்தில் தோன்றிய வண்ணக் கோலங்களை மகாதேவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

"அவனை நான் இன்னும் கேட்க இல்லை..."

"அதுக்கும் என்னிலே விருப்பம்" செல்லம் சொல்லி விட்டு முகத்தை மூடிக் கொண்டாள்.

மகாதேவன் முகத்தில் புன்னகை பரவியது.

"அப்பிடியென்றால்...?"

அவள் முகத்தை மூடிக் கொண்டு கதவிடுக்கில் மறைந்தாள்.

"அப்ப, நான் அவனோட கதைக்கட்டே...?" மகாதேவன் கேட்டான்.

"அம்மாதான்..." செல்லம் இழுத்தாள்.

"அதைப் பற்றிப் பயப்பிடாதே. அதுகள் பழசுகள். ஒரு நாளும் மாறாது. அதுகளைப் பார்த்தால் நாங்கள் வாழ முடியாது."

"இல்லையண்ணை... அம்மா அழும்... அதுவும் எங்களுக்காக எவ்வளவு கஷ்டப் பட்டது?


பக்கம் 131

"கொஞ்ச நாளிலே எல்லாம் சரியாப் போயிடும். எங்களை விட்டால் அவவுக்கும் ஆர் இருக்கினம்? நான் இளங்கோ வீட்டை போயிட்டு வாறன்..."

"முதுகெல்லாம் புழுதி" செல்லம் சொன்னாள். அவன் முதுகைக் கையால் தட்டினான். அவள் கொடியிலிருந்த துவாயை எடுத்துத் தட்டி விட்டாள்.

மகாதேவன் இளங்கோ வீடு நோக்கி நடந்தான். அது அவனது நிமிர்ந்த நடைதான். செல்லத்தின் மனதில் ஒருவித அமைதி நிலவியது.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

மகாதேவன் இளங்கோ வீட்டிற்குப் போன போது தங்கமும் அங்கிருந்தாள்.

"வா தம்பி. வா... இப்ப எல்லாம் உங்களைக் காணக் கிடைக்குதில்லை." தங்கம் வரவேற்றாள்.

"மாமி, இளங்கோ இல்லையே?" மகாதேவன் கேட்டான்.

"வந்திட்டனடாப்பா" உள்ளே இருந்து இளங்கோ குரல் கொடுத்தவாறு வெளியே வந்தான். முன்பு போல் மகாதேவனை ஏறிட்டுப் பார்க்க அவனால் முடியவில்லை. தன் காதலை நண்பன் ஏற்றுக் கொள்வானா என்ற தயக்கம் அவனுக்கு இருந்தது. அவனைக் கலந்து கொள்ளாமலே பல விடயங்களைத் தான் தீர்மானித்ததும் ஒரு குற்றவாளியின் மனநிலையை அவனுக்குக் கொடுத்தன.

"வாறியே, இப்பிடி ஒரு நடை போயிட்டு வருவம்:" மகாதேவன் நண்பனின் தோளில் கை போட்டவாறு கேட்டான்.

"கொஞ்சம் இருங்கோவன்ரா. தேத்தண்ணி போட்டுத் தாரன்"


பக்கம் 132

"நீங்கள் போடுங்கோ மாமி. நாங்கள் வந்திட்டம்." மகாதேவனும், இளங்கோவும் ஒழுங்கையில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள். திருவிழா ஒலிபெருக்கி சினிமாப் பாடலொன்றை ஒலி பரப்பிக் கொண்டிருந்தது. நண்பர்கள் இருவரும் சிறிது நேரம் ஏதேதோ கதைக்க முயன்றார்கள். ஆனால் இருவர் மனமும் அதில் ஒன்றவில்லை. முடிவில் மகாதேவன் ஆரம்பித்தான்.

"மச்சான், ஒரு விசயம் எனக்கு நீ மறைச்சுப் போட்டாய்."

இளங்கோவின் இதயம் ´பட பட´ வென அடித்துக் கொண்டது. ´செல்லம் சொல்லிப் போட்டாளோ!´ அவன் மனம் எண்ணமிட்டது.

"என்னடாப்பா, நீ சொல்லுறாய்?"

இளங்கோவின் நா தடுமாறியது. இருவரும் தாங்கள் வழக்கமாக இருந்து கதைக்கும் புளிய மரத்தின் கீழ் அமர்ந்தனர். இளங்கோ ஒரு கிளையை ஒடித்து நிலத்தில் போட்டுக் கொண்டிருந்தான். மாலை நேரம் பறவைகள் எல்லாம் கூடுகளை நோக்கி ஓடிக் கொண்டிருந்தன. மரத்தின் மேலும் குருவிகளின் சத்தம் கேட்டது.

"அதை நானே சொல்ல வேணுமே?" மகாதேவன் கேட்டவாறு தொடர்ந்தான். "இளங்கோ, செல்லம்... எங்கடை செல்லம்.."

"மகாதேவா, கோவிக்காதே. எங்களுக்கு ஒருவரை ஒருவர் பிடிச்சிருக்கு..."

"மச்சான்... எனக்குப் பெரிய சந்தோஷமடாப்பா"

"மகாதேவா" இளங்கோவின் உடல் சில்லிட்டது. அவன் அதை எதிர்பார்க்கவில்லை. நண்பனின் எதிர்ப்பைத்தான் அவன் எதிர்பார்த்தான். இளங்கோவின் கண்களில் நன்றி பெருகியது. அவன் தன் நண்பனின் கையைப் பற்றினான்.


பக்கம் 133

"மகாதேவா உனக்கு... உனக்கு என்னை..." இளங்கோ பேச்சை முடிக்கவில்லை. அவன் கண்கள் கலங்கின. அவன் அந்திவானத்தைப் பார்த்தான்.

"இந்தத் தகப்பன் பெயர் தெரியாத தரித்திரத்தை உன்ரை தங்கைச்சிக்கு..."

மகாதேவன் அவனைப் பேச விடவில்லை.

"பேய்க்கதை கதையாதே... நாங்களென்ன நேற்று, முந்தநாள் பழக்கமே! ஒன்றாப் படிச்சு... ஒன்றாய் விளையாடி... திண்டு குடிச்சனாங்கள்... செல்லம் உனக்குத் தெரியாதவளே? இல்லை அவளுக்குத்தான் உன்னைத் தெரியாதோ? மச்சான்... எனக்கு ஒரு விசயம் விளங்குது. அன்பு, பாசம், காதல் இதெல்லாம் எங்கே, எப்பிடி உருவாகுது என்று தெரியாது. உருவாகிட்டால் அந்தச் சக்தி மகத்தான சக்திதான். அது தூய்மையாக இருந்தால் இந்த ஊரை மாத்திரமில்லை, இந்த உலகத்தையே எதிர்த்துப் போராடும்…” மகாதேவன் எதையோ நினைத்து அப்படிப் பேசினான்.

“மச்சான், நான் கவலைப் பட்டது ஊருக்காக இல்லை… நீ விரும்ப இல்லையென்றால் அது எனக்குப் பெரிய கவலையாக இருந்திருக்கும்… ஊரிலே எனக்கு இருக்கிற மானக்கேடு உனக்குத் தெரியும். அதுதான் நான் செல்லத்தையும் கூட்டிக் கொண்டு எங்கேயாவது போகலாம் என்று பார்க்கிறன். கொம்மா கடைசி மட்டும் ஒத்துக் கொள்ளா.

“ஓடிப் போகப் போறியளே?” மகாதேவன் கேட்டான். “டேய் நான் என்ன மண்ணாங்கட்டிக்கே இருக்கிறன்? மச்சான், நீ கவலைப் படாதே. வாற வெள்ளிக்கிழமை உனக்கும், அவளுக்கும் பிள்ளையார் கோவிலிலே தாலி கட்டு. தடுக்கிறவன் தடுத்துப் பார்க்கட்டும்.

“ஏன் வம்மை விலைக்கு வாங்குவான். வேலுப்பிள்ளையர், மணியன் சும்மா இருப்பீனமோ? கட்டாயம் ஏதும் கலாதி வரும். பிறகு எங்களுக்குத்தானே மரியாதை இல்லை?” இளங்கோ கேட்டான்.


பக்கம் 134

“அட, கோபால் வாறான். வா மச்சான் வா.” மகாதேவன் அழைத்தான். கோபால், முகத்தில் வடிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டான். அவனது இருள் படிந்த முகம் சிறிது மலர்ந்தது.

“என்னடாப்பா, புளியடியிலே புரட்சிச் சதியோ?” கேட்டவாறு அவர்கள் அருகில் வந்து அமர்ந்தான். மூவரும் கலந்து கதைக்க ஆரம்பித்தார்கள்.

“மச்சான், கல்யாணம் முடிஞ்சிட்டால்… இஞ்ச ஒரு தம்பியும் ஒண்டும் செய்ய ஏலாது. ஏன் நாங்கள் இஞ்ச கல்யாணத்தை வைப்பான். சந்நிதியிலே வைச்சுத் தாலியைக் கட்டிக் கூட்டிக் கொண்டு வருவம்.” கோபால் வழி சொன்னான்.

“அது நல்ல ´ஐடியா´. செல்லத்தை, கோயிலுக்கு என்று அம்மாட்ட சொல்லி நான் கூட்டிக் கொண்டு வாறன்." மகாதேவன் தன் பங்கை விளக்கினான்.

"நானும், அக்காவும் கோயிலுக்கு வாறம். இன்னும் நாலைஞ்சு பெடியளை விசயத்தைச் சொல்லாமல் கூட்டிக் கொண்டு போகலாம். ஆக்களும் வேணுமில்லே!" கோபால் பேசினான்.

"கொம்மாவைக் கேட்டனீயே?" மகாதேவன் கேட்டான்.

"இல்லையடாப்பா... அவவுக்குத் தெரிய வேண்டாம். தாலியைக் கட்டி வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போவம். எல்லாத்துக்கும் காசு வேணுமே!" இளங்கோ பதிலளித்தான்.

"அதைப் பற்றிக் கவலைப் படாதே. எங்கடை செல்லத்துக்குச் சிலவழிக்க இல்லையென்றால் ஆருக்குச் சிலவழிக்கிறது?" மகாதேவன் தன் கடமையை நினைவூட்டினான். பல மணி நேரம் நண்பர்கள் கதைத்து இறுதி முடிவோடு வீடு திரும்பினர். பெரியதொரு சாதனையை ஏற்படுத்தத் தயாராகும் வீரர்கள் போலிருந்தது அவர்கள் மனோநிலை. இந்தத் துணிவும், மனோதிடமும் ஏன் தேவியின் விடயத்தில்

பக்கம் 135

தனக்கு இல்லையென மகாதேவன் நினைக்காமல் இல்லை. நண்பர்களின் இத்தனை ஒத்துழைப்பு இருந்த போதும் தன் பிறப்பின் இரகசியம் இளங்கோவின் இதயத்தை அன்று அதிகமாக அரித்தது.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

"தேவியக்கா, தேவியக்கா" மெதுவாகச் செல்லம் வேலியருகில் நின்று அழைத்தாள். நிலவின் ஒளி வெள்ளத்திலே அவளும் ஒன்றிப் போய் நின்றாள்.
"செல்லம், கொம்மா திருவிழாவுக்குப் போயிட்டா போலை..." தேவி சிரித்துக் கொண்டே வந்தாள். இருவரும் அலம்பல் வேலி அருகே இருக்கின்றனர்.

"ஓமக்கா... எப்பிடி இப்ப உங்களுக்கு...?"

"நல்ல சுகமடி... தம்பி பிறகும் தியேட்டருக்குப் போயிட்டான். துணைக்கு தங்கமக்கை வாரனெண்டவ. இன்னும் காண இல்லை."

"தங்கம் மாமியோ...? அதுக்குச் சாப்பாடு போட்டிட்டுத்தானே வருவா"

"எதுக்கு...? ஓகோ... அவருக்குகோ?"

"சும்மா பகிடிதான். போங்கோ அக்கா"

"எடியே, உனக்கு அவன் மணியனைப் பேசியாச்சு. நீ இன்னும் இளங்கோவை நினைச்சுக் கொண்டிருக்கிறியே?"

"மணியன், அவன் பழைய காலத்து ஆள். அந்த ஆக்கள் மாதிரியேதான். அக்கா, சமுதாயத்துக்குப் புதிய பூக்கள் வேணும். பழைய குருட்டு நம்பிக்கைகளையும், கண்மூடித்தனமான கட்டுப்பாடுகளையும் தகர்த்து எறிகிற உறுதியுள்ளவை வேணும்."

"அதெல்லாம் உன்ரை இளங்கோட்டை இருக்காக்கும்."


பக்கம் 136

"ஏனக்கா, மணியனைப் போல ´அது´ சீதனங் கேட்டே வந்தது? அன்பு உள்ளம் இருந்தால் நல்ல பண்பெல்லாம் தானாக வருகுது. ´அதுக்கு´ என்னிலே விருப்பம்... எனக்கும் அதிலே..."

"கொள்ளை ஆசை" தேவி சிரித்தாள். செல்லம் கன்னஞ் சிவந்தாள்.

"செல்லம், எங்கடை ஊரிலே ஆம்பிளையளே தாங்கள் விரும்பினவளைக் கட்ட முடியாமல் போயிடுது. நீ ஒரு பொம்பிளை... அதுவும் இளங்கோ... ஊர் சும்மா இருக்காதே!"

"அதை நினைச்சால்தான் பயமாயிருக்கு. வேலுப்பிள்ளை மாமா சும்மா இருக்க மாட்டார். என்ரை நல்ல காலம். அம்மா கோவிச்சாலும் அண்ணனுக்கு விருப்பம். அண்ணன் என்னைக் கைவிடாது."

தேவியின் மனதில் சிறு சலனம் ஏற்பட்டது. தேவன்... கைவிட மாட்டான். அவள் எண்ணங்கள் அவனது கடைசிச் சந்திப்பில் மிதந்தன. செல்லம் ஏதேதோ சொன்னாள். தேவியோ ´ம்´ கொட்டிக் கொண்டிருந்தாள்.

"அக்கா, என்ன அக்கா, நான் பேசுறன். நீங்கள் யோசிச்சுக் கொண்டு..." செல்லம் கேட்டாள்.

தேவி பூவரசம் இலையொன்றை ஒடித்துக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தாள். செல்லம் மணப் பெண்ணாவாள். இளங்கோவோடு கரம் கோர்த்துத் திரிவாள். கணவனுக்கு உணவாக்கி அவனோடு உண்பாள். குழந்தை பிறக்கும். அதை மார்போடு அணைத்து மகிழ்வாள். தன்னைக் காட்டி "இந்த மாமியைப் பார்" என்பாள். குழந்தை சிரிக்கும்.

"செல்லம்... எனக்குப் பொறாமையாக இருக்கடி" தேவியின் கண்கள் கலங்கின.

"அக்கா..." செல்லம் தடுமாறிப் போனாள்.


பக்கம் 137

"எடியே, நீ நல்லா இருக்க வேணுமடி. செல்லம், உன்னிலே எனக்கு எவ்வளவு அன்பிருந்தாலும் குழந்தை, குட்டி, புருசன்... என்று யாரை நினைச்சாலும் எனக்கு... எனக்கு... என் நிலைதானடி தெரியிது. கடவுளே... எனக்கு ஏனிந்தக் கூடாத மனம்?"

"அக்கா, அழாதேங்கோ. நான்தான் உங்களை அழ வைச்சிட்டன்."

"இல்லையடி, நான் அழவென்றே பிறந்தனான்." எப்பொழுதுமே அவர்கள் உரையாடல் தேவியின் கண்ணீரில்தான் முடியும். தேவி தன்னுள்ளத்தைத் திறந்து சொல்லி அழுவது செல்லத்திடந்தான்.

"நீ போய்ப் படு செல்லம்."

"தங்கம் மாமி இன்னும் வர இல்லை...ß"

"இன்னுங் கொஞ்சத்திலே வருவா."

"நீ போய்ப் படு" தேவியும் செல்லமும் பிரிந்து சென்றனர். செல்லம் வீட்டுக்குள் சென்ற போது மகாதேவன் தூக்கம் வராது தரையில் புரண்டு கொண்டிருந்தான். நிலவு அவனைச் சுட்டெரித்தது. அவன் எழுந்து வெளியே வந்தான். அவன் கண்கள் வேலியினூடே சென்று தேவியைத் தேடின. வீட்டின் விளக்கொளியில் அவள் நிற்பது நிழலாகத் தெரிந்தது. அந்தக் கடைசிச் சந்திப்பு நிழலாக அவன் நெஞ்சில் ஓடியது. அவளை அவன் அணைத்த போது... அவள் கரங்கள் அவன் தலையைக் கோதிய போது...

தேவன் தன் தலைமயிரைக் கைகளால் குழப்பிக் கொண்டான். வீட்டினுள் நுழைந்து செல்லத்தை நோக்கினான். புன்னகை மலர அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். வெளியே வந்தவன் இளங்கோ வீட்டை ஆராய்ந்தான். தங்கத்தின் குரல் அவனுக்குக் கேட்டது. விரைவாக அவன் தேவியின் வீட்டை நோக்கி நடந்தான்.


பக்கம் 138

தேவி தூணோடு சாய்ந்தவாறு கற்பனை உலகில் நின்றாள். தேவன் மிக அருகில் வந்த பின்னர்தான் அவள் அவனைக் கண்டாள். ஒரு கணம் திகைத்தாள். தேவன் சில வினாடிகள் தலை குனிந்து நின்றான். அவன் அகன்ற மார்பு பொங்கித் தணிந்து கொண்டிருந்தது. நிலவு அவனை அணைத்துத் தன் ஆசையைத் தணித்துக் கொண்டிருந்தது. தேவியின் விழிகளும் போட்டியிட்டன.

"தேவி" அவன் அருகில் வந்தான்.

"தேவா, தங்கம் மாமி வருவா." அவன் அவள் கரங்களைப் பற்றினான். தேவி வேகமாக மூச்செறிய ஆரம்பித்தாள். அவள் கண்களில் ஒரு மயக்கம்.

´தேவா´ அவள் உதடுகள் அசைந்தன. வார்த்தைகள் வரவில்லை. அவள் மீண்டும் முயன்ற போது அவன் உதடுகள் அந்த அசைவையும் தடுத்தன. அவள், அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். இதயங்கள் இரண்டும் ஒன்றாகத் துடித்தன. அந்தத் துடிப்பின் ஓசையிலே உலகத்தின் சத்தங்கள் கேட்கவில்லை. தேவி கண்களை மூடிக் கொண்டாள்.

தங்கத்தின் கண்கள் அந்தக் காட்சியை நம்ப மறுத்தன. இளங்கோ தலையைக் குனிந்து கொண்டான். அவனும் அதை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வரவை அறிந்து கொள்ளாமலே அன்பின் அணைப்பில் கட்டுண்டு இருந்தார்கள் தேவியும், தேவனும்.

"தேவி" தங்கத்தின் குரல் நடுங்கியது. தங்கம் நிலத்தில் அப்படியே இருந்து விட்டாள். திடுக்குற்ற தேவி பாம்பை மிதித்தவள் போல் பதறி, விலகிக் கொண்டாள். தேவன் செய்வதறியாது கைகளைப் பிசைந்தவாறு நின்றான்.

யாருமே பேசவில்லை. தேவி தூணோடு முகத்தைப் புதைத்துக் கொண்டாள். தேவன் தலை குனிந்தவாறு கரங்களைப் பிசைந்தான். இளங்கோ வானத்தை வெறித்துப் பார்த்தான். அவன் சிந்தனையில் பல கேள்விகள் மோதின.

பக்கம் 139

தேவி - அவன் இதயத்தில் அன்பையும் ஒரு தூய்மையான இடத்தையும் பெற்றிருந்தாள். அவளா அந்த நிலையில்...? அவனால் நம்பவும் முடியவில்லை. ஆனால் உண்மை... மறுக்கவும முடியவில்லை. அடக்கம், அன்பு, இன்முகம் இவையெல்லாம் தேவியின் அணிகலன்கள் என அவன் எண்ணியது உண்டு. அந்த ஊரிலேயே விரிந்த சிந்தையும், முதிர்ந்த அறிவும் கொண்டவள் அவள்தானென அவன் கருதினான். அவளா இப்படி...? தனக்கு இளையவன் ஒருவனுடன் தன்னை மறந்து இந்த நிலையிலா?

தேவன்... எதையுமே நின்று, நிதானித்துச் செய்பவன். வாழ்வுக்கெனச் சில விதி முறைகளை அமைத்து அதன்படி நடப்பவன். அவனா அப்படி...? அக்கா, தம்பி போல் பழகியவர்கள். அவர்களா இந்த நிலையில்...? காதலிப்பது தவறென்று இளங்கோ நினைத்ததில்லை. இளங்கோ செல்லம் உறவுக்குப் பெயர் காதல்தான். ஆனால் இது காதலா...? வெறும் உடல் இச்சையின் விளைவா...? இந்த உறவிலும் ஓர் உண்மை அன்பு - காதல் - உருவாக முடியுமா...?

நால்வரின் நாக்குகளும் அசையவில்லை. இதயத்துக்குள்தான் எத்தனை போராட்டம். அமைதியான அந்தப் போராட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாது. முதலில் அசைந்தவன் தேவன்தான். தலை குனிந்தவாறு மெதுவாக அவன் படலையை நோக்கி நடந்தான். அவன் மூன்றடி கூட வைத்திருக்க மாட்டான். தங்கத்தின் குரலால் அவன் உடல் சிலிர்த்தது.

"நில்லடா"

அவன் மட்டுமல்ல, இளங்கோவும் திடுக்குற்றான். தேவியின் விழிகள் மருண்டன. அது சாதாரணமான தங்கத்தில் குரலல்ல. அவள் இதயத்தின் உணர்ச்சிகள் எல்லாம் ஒன்று திரண்டு வந்த குரல்.

"போவியே? நீ போவியேடா? அவளை இப்பிடியே விட்டிட்டுப் போவியேடா?"

பக்கம் 140

இருந்த தங்கம் ஆவேசம் வந்தது போல் எழுந்து கத்தினாள். தேவன் ஆடியே போய் விட்டான். தேவி திகைப்போடு தங்கத்தை நோக்கினாள். இளங்கோ தாயை இந்தக் கோலத்தில் என்றுமே கண்டதில்லை.

சாரம் மட்டுமே தேவன் அணிந்திருந்தான். அவன் மேனியிலிருந்து வியர்வை பெருகி ஓடியது. அவன் அசையாது நின்றான். தங்கம் ஓடிச் சென்று அவன் மடியைப் பிடித்து உலுக்கினாள்.

"டேய், டேய்... உன்னை நல்ல பெடியனென்று நெச்சனடா. படலைக்கு அங்காலே காலெடுத்து வைச்சாய்... முறிச்சுப் போடுவனடா... முறிச்சு"

இதுவரை பேசாது நின்ற இளங்கோவுக்குத் தாயின் செய்கை அதிகப்பிரசங்கித் தனமாகத் தோன்றியது. தவறு தேவனுடையது மாத்திரமல்லவே! தேவி விரும்பா விட்டால் இது நடக்குமா? அதுவும் அங்கு, அப்படி விபரீதமாக ஏதும் நடந்து விடவில்லை. அவன் தாயை நெருங்கி அவள் கைகளைப் பற்றியவாறு "அம்மா" என்றான். அவன் கைகளைத் தள்ளி விட்டு "என்னடி தூணுக்க ஒளியிறாய்? இஞ்சாலை வாடி." என்று தேவியைப் பார்த்து அவள் சீறினாள். தேவி நடுங்கியவாறு வெளியே வந்தாள். வேங்கையைப் போல் பாய்ந்து அவள் கூந்தலைப் பற்றித் தன் முகத்திற்கு அருகே இழுத்தவாறு தங்கம் பேசினாள்.

"எடியே, உனக்குத் தெரியுந்தானேடி, நாளெல்லாம் நான் ஏன் அழுகிறனென்று உனக்குத் தெரியாதே? நான் பெத்த பிள்ளைக்குத் தகப்பன் இல்லையென்று ஊரெல்லாம் சிரிக்குதே உனக்கும் தெரியுந்தானேடி. எடியே... எடியே..."

"உனக்குத் தானேடி சொன்னனான். உன்ரை கொப்பன் செய்த வினையாலே நான் என்ரை மோனைக் கூட நிமிர்ந்து பார்க்க ஏலாமல் இருக்கிறனென்டு."

பக்கம் 141

தேவியும் அழ ஆரம்பித்தாள். இளங்கோவின் உள்ளம் எதையோ கேட்கத் துடித்தது. வார்த்தைகள் வரவில்லை. மகாதேவன் செய்வதறியாது தடுமாறினான்.

"டேய் தேவா, கேட்டியேடா இவன்ரை அப்பன் ஆரென்று" சொல்லுறனடா கேள்... டேய், அறிவு கெட்டு நிக்கிறாளேடா இந்தப் பேச்சி, இவளைப் போல தானடா அண்டைக்கு நானும் நின்றன். பெடியள், ஆசை பாசங்கள் பெண்டுகளுக்கு இல்லையே? ஏழையளுக்குக் கிடையாதே? வயசாகியும் வாழ வழியில்லாமல் நான் ஏங்கிக் கொண்டிருந்தனடா. டேய், தடி மாடு மாதிரி நிக்கிறியேடா, உன்னைப் போலத்தான்டா அன்றைக்கு வந்தார்.... டேய், அந்தப் பழியைப் பாவத்தைத் தானடா இண்டைக்கு அவனும், நானும் இன்னும் சுமக்கிறம். அடி பாவிப் பெண்ணே, ஏனடி நீயும் குறுக்கால போறாய்?" அப்பன் செய்த பாவம் போதாதேடி?"

தேவியும் தங்கமும் அழுதார்கள். தேவனின் கண்களும் கலங்கின. அவன் மிக மெல்லிய குரலில் பேசினான்.

"மாமி, பிழை என்னிலைதான்... நான்தான் மாமி... ஆனால் நான் அவளைக் கைவிட மாட்டன். அவளுக்கு நான்தான் தாலி கட்டுவன்." மகாதேவன் குரல் மெதுவாக ஒலித்தாலும் அதில் உறுதியிருந்தது.

"தம்பி, டேய் உன்னைக் கும்பிட்டனடா... இப்ப சொன்னியே அந்தச் சொல்லைக் காப்பாத்திடு. இவள் எனக்குப் பிள்ளையடா... அவன்ரை தமக்கை. கோபால் வயித்திலே இருக்கிற நேரத்திலேதான் ஒரு நாள், இவளின்ரை தகப்பன் என்னை..."

இளங்கோ ஒன்றும் பேசாது வெளியே நடந்தான். அதற்கு மேல் அவனால் அங்கு நிற்க முடியவில்லை. அவனை யாரும் தடுக்கவில்லை. தடுக்கும் நிலையில் அங்கு யாரும் இல்லை.

No comments: