Tuesday, March 27, 2007

மீட்டாத வீணை - 14

பக்கம் 157

மீனாட்சி சேலைத் தலைப்பை நிலத்தில் விரித்துக் குடிசையின் தரையில் படுக்கிறாள். அவளால் அழுகையை இன்னும் அடக்க முடியவில்லை.

"என்ரை பெடியள் இப்பிடிச் செய்யுங்களோ?" அவள் வாய் முணுமுணுக்கிறது.

"ஐயோ கடவுளே, எனக்கு இனி ஆர்?"

வெறிச்சோடிக் கிடந்தது வீடு. பொழுது விடிந்து விட்டது. தேத்தண்ணி போட்டுத் தரச் செல்லமில்லை. கிணற்றடியிலே தேவன் தண்ணீர் இறைக்கும் சத்தம் இல்லை. ஆடு மட்டும் கத்துகிறது. தனிமை... பயங்கரமான தனிமை.

´எடியே, அதை வையடி. இதை எடடி´ இப்படி மீனாட்சி இனி யாருக்குச் சொல்ல முடியும்?

"அம்மா, தேத்தண்ணியைக் குடியன்." மீனாட்சி எழுந்து பார்க்கிறாள். அவள் இல்லை. செல்லம் இல்லை. வெறும் பிரமைதான்.

"கொண்ணனுக்குத் தேத்தண்ணி குடுத்தனீயே?" கேட்கத் துடிக்கிறது நாக்கு. அவனும் அங்கில்லை. அவளும் அங்கில்லையே. மீனாட்சிக்குத் தன் தலையை நிலத்தோடு மோத வேண்டும் போலிருக்கிறது. அவள் எழுந்து கிணற்றடியை நோக்கி நடக்கிறாள். வாளியில் தண்ணீர் இல்லை. அவனிருந்தால் வாளி நிறையத் தண்ணீர் இருக்குமே. மீனாட்சி கிணற்றுக் கட்டில் இருந்து விடுகிறாள்.
பக்கம் 158


ஆடு அவிழ்த்துக் கொண்டு ஓடி மிளகாய்ச் செடிகளைக் கடிக்கிறது. துள்ளி எழுகிறாள்.

"சூ... சூ... அடி செல்லம் ஆட்டைப் பிடிச்சுக் கட்டடி. இஞ்ச மிளகாயெல்லாம் கடிக்குது. கொண்ணன்..."

அவள் வார்த்தைகள் பாதியில் நிற்கின்றன. மீதி கண்ணீராக வடிகிறது. செல்லம் வரவில்லை.

ஆட்டை இழுத்துக் கட்டிய கோபால் மீனாட்சியின் அருகில் போய் நின்றான்.

"மாமி"

"மோனை" அவனைப் பிடித்துக் கொண்டு அவள் அழுதாள். "மோனை... மோனை... அதுகள் இல்லாமல் என்னாலே இருக்க ஏலாது..."

"மாமி, இன்னுங் கொஞ்சத்திலே அதுகள் வந்திடும். நீங்கள் விரும்பினால், அதுகள் இஞ்சையே இருக்கும். மாமி, ஆசைப்பட்டதுகள் கலியாணம் கட்டினால் என்ன பிழை?" கோபால் கேட்டான்.

"மாமி, நீங்கள் கோபப் பட்டால் ஞாயம். ஏன் மற்றவைக்கு இவ்வளவு வருத்தம்? உங்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டியவை எல்லாம் இப்ப எங்கே?"

"ஓமடா மோனை, எனக்கும் விளங்குது. நானும் என்ரை எண்ணப்படி நடக்கு வேணுமென்று பார்த்தன். அதுகள் கெட்டிக்காரர்கள், என்ரை பிள்ளையளில்லே? கோபால் அதுகள் எப்ப வரும்?" மீனாட்சி கேட்டாள்.

"இவ்வளவும் கலியாணம் முடிஞ்சிருக்கும். வழியிலே வந்து கொண்டிருப்பீனம்." கோபால் சொன்னான்.

"மோனை... அதுகள் புதுக்கப் புதுக்க மாப்பிளை பொம்பிளையா வரப் போகுதுகள். நான் ஒன்றும் செய்ய இல்லை. கொஞ்சம் உதவி செய்யிறியே? ஒரு சோறு காய்ச்சிப் போடுவன்."


பக்கம் 159

மீனாட்சி பழைய மீனாட்சியானாள். பம்பரமானாள். வீட்டைக் கூட்டிப் பெருக்கினாள். வீட்டு வாசலில் கோபாலைக் கொண்டு இரண்டு வாழைகள் நட்டு வைத்தாள். அக்கம் பக்கத்தவர்களும் ஒரு சிலர் வந்து உதவ ஆரம்பித்தார்கள். தடல்புடலாகச் சமையல் நடக்க ஆரம்பித்தது. மீனாட்சியின் மனதின் ஓர் ஓரத்திலே சிறிது வெட்கமும், வேதனையும் இருந்தாலும் அவள் முகத்தில் அது தெரியவில்லை. நேரம் கடந்து கொண்டிருந்தது. தனக்குப் பயந்து பிள்ளைகள் அங்கு வரமாட்டார்களோ என்ற பயம் அவளுக்கு ஏற்பட ஆரம்பித்தது. அவர்கள் வரவேண்டுமென அவள் பிரார்த்திக்க ஆரம்பித்தாள். எல்லோரும் மணமக்களை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

"பெடியள், வெடியைக் கொளுத்துங்கோடா, கார் வருகுது" மீனாட்சி சத்தமிட்டாள். படபடவென சீனவெடிகள் வெடித்தன. கார் மணல் ஒழுங்கையில் திரும்பியது. திகைப்போடு மணமக்கள் காரை விட்டு இறங்கினர். குத்துவிளக்கும், கும்பமும் அவர்களை வரவேற்றன. கோபால் புன்னகையோடு நின்றான். மீனாட்சி புதுச்சேலை அணிந்து மலர்ந்த முகத்தோடு காணப்பட்டாள். வாசலில் அவர்களை ஆராத்தி எடுக்க இரு பெண்கள் காத்திருந்தனர். அவர்களால் தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை. ஓடிப் போனவர்களுக்கா இந்த வரவேற்பு? தேவன் தன் தாயைப் பார்த்தான். ´அம்மா, எங்களை மன்னித்து விடு´ என்று அவன் கண்கள் கெஞ்சின.

ஆனால் மீனாட்சியின் கண்களிலோ பூரிப்புப் பொங்கியது. அப்பப்பா, தேவிதான் என்ன அழகாக இருக்கிறாள். முகமோ மலர் போலிருக்க, கூந்தலிலும் மல்லிகை மலர்களை அழகாகச் செருகியிருந்தாள். கழுத்திலும் அழகியதொரு மலர்மாலை - கன்னம் இரண்டிலும் மகிழ்வும், நாணமும் செங்குழம்பைப் பூசிக் கொண்டிருந்தன. ஆனால் கண்கள் மட்டும் மருட்சியோடு மீனாட்சியைப் பார்த்தன.

பக்கம் 160

அந்தப் பார்வை மீனாட்சியின் இதயத்தை ஏதோ செய்தது. தேவிக்கு, தான் பல கொடுமைகளைச் செய்து விட்டதைப் போன்ற உணர்வு - ஒரு கணம் அவள் அம்மம்மாவுக்கு ஏற்பட்ட கதி நினைவுக்கு வருகிறது. அடுக்களையில் வைத்து அவளை அடித்தது - பாவம் பெண் பேதை. மீனாட்சி மீண்டும் தேவியைப் பார்த்தாள். தேவியின் விழியோரங்களில் நீர் திரள ஆரம்பிக்கின்றது. மீனாட்சிக்து அது என்னமோ செய்கிறது.

"மருமகளே, வா" மீனாட்சி ஓடிச் சென்று அவள் கரங்களைப் பிடிக்கிறாள். தேவியின் கரங்கள் நடுங்குகின்றன. இதழ்கள் படபடக்கின்றன. அவள் பேச முடியாது தவிக்கிறாள். தேவனின் இதயத்தில் இடம் கிடைத்தது பெரிதல்ல. மீனாட்சியே அவளை ஏற்றுக் கொண்டால்...? தேவி அப்படியே குனிந்து அவள் கால்களைக் கட்டிக் கொண்டாள். மீனாட்சியின் உடலெங்கும் ஒரு புல்லரிப்பு. ஒரு பெண்ணுக்கு அவளுக்கு உரிய இடத்தைக் கொடுத்தால், இத்தனை இன்பமா? அவள் கரங்கள் தன் மருமகளின் கூந்தலைத் தடவுகின்றன. கண்கள் ஏனோ இன்பத்தால் பனிக்கின்றன. அவள் கண்கள் மட்டுமா? தங்கம் சேலைத் தலைப்பால் தன் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். கோபால் தன் கண்களில் வடியும் கண்ணீரை மறந்து அந்த இன்பக் காட்சியைப் பார்த்து நிற்கிறான். இளங்கோவோ அந்த இன்பத்தில் செல்லத்தின் கரங்களை அழுத்துகிறான். செல்லமோ தன் தாயை எண்ணிப் பெருமை கொள்கிறாள்.

"என்னடா, பார்த்துக் கொண்டு நிற்கிறாய்? பெரிய மனுசர் மாதிரி செய்யிறதையும் செய்து போட்டு. அதுகள் வெயிலுக்க நிக்குதுகள், கூட்டிக் கொண்டு வாவெனடா உள்ளே" மீனாட்சி தேவனைப் பார்த்து உரிமையோடு பேசுகிறாள். தேவன் புன்னகையோடு எல்லோரையும் வீட்டுக்குள் அழைத்து வருகிறான்.


பக்கம் 161

கலியாண வீடு களை தட்டுகிறது. ஆண், பெண்களெல்லாம் எங்கிருந்தோ வந்து சேருகிறார்கள். மீனாட்சி மகாராணி போல் அங்குமிங்கும் கட்டளையிட்டவாறு திரிகிறாள்.

"இலையைப் போடு, இலையைப் போடு என்று அவள் குரல் கேட்கும்.

"தங்கம், இந்த இலையைப் பார்த்து கறியைப் போடு." என்பாள்.

"இளங்கோ மோனை, நெய் விடட்டோ?" என்று கேட்பாள்.

"அடக் கோபால் சாப்பிடனடா. சோறு அப்பிடியே இருக்கு" என்று கடிந்து கொள்வாள்.

+++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++++++++++++++++


கலகலப்பாக அன்றைய பொழுது அங்கே மறைந்து கொண்டிருந்தது. கணபதிப்பிள்ளையர் மதுப்புட்டிகளைக் காலி செய்து கொண்டிருந்தார். அந்த ஏமாற்றத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மதுப்புட்டிகள் காலியாகக், காலியாக மனதில் குரோதமும், கோபமும் நிரம்புகின்றன.

"இதயம், பாசம், பண்பு - இது இருக்கிறவன் ஏழையில்லை. எண்பது வயதைத் தாண்டினாலும் எனக்குத் துணையாக இருக்கலாம்... ஆனால்... நீங்கள்... சீ... போங்கோ."

தேவியின் வார்த்தைகள் அவர் இதயத்தில் இன்னும் இருந்தன. ஆண்களால் எதையும் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் ஒரு பெண்ணால் அவன் புறக்கணிக்கப் பட்டால் அது தாங்க முடியாத வேதனைதான். அதுவும் கணபதிப்பிள்ளையர் பணத்தால் வெற்றிகளையே கண்டு வந்தவர். அவரால் அதைத் தாங்க முடியுமா?

பக்கம் 162

"விசயம் முடிஞ்சு போச்சு, வீணாக மினைக்கெடாதேங்கோ" கோபால் சொன்னவை அவர் காதில் விழுகின்றது. அவர் மேசையில் ஓங்கி அறைகிறார். மதுப்புட்டிகள் நடுங்குகின்றன. அவர் கதவை ஓங்கிச் சாத்திவிட்டு நடக்கிறார். எதிரே வந்த மகளையும் சட்டை செய்யாது ஏதோ ஒரு வெறியுடன் அவர் காரை ஓட்ட ஆரம்பிக்கிறார். அவருடைய கார் அவரது கையாள் வீட்டிற்குச் செல்கிறது. அவருக்கு வேண்டாதவர்களை அடிப்பதற்கும், அழிப்பதற்கும் என்று இருப்பவன்தான் நடராசன். அவன் கையில் காசை வைத்து "காரியத்தை முடி" என்கிறார் கணபதிப்பிள்ளையர்.

"முதலாளி கவலைப் படாதேங்கோ" என்கிறான் அவன். அவர் முகத்தில் வெற்றிப் புன்னகை மலர்கிறது.

+++++++++++ +++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++


திண்ணையில் இருந்தவாறு கோபால், இளங்கோ, தேவன் ஆகியோர் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கதிரவன் விரைவாக மறைந்து கொண்டிருக்கிறான். புதுத் தம்பதிகள் இரவைக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரியும் போலும். இளங்கோ, தேவனின் கண்கள் அடிக்கடி வீட்டினுள்ளே சுழல்கின்றன.

தேவியின் தலையை மீனாட்சி வாரிக் கொண்டிருக்கிறாள். தன் மருமகளின் நீண்ட, நெளிந்த கூந்தலைத் தடவும் போது அவளுக்கு ஒரு மகிழ்ச்சி. தன் மகனின் குறைகள் நிறைவுகளையும், விருப்பு வெறுப்புகளையும் அவள் சொல்லிக் கொண்டிருக்கிறாள். அவர்களுக்கு எதிரே தங்கம் செல்லத்தின் கூந்தலை அலங்கரிக்கிறாள். கிழவிகள் இடையிடையே கேலியும் செய்கிறார்கள். இளசுகள் வெட்கத்தால் இதழைக் கடித்துக் கொள்கிறார்கள்.

"தங்கம், பொழுதுபடப் போகுது. பொழுதுபட்டால் தலை இழுக்கக் கூடாது. கெதியா இழுத்து விடு." மீனாட்சி சொல்கிறாள். தேவியின் தலை பின்னியாயிற்று. அவள் எழுகிறாள்.


பக்கம் 163

"இஞ்ச திரும்பு பிள்ளை, பார்ப்பம்" மீனாட்சி தேவியைப் பார்க்கிறாள். "கடவுளே, நாவூறு படக் கூடாது. என்ரை கண்ணே பட்டிடும் போலயிருக்கு."

"மாமி, நீங்கள் தேத்தண்ணியும் குடிக்க இல்லை. போட்டுக் கொண்டு வரட்டே?" தேவி கேட்டாள்.

"போ பிள்ளை. இன்றைக்கு உனக்கு வேற வேலை கனக்க இருக்கு. போய் முகத்தைக் கழுவிக் கொண்டு வா. செல்லம், நீயும் போவனடி" மீனாட்சி சொன்னாள்.

"கொஞ்சம் பொறு மீனாட்சி. இன்னும் முடிய இல்லை. தலையைக் கொஞ்சம் குனி பிள்ளை." தங்கம் சொன்னாள்.

தேவி அறைக்குள் சென்றாள். எப்படியோ அங்கு வந்து விட்ட தேவன், அவள் கரத்தைப் பற்றிக் கொண்டான். அவள், அவன் விழிகளை ஆசையோடு பார்த்தாள். திருமணத்தின் பின் அவர்கள் இப்பொழுதுதான் தனிமையில் சந்திக்கின்றனர்.

"தேவி" அவன் கரங்கள் அவள் கன்னத்தைத் தடவுகின்றன. அவள் அவன் திறந்த மார்பில் தன் முகத்தைப் பதித்துக் கொள்கிறாள். அவள் செவ்விதழ்கள் அங்கே முத்திரையைப் பதிக்கின்றன. அவள் மெதுவாகப் பேசுகிறாள்.

"இன்னும் கொஞ்சம் பொறுங்கோ."

"ம்... ஹ_ம்" அவன் அவளை இறுகக் கட்டிக் கொள்கிறான்.

"விடுங்கோ. ஆரும் வரப் போகினம்... விடுங்கோவன். மாமியைக் கூப்பிடுவன்." தேவி சொல்கிறாள்.

"எனக்குப் பயமில்லை"

"மா... மி..."

பக்கம் 164

"டேய், அங்க என்னடா சத்தம்?" தேவி, இன்னும் முகம் கழுவ இல்லையே?" மீனாட்சியின் குரல் கேட்கிறது.

தேவி தேவனின் கன்னத்தில் கிள்ளி விட்டுத் துள்ளி ஓடுகிறாள். அதை ஜன்னலினூடே பார்த்த செல்லம் ´கிளுக்´ கெனச் சிரிக்கிறாள்.

"என்னடி சிரிப்பு?" மீனாட்சி கேட்க, தங்கம் பார்க்க செல்லம் ஒன்றும் சொல்ல முடியாது தவிக்கிறாள்.

"செல்லம், நான் கிணத்தடிக்குப் போறன். நீ வா" தேவி கிணற்றடியை நோக்கிப் போகிறாள். அவள் நடையில் ஒரு துள்ளல். உள்ளத்தின் எதிரொலியது. முகத்திலே மின்னுகிறது ஒரு புன்னகை. அவள் கதை குளத்திலோ, குட்டையிலோ முடியவில்லை. அவள் ஏங்கிக் கிடந்த வாழ்வு கிடைத்து விட்டது. அவள்... அவள்... இன்று ஒருவனுக்கு... அவள் ஆசைக்குரியவனுக்கு மனைவி. நம்ப முடியவில்லை. அவளுக்குக் கலியாணம் முடிந்து விட்டது. அவள் தாiலியைத் தடவிக் கொள்கிறாள். அவள் இதயமே மகிழ்ச்சியில் வெடித்து விடும் போலிருக்கிறது. தக்காளிப் பழங்களைக் கைகளால் தட்டியவாறு அவள் குழந்தை போல் துள்ளித் துள்ளி ஓடுகிறாள். இனி அவளை யாரும் கேலி செய்ய முடியாது.

இந்த உலகம் முழுவதும் கேட்கும் வகையில் "எனக்கும் கலியாணம் ஆகி விட்டது." என்று அவள் கத்த விரும்பினாள். வானத்துப் பறவைகளைப் பார்த்துக் கைகளை வீசினாள். வாழை இலைகளை வருடினாள். ஆட்டுக்குட்டியை அணைத்து முத்தங் கொடுத்தாள். நிலவைப் பார்த்துச் சிரித்தாள். இன்னும்; சில மணி நேரங்களின் பின், அவள் தன் கணவனின் மார்பில் சாய்ந்திருப்பாள். அந்த இணைப்பிலே அவள் வாழ்வின் இனிய நாதம் கேட்கப் போகிறது. அந்த இன்பநாதம் எழுந்து அவளுடலெங்கும் ஓடுகிறது. கிணற்றடியை அடைந்த தேவி வாய்விட்டுச் சிரித்தாள்.

பக்கம் 165

அவள் கண்களில் ஓட்டை வாளிதான் முதலில் பட்டது. ஒரு சேலைத் துண்டால் அவள் அந்த ஓட்டையை அடைத்தாள். அவள் இனி ஓட்டை வாளியில்லை. அந்த நீர் வீணாகப் போய் விடாது.

"எடி செல்லம், செல்லம்... கெதியாக வாவனடி" அவள் கிணற்றடியில் நின்று கத்தினாள்.

"வந்திட்டனக்கா... போக விடுங்கோவன்" தன் வழியை மறித்துக் கொண்டு நின்ற இளங்கோவைச் செல்லம் கெஞ்சினாள். அவளுக்கு ஓர் ஆசை - தேவி அக்காவைப் போல தானும் அவன் கன்னத்தில் கிள்ளி விட்டு ஓட வேண்டுமென்று. அவள், அவன் கன்னத்தைக் கிள்ள நெருங்கினாள். கை நடுங்கியது. அவன் சிரித்தான். அவள் வெட்கத்தோடு ஓடினாள்.

தேவி தண்ணீர் அள்ள ஆரம்பித்தாள். கிணற்று விளிம்பில் நின்றவாறு துலாக்கயிற்றை இழுத்தாள். யாரோ பின்னால் அசைவது போன்ற உணர்வு. செல்லமா? அவள் திரும்பினாள். அதற்குள் நடராசன் காரியத்தை முடித்து விட்டான். அவன் கை பலங்கொண்ட மட்டும் அவளைத் தள்ளியது.

"ஐயோ, அம்மா" அவள் வீரிட்டாள். கிணற்றின் பாதாளத்தை நோக்கி அவளுடல் போய்க் கொண்டிருந்தது. கணபதிப்பிள்ளையரின் கையாள் நடராசன் வேலியால் பாய்ந்து மறைந்து விட்டான்.

செல்லம் "வீல்" என்று அலறினாள்.

தேவனுக்கு எந்தக் குரலும் கேட்கவில்லை. ஆனால் தேவியின் குரல் தெளிவாகக் கேட்டது. எல்லோரும் கிணற்றடியை நோக்கி ஓடினார்கள். தங்கமும், மீனாட்சியும் ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார்கள். செல்லம் விம்மினாள். தேவனைத் தொடர்ந்து இளங்கோவும் கிணற்றுக்குள் இறங்கினான். கோபாலே கற்சிலை போல நின்றான்.


பக்கம் 166

நிலவு மறையவில்லை. அந்த வேதனைக் காட்சியைக் காண்பதில் அதற்கும் மகிழ்ச்சியா? இல்லை - தேவியின் முகத்தைத் தேவன் பார்க்க வேண்டுமென்று ஒளி கொடுக்கிறதா? கிணற்று நீர் - அதற்குள் அமிழ்ந்து கொண்டிருக்கிறது அந்த இன்பநாதம். தேவன் தேவியைத் தன் கரங்களில் அள்ளிக் கொண்டான். அவள் நெற்றியில் இப்பொழுது கரைவது குங்குமமல்ல. இரத்தம். அந்த இரத்தத்தைக் கரைப்பது தண்ணீர் மட்டுமல்ல, அவன் கண்ணீரும் கூட. தேவி தன் விழிகளால் ஏதோ சொல்லத் துடிக்கிறாள். அந்தப் பார்வை, ´ஓ... தேவா, என்னை வாழ வைச்சிட்டாய்´ என்கிறதா? இல்லை, ´தேவா, இந்த உலகம் ஏன் என்னை வாழவிடவில்லை?´ என்று ஏக்கத்தோடு கேட்கிறதா? தேவனின் கண்களில் திகில் பரவுகிறது. அவன் முடியும் வரை அவளைத் தன் மார்போடு சேர்த்துக் கொள்கிறான். ´தேவி, என்னைப் பிரிந்து போய் விடாதே.´ எனும் அவன் இதயத்தின் ஒலி அவளுக்கும் கேட்கட்டும் என்றா? இல்லை அவன் இதயத் துடிப்பாவது அவள் இருதயத்தை இயங்க வைக்காதா என்ற ஏக்கத்திலா? தேவி அவனையே பார்க்கிறாள். அந்தப் பார்வை... அந்தப் பார்வை... அப்படியே நிலைத்து விடுகிறது.

"தே... வி....."

தேவனின் குரல் கிணற்றுச் சுவரெங்கும் மோதி எதிரொலிக்கிறது. பல இதயச் சுவர்களிலே மோதிப் பரிதாபமாக ஒலிக்கிறது. கிணற்றின் மேலிருந்து கண்ணீர்த் துளிகள் அவன் மேனியில் விழுந்து நனைக்கின்றன. அதைச் சகிக்க முடியாது நிலவு கருமேகங்களிடையே மறைந்து கொண்டது.

முற்றும்.

No comments: